இன்றைய உலகளாவிய இறால் வளர்ப்பில், வெள்ளை மலநோய், கடும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் இறால்கள் வெளியேற்றும் வெண்கழிவு, குளத்திலேயே மிதக்கும் நிலை ஏற்படுகிறது. 2010-ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இந்நோயால், இறால் உற்பத்தியில் 10-15 சதவீத இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நோய், பினேயஸ் வன்னாமி, பினேயஸ் மோனோடான் போன்ற இறால் வகைகளைத் தாக்குகிறது. இந்தியாவில் 2015-ஆம் ஆண்டிலிருந்து, பினேயஸ் வளர்ப்புக் குளங்களில் இதன் தாக்கம் தீவிரமாகி வருகிறது. இந்நோயுள்ள குளங்களில் வாழும் இறால்களில் 20-30 சதவீத இறால்கள் இறந்து போவதால், மிதமானது முதல் கடும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
நோய்க் காரணிகள்
வெள்ளை மலநோயின் அறிகுறிகள்; கிரிகரின் புழுக்கள், விப்ரியோஸ், திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி கட்டமைப்புகள், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி, பாக்டீரியா, பூஞ்சை, பாசி போன்ற பல்வேறு காரணிகளுடன் தொடர்புள்ளதாகப் பதிவாகியுள்ளன.
இருப்பினும், வெள்ளை மலநோய்; அடர்த்தியான, முதிர்ந்த என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி என்னும் ஒட்டுண்ணியின் வித்துகள், திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி அமைப்புகள், மந்தமான எபிதீலியல் செல்கள், குடல் கோழைத் திரவம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இவை அனைத்தும், தண்டு வடிவ பாக்டீரியாக்களுடன் இணைந்த நிலையில் உள்ளன.
திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி அமைப்புகள்; கிரிகரின் புழுக்களைப் போல் இருக்கின்றன. இவை, ஈரல்- கணையத் திசுவில் உள்ள எபிதீலியல் செல்களால் மைக்ரோவில்லிகளில் ஏற்படும் கூட்டுக் கட்டமைப்புகள் ஆகும். திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி கட்டமைப்புகளில், உள்ளணுக் கட்டமைப்பு எதுவுமில்லை.
மேலும், இவை கருக்களையும், மைட்டோ கான்ட்ரியாவையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன், எந்தவொரு இயக்கமும் காணப்படுவதில்லை. அந்தப் புழு வடிவங்கள், கிரிகரின் புழுக்கள் அல்ல.
கடந்த காலத்தில் திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட இந்த மைக்ரோவில்லி கட்டமைப்புகள் கடுமையாக இருந்த போது, வெள்ளை மலநோய் ஏற்படக் காரணமாக இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், அண்மையில் நடைபெற்ற ஆய்வுகளில், என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி மற்றும் வெள்ளை மலநோய்க்கு இடையேயுள்ள உறுதியான மற்றும் முக்கியத் தொடர்புகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இறால் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட, வெள்ளை மலநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து இறால்கள் மற்றும் அவற்றின் வெண்கழிவில், என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி இருப்பது கண்டறியப்பட்டது.
அதே நேரத்தில், நோய்க் கிருமிகளான என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி, விப்ரியோ பராஹீமோ லிட்டிகஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தொற்றினால், வெள்ளை மலநோய் ஆய்வகச் சூழலில் வெற்றிகரமாக இறால்களில் உருவாக்கப்பட்டது.
மேலும், பினேயஸ் வன்னாமி இறால் வளர்ப்புப் பண்ணைகளில், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி மற்றும் வெள்ளை மலநோயின் சாத்தியக் கூறுகளாக, என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி உடன் இணைந்து, குறிப்பிட்ட புரோபியோனிஜீனியம், குறிப்பிட்ட பாக்டீரியா ஆகியன பதிவாகியுள்ளன.
வெள்ளை மலநோயின் அறிகுறி மிகவும் சிக்கலானது. இந்நோய், வயிற்றுப்போக்கு நோயின் அறிகுறிகளை ஒத்துள்ளது. மைக்ரோஸ்போரிடியன் வகை ஒட்டுண்ணிகள்; மனிதர்கள், பன்றிகள், மாடுகள் மற்றும் தேனீக்களில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடியவை. எனவே, வெள்ளை மலநோய் என்பது, என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோ பினாயி மற்றும் விப்ரியோ வகை பாக்டீரியாக்களுடன் இணைந்து ஏற்படும் ஒரு நோய் அறிகுறியாகும்.
நோய் அறிகுறிகள்
இந்த நோயின் பாதிப்புகள், குளங்களில் இறால் வளர்ப்பை ஆரம்பித்த 20-30 நாட்களில் வெளிப்படும். பாதிக்கப்பட்ட இறால்களில் வெள்ளை அல்லது தங்கப் பழுப்பு நிறக் குடல், வெள்ளை மலக்கழிவை வெளியேற்றுதல், உண்ணும் தன்மை குறைதல், வளர்ச்சி மந்தமாதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட இறால் குளங்களில் நீரின் மேற்பரப்பில், 10 முதல் 45 நாட்கள் வரை அல்லது அதற்கு மேலும் வெள்ளை மலக்கழிவு மிதக்கும்.
நோயியல் நிலை
நோயுற்ற இறால்களின் ஈரல்- கணையத் திசு அல்லது செரிமானச் சுரப்பியை எடுத்து திசு நசுக்கித் தடவு முறையில், நுண்ணோக்கியில் குறைந்த உருப்பெருக்கத்தில் ஆய்வு செய்த போது, மைக்ரோவில்லி அமைப்புகள் மாற்றமடைந்து, திரட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.
