My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பது எப்படி?

றிவியல் முறையில் இயங்கும் பால் பண்ணைகளில், கறவை மாடுகளுக்கு அடர் தீவனம் அளிப்பதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. இதுவே, கிராமப்புறங்களில் பெரும் சவாலாக இருக்கும். எனவே, பின்வரும் முறைகளைப் பின்பற்றி, மாட்டின் பால் உற்பத்தி மற்றும் பருவ நிலைக்கு ஏற்றவாறு அடர் தீவனத்தை அளிக்கலாம். இதை, கட்டை விரல் வழிகாட்டி (Thumb rule method) என்பார்கள்.

உடல் பராமரிப்புக்கான அடர் தீவனம்

நாம் வேலை செய்தாலும், செய்யவில்லை என்றாலும், உடல் பராமரிப்பு மற்றும் உயிர் வாழ்வதற்கு உண்பதைப் போல, மாடுகள் பால் கறந்தாலும், கறக்கவில்லை என்றாலும், அவற்றின் உடல் பராமரிப்புக்கு, அவற்றின் உடல் எடையைப் பொறுத்து, தினமும் 1-1.5 கிலோ அடர் தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.

பால் உற்பத்திக்கான அடர் தீவனம்

தினமும் 2.5 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு, அதன் உடல் பராமரிப்புக்கு என, 1.5 கிலோ அடர் தீவனத்தை மட்டும் கொடுத்தால் போதும். ஆனால், 2.5 லிட்டருக்கு மேல் கறக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும், 400 கிராம் அடர் தீவனம் வீதம் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுகள்

தினமும் 5 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 5 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 2 கிலோ என, மொத்தம் 3 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தினமும் 7.5 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 7.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 3 கிலோ என, மொத்தம் 4 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

தினமும் 10 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 10 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 4 கிலோ என, மொத்தம் 5 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

தினமும் 12.5 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 12.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 5 கிலோ என, மொத்தம் 6 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

தினமும் 15 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 15 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 6 கிலோ என, மொத்தம் 7 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

தினமும் 17.5 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 17.5 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 7 கிலோ என, மொத்தம் 8 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

தினமும் 20 லிட்டர் கறக்கும் மாட்டுக்கு: உடல் பராமரிப்புக்கு 1 கிலோ, 20 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் வீதம் 8 கிலோ என, மொத்தம் 9 கிலோ அடர் தீவனம் தரப்பட வேண்டும்.

கறவை மாடுகளின் பல்வேறு பருவங்களில் தர வேண்டிய பசுந்தீவன வகைகள்

கன்றுக்கு: புல்வகைத் தீவனம் 6-8 கிலோ, பயறுவகைத் தீவனம் 1-2 கிலோ, மரவகைத் தீவனம் 0.5-1 கிலோ, உலர் தீவனம் 2-3 கிலோ.

கிடேரிக்கு: புல்வகைத் தீவனம் 10-12 கிலோ, பயறுவகைத் தீவனம் 3-4 கிலோ, மரவகைத் தீவனம் 1-2 கிலோ, உலர் தீவனம் 3-5 கிலோ.

கன்று ஈன்ற மாட்டுக்கு: புல்வகைத் தீவனம் 15-17 கிலோ, பயறுவகைத் தீவனம் 4-5 கிலோ, மரவகைத் தீவனம் 1-3 கிலோ, உலர் தீவனம் 5-6 கிலோ.

பால் கறக்கும் சினை மாட்டுக்கு: புல்வகைத் தீவனம் 10-12 கிலோ, பயறுவகைத் தீவனம் 4-5 கிலோ, மரவகைத் தீவனம் 1-3 கிலோ, உலர் தீவனம் 5-6 கிலோ.

பால் வற்றிய சினை மாட்டுக்கு: புல்வகைத் தீவனம் 9-10 கிலோ, பயறுவகைத் தீவனம் 2-3 கிலோ, மரவகைத் தீவனம் 1 கிலோ, உலர் தீவனம் 5-6 கிலோ.

குறிப்பு: கம்பு நேப்பியர் புல் வகைகள், கினியாப்புல், நீர்ப்புல் போன்றவை புல்வகைத் தீவனமாகும். வேலிமசால், முயல் மசால், குதிரை மசால் போன்றவை பயறுவகைத் தீவனமாகும். அகத்தி, சவுண்டல் போன்றவை மரவகைத் தீவனமாகும்.

அடர் தீவனத்தை மாற்றும் போது கடைப்பிடிக்க வேண்டியவை

அடர் தீவனப் பயன்பாட்டில் முக்கியமானது, தீவனத்தை மாற்றுவது. புதிய அடர் தீவனம் ஒன்றைக் கறவை மாடுகளுக்குத் தர வேண்டுமெனில், முன்பு கொடுத்த தீவனத்தைப் படிப்படியாகக் குறைத்து, புதிய தீவனத்தைப் படிப்படியாகக் கூட்ட வேண்டும். இப்படி, முழுமையாகப் புதிய தீவனத்துக்கு மாறிடக் குறைந்தது ஒரு வாரமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அப்போது தான் மாடுகளுக்குச் செரிமானச் சிக்கல் ஏற்படாது.

மாட்டின் பால் உற்பத்தியை அறிவதற்கான உத்திகள்

ஒரு மாடு ஒரு நாளைக்கு 8 லிட்டர் பாலைக் கறக்கும் எனில், அந்த மாட்டுக்கு வழக்கமாகக் கொடுக்கும் தீவனத்துடன், தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 500 கிராம் தீவனத்தைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்.