இதுவே, நுண்ணோக்கியின் அதிக உருப்பெருக்கத்தில், ஈரல்- கணையத் திசுக்களின் உட்பகுதிக் குழாய்களில் உள்ள திரட்டப்பட்ட உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி அமைப்புகளுக்குள்ளும், அவற்றைச் சுற்றிலும், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி வித்துகள் அடர்த்தியாகக் காணப்படும்.
மேலும், ஈரல்- கணையத் திசுவை, ஹெமாடாக்சிலின், ஈயோசின் போன்ற நிறமூட்டி வேதிப்பொருள்களைக் கொண்டு, திசுவியல் செய்தல் மூலம், திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோ வில்லிகளின் குறுக்குப் பகுப்பாய்வுகள் தென்படும்.
மேலும், கால்கோப்ளுர்; வெள்ளை நிறமூட்டி வேதிப்பொருள்களைக் கொண்டு திசுவியல் செய்தல் மூலமும், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி வித்துகள் அடர்த்தியாகத் திரட்டி உருமாற்றம் செய்யப்பட்ட மைக்ரோவில்லி அமைப்புகளில் உட்புறம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இருப்பது தென்படுகிறது.
மேலாண்மை
வெள்ளை மலநோய்ப் பாதிப்புள்ள காலத்தில், இறால் வளர்ப்புக் குளத்தில் தீவன அளவைச் சீராகக் குறைப்பது முக்கியமாகும். மேலும், குளத்தில் மிதக்கும் வெள்ளை மலக்கழிவைத் தினமும் முறையாக அகற்றினால், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.
இறால்களின் தீவனத்தில், ஈரல்- கணையத் திசுக்கள் மீண்டும் உருவாகவும், எபிதீலியல் செல்கள் பெருகவும் உதவும் வகையில், சத்து மருந்துகள் அல்லது சத்துணவுகளைச் சேர்ப்பது; வெள்ளை மலநோயால் பாதிக்கப்பட்ட இறால்களின் உடல் நிலை சீராகி, நோயிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது.
வெள்ளை மலநோய் உருவாவதில், கிரிகரின் புழுக்களுக்குப் பங்கில்லை என்பதால், கிரிகரினுக்கு எதிரான சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி நோய் என்பது, வெள்ளை மலநோய் அறிகுறிகளுடன் முக்கியத் தொடர்புள்ளதாகவும், அதை உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. எனவே, என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயிக்கு எதிராக எடுக்கும் செயல்களை, வெள்ளை மலநோயால் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் மேற்கொள்ளலாம்.
மேலும், இறால் குஞ்சுப் பொரிப்பகத் தொட்டிகள், குழாய்கள் மற்றும் உபகரணங்களை, 2.5 சதவீத சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் சுத்திகரித்தால், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோ பினாயியை நீக்கலாம்.
குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள இறால்கள் அடை காக்கும் தொட்டிகளில், என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி தொற்றில்லாத தீவனங்கள் மற்றும் உயிர் உணவான பாலிகீட் புழுக்களை, -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 2 மணி நேரம் பதனம் செய்த பிறகு, உணவைச் சூடாக்கும் முறையில் அல்லது காமா கதிர்வீச்சு செய்த பிறகு பயன்படுத்தலாம்.
இறால் வளர்ப்புக் குளத்தில், என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி தொற்றில்லாத இறால் குஞ்சுகளை இருப்பு வைக்க வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும், குளத்தை முறையாக உலர்த்தி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.
குளத்தில், எக்டருக்கு 6 டன் கால்சியம் ஆக்சைடு அல்லது சுட்ட சுண்ணாம்பு வீதம் இட்டு, அதை, 10-12 செ.மீ. ஆழத்தில் உழ வேண்டும். பிறகு, சுண்ணாம்பின் செயலைத் தூண்டும் வகையில், குளத்தை ஈரமாக்க வேண்டும்.
குளத்தின் அடிப்பகுதி மண்ணில் உள்ள என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி வித்துகளைச் செயலிழக்கச் செய்ய, ஒரு லிட்டர் நீருக்கு 15 மி.கி. பொட்டாசியம் பெர்மாங்கனேட், 40 மி.கி. குளோரின் வீதம் பயன்படுத்தலாம்.
இறால் வளர்ப்பில் வெள்ளை மலநோய், பெருந்தடையாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இறால்கள், வெள்ளை மலக்கழிவை வெளியேற்றுவதால், இது, வெள்ளை மலநோய் எனப்படுகிறது. வெள்ளை மலநோய் உள்ள நாடுகளில்; என்டிரோ சைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி மற்றும் விப்ரியோ வகை பாக்டீரியாக்கள் அல்லது அடையாளம் தெரியாத நோய்க் காரணிகளின் சேர்க்கையால் ஏற்படும் நோய் அறிகுறியாக, இந்நோய் கருதப்படுகிறது.
அதன் விளைவாக, மிதக்கும் வெள்ளை மலக்கழிவு, இறால் வளர்ப்புக் குளங்களில் என்டிரோசைட்டோசூன் ஹெப்பட்டோபினாயி தொற்றுக்கான முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. வெள்ளை மலநோயைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறை இதுவரை அறியப்படவில்லை. எனவே, வெள்ளை மலநோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுதல் அவசியமாகும்.

முனைவர் தே.கவியரசு,
வே.சந்தியா, சு.சரவணன், செ.பொற்செல்வன், நீர்வாழ் உயிரின மேலாண்மைத் துறை, டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி – 601 204. ர.சோமு சுந்தர் லிங்கம், வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், பாரூர், கிருஷ்ணகிரி – 635 201.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