பால் உற்பத்தி உயரும் நிலையில், மறுபடியும் 500 கிராம் தீவனத்தைக் கூட்டிக் கொடுக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்தால், ஒரு நிலையில் பாலின் அளவு கூடாமல் அதே அளவில் இருக்கும். இதுதான் அந்த மாட்டின் அதிகப்படியான பால் உற்பத்தி ஆகும். இந்த முறையை அடுத்த ஈற்றிலும் பின்பற்ற வேண்டும். ஏனெனில், ஈற்றுக்கு ஈற்று பால் உற்பத்தி வேறுபடும்.   

தவிடு மற்றும் அடர் தீவனம் – ஓர் ஒப்பீடு

கிராமப்புறங்களில் கறவை மாடுகளுக்குத் தவிடு வகைகளை அதிகமாக அளித்தாலும், பால் உற்பத்திக் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம், கறவை மாடுகளுக்கு வேண்டிய சத்துகள் தவிடு வகைகளில் இல்லாமையே. இதனால், பால் உற்பத்திக் குறைவதுடன், சினைப்பிடிப்பில் பிரச்சனையும், நோய்கள் வருவதற்கான சூழலும் ஏற்படும். மேலும், அடுத்த ஈற்றில் பால் உற்பத்தியும் குறைய நேரிடும். இதனால், உற்பத்திச் செலவு கூடும்.

கடைகளில் இப்போது கிடைக்கும் 20 சதவீதப் புரதம் மற்றும் 2400 கிலோ/கலோரி எரிசக்தியுள்ள, ஒரு கிலோ அடர் தீவனத்தின் தோராய விலை 24 ரூபாய். கோதுமைத் தவிட்டின் விலையும் 24 ரூபாய் தான். இந்தத் தவிட்டில் 12-14 சதவீதப் புரதமும், 1200-1400 கிலோ/கலோரி எரிசக்தியும் மட்டுமே இருக்கும். இரண்டு தீவனங்களும் ஒரே விலைதான் என்றாலும், இவற்றிலுள்ள சத்துகளின் அளவை, பண்ணையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தவிடு வகைகளைப் பால் மாடுகளுக்கு அளித்தால், உற்பத்திச் செலவு கூடும். ஆனால், உற்பத்திக் குறைந்து விடும். அடர் தீவனத்தில் தவிடும் இருப்பதால், அடர் தீவனத்தைப் பயன்படுத்தும் போது, தவிட்டைத் தனியாகத் தரவேண்டிய அவசியமில்லை.

தீவனம் இடும்போது பின்பற்ற வேண்டியவை

கறவை மாடுகளுக்குத் தர வேண்டிய அடர் தீவனத்தை, இரண்டு பாகமாகப் பிரித்து, காலையிலும், மாலையிலும், பால் கறவைக்கு முன் கொடுக்க வேண்டும்.

அதிகப் பால் கறவையில் உள்ள மாடுகளுக்குத் தினமும் 7 கிலோவுக்கு மேல் அடர் தீவனத்தைத் தருவதாக இருந்தால், அதை மூன்றாகப் பிரித்து மூன்று நேரம் கொடுக்க வேண்டும்.

குச்சித் தீவனத்தை, காய்ந்த நிலையில் தருவதே சிறந்த முறையாகும். நீரில் ஊற வைக்க வேண்டியதில்லை. குச்சித் தீவனத்தை அளிக்கும் போது, கறவை மாடுகளுக்கு அருகிலேயே சுத்தமான குடிநீரும் இருக்க வேண்டும்.

பண்ணையில், குறிப்பிட்ட தீவன முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.  கறவை மாடுகளுக்கு, முதலில் கலப்புத் தீவனம், அடுத்து, பசுந்தீவனம், அதற்குப் பிறகு வைக்கோல் அல்லது காய்ந்த புல் தரப்பட வேண்டும்.

தவிட்டைப் போலக் கிடைக்கும் அடர் தீவனத்தை (Mash) ஊற வைத்து அல்லது அளவாக நீரைச் சேர்த்துக் கொடுக்கலாம். தீவனத் தட்டைகளைத் துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும்.

அளிக்கப்படும் தீவன வகைகளில் திடீரென்று மாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சமையலில் மிஞ்சிய காய்கறிகள் அல்லது கழிவுகளை உடனே கறவை மாடுகளுக்கு அளித்து விட வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு மேலான பழைய சாதம் மற்றும் புளித்த மாவை, மாடுகளுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அடிப்படையாக வைத்து, அடர் தீவனத்தை அளிப்பது, பால் உற்பத்தியின் நிலைத் தன்மையை உறுதி செய்யும். மேலும், சினைப் பிடிப்பையும், கறவை மாட்டின் நலத்தையும் மேம்படுத்த உதவும்.


முனைவர் பி.முரளி,

முனைவர் சு.சிவராமன், முனைவர் மா.வெங்கடேசன், முனைவர் ச.விக்னேஸ்வரன், கால்நடைச் சிகிச்சை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • ஆடுகளுக்குத் தீமை செய்யும் பார்த்தீனியம்!

  • கோழிப் பண்ணைக்கான இடத்தேர்வும் பண்ணை அமைப்பும்!

  • வளர்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • முட்டைக்கோழிப் பராமரிப்பு முறைகள்!

  • கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

  • கோடையில் கோழிகள் பராமரிப்பு!

  • கோடையில் பன்றிகள் பராமரிப்பு!

  • கோடையில் ஆடுகள் பராமரிப்பு

  • கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!