கால்நடை வளர்ப்பின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளில், தரமான பசுந்தீவன உற்பத்தியே முதன்மையானது. கால்நடைகளின் உடல் நலம், இனப்பெருக்கத் திறன், பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, பண்ணைப் பொருளாதார இலாபம் ஆகிய அனைத்தும், தரமான மற்றும் சீரான தீவன விநியோகத்தைச் சார்ந்தே அமைகின்றன.
இந்தியா, உலகிலேயே அதிகளவில் கால்நடை வளத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தரமான பசுந்தீவன உற்பத்தி இன்னும் போதியளவில் இல்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் கால்நடை வளர்ப்பு, விவசாயத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வது, விவசாயிகளின் முக்கியச் சவாலாக உள்ளது.
தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கே, பசு, எருமை, ஆடு, செம்மறியாடு மற்றும் கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுவதால், ஆண்டுதோறும் பசுந்தீவனத் தேவையும் அதிகரித்து வருகிறது.
ஆனால், பருவமழை மாற்றம், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், வறட்சி, தொழிலாளர் பற்றாக்குறை, அதிகரித்து வரும் பாசனச் செலவுகள் போன்றவற்றால், பாரம்பரியப் பாசன முறைகளில் பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. இதனால், குறைந்த நீரில் அதிகத் தீவன உற்பத்தி என்னும் இலக்கை அடைய, நவீன நீர் மேலாண்மைத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில், மழைத் துப்பாக்கி (Rain Gun) என்னும் பாசன முறை, பசுந்தீவன உற்பத்தியில் புரட்சிமிகு தொழில் நுட்பமாக உருவெடுத்து உள்ளது. மழைத் துப்பாக்கி என்பது, அதிக அழுத்தத்தில், மழை பெய்வதைப் போல, பரந்த பரப்பில் நீரைச் சமமாகத் தெளிக்கும், நவீனப் பாசன முறையாகும்.
பொதுவாக, 25 முதல் 60 மீட்டர் வரை நீரைத் தெளிக்கும் திறனுள்ள இந்தப் பாசன முறை, கோ.4, கோ.5 நேப்பியர் புல், கோ.எஃப்.எஸ்.29 தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம், தீவனச்சோளம், கினியாப்புல், வேலிமசால் மற்றும் பல்வேறு பசுந்தீவனப் பயிர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
அதிகப் பரப்பிலான தீவனப் பண்ணைகள், கால்நடைப் பண்ணைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகளில், இந்தப் பாசன முறை சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
பாரம்பரியப் பாத்தி முறை மற்றும் கால்வாய்ப் பாசன முறையில் அதிகளவில் நீர் வீணாகிறது. நிலத்தின் ஒரு பகுதியில் நீர்த்தேங்கி நிற்கும் நிலையில், மற்றொரு பகுதியில் போதியளவில் நீர்க் கிடைக்காமல் போகிறது. இதனால், பயிர்களின் வளர்ச்சி, சீரற்றதாக அமைகிறது. மேலும், அதிகளவில் களைகள் வளர்வதாலும், உரச் சத்திழப்பு ஏற்படுவதாலும், உற்பத்திச் செலவு கூடுகிறது.
மண்ணரிப்பும், நீர்த் தேங்குதலும், பயிர்களின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்கின்றன. இதற்கு மாறாக, மழைத் துப்பாக்கிப் பாசனத்தில், நீரானது மழையைப் போலச் சீராகப் பரவுவதால், அனைத்துப் பயிர்களின் வேர்களுக்கும் தேவையான நீர்க் கிடைக்கும். இதனால், நீரின் பயன்பாட்டுத் திறன் மிகுவதோடு, களைகள் கட்டுப்படும், மண்வளம் காக்கப்படும்.
தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக, நீர்ச்சிக்கன வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2025-26-ஆம் ஆண்டுக்கான வேளாண்மைக் கொள்கை விளக்கக் குறிப்பில், நீர்வளங்களைத் திறமையாகப் பயன்படுத்தல், நுண்ணீர்ப் பாசன முறைகளை விரிவுப்படுத்தல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, வேளாண்மையை மாற்றியமைத்தல் ஆகியன, அரசின் முக்கிய முன்னுரிமைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேளாண்மைப் பொறியியல் துறையும், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையும் (TANHODA) இணைந்து, பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா (Pradhan Mantri Krishi Sinchayee Yojana- PMKSY) என்னும் திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நீர்த்துளியிலும் அதிக மகசூல் (Per Drop More Crop) என்னும் நுண்ணீர்ப் பாசன முறையை, மாநிலம் முழுவதும் விரிவாக்கி வருகின்றன.
இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒவ்வொரு துளி நீரையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தி, நீரின் பயன்பாட்டுத் திறனை உயர்த்தி, அதிக மகசூலைப் பெறுவதாகும். இத்திட்டத்தின் கீழ், சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம், மழைத் துப்பாக்கிப் பாசனம் போன்ற, நவீனப் பாசன முறைகளை அமைக்க, விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பாசன முறைகள் தரமாக அமைக்கப்படுவதை உறுதி செய்ய, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மத்திய அரசின் ஒவ்வொரு நீர்த்துளியிலும் அதிக மகசூல் (Per Drop More Crop- PDMC) திட்டமும், நீர்ச்சிக்கன வேளாண்மையை, தேசியளவில் ஊக்குவித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான எக்டர் நிலப்பரப்பை, நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நீர்ப் பற்றாக்குறை அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், உரத்தை நீரின் மூலம் வழங்கும் உரநீர்ப் பாசனமுறை (Fertigation), சூரிய ஆற்றல் சார்ந்த பாசன முறை மற்றும் துல்லிய நீர் மேலாண்மை முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இத்தகைய முயற்சிகள், தமிழ்நாட்டில் நிலையான வேளாண்மையை உருவாக்குவதில், குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றன.
மழைத் துப்பாக்கித் தொழில் நுட்பச் செயல் திறனை அறிவியல் சார்ந்து உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் (TANUVAS) காட்டுப்பாக்கம் வளாகத்தில், வேலிமசால் தீவனப் பயிரில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், மழைத் துப்பாக்கிப் பாசனம், கால்வாய்ப் பாசனம், பாத்திப் பாசனம் ஆகிய முறைகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், மழைத்துப்பாக்கிப் பாசன முறையில், நீரின் பயன்பாட்டுத் திறன் 35 சதவீதம் வரை கூடியதையும், நீர்ப் பயன்பாட்டுச் செயல் திறன் 88 சதவீதமாக இருந்ததையும் அறிய முடிந்தது. மேலும், ஆண்டுக்கு எக்டருக்கு 112 டன் பசுந்தீவன மகசூல் கிடைத்தது.
இந்த மகசூல், பாத்திப் பாசனத்தை விட 3.2 சதவீதமும், கால்வாய்ப் பாசனத்தை விட 1.52 சதவீதமும் அதிகமாகும். அதோடு, தொழிலாளர் தேவை குறைதல், களைகள் கட்டுப்படுதல், உர இழப்புக் குறைதல், நீர்ச் சிக்கனம் போன்ற, பல்வேறு கூடுதல் நன்மைகளும் பதிவாகியுள்ளன.
இந்த ஆய்வு, மழைத் துப்பாக்கிப் பாசன முறையின் செலவு- பயன் விகிதம் 1.81 ஆக இருந்தது என்பதையும், இந்தப் பாசன முறை, பொருளாதார நோக்கிலும் இலாபமிக்கது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
சமீபத்திய ஆராய்ச்சிகளும், நுண்ணீர்ப் பாசனத் தொழில் நுட்பம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், நீரின் பயன்பாட்டுத் திறனையும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதாகக் காட்டுகின்றன.
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ், நுண்ணீர்ப் பாசனத்தைப் பயன்படுத்திய பண்ணைகளில், நீர்ச்சேமிப்பு மட்டுமின்றி, பயிர் உற்பத்தி, உரப்பயன்பாட்டுத் திறன் மற்றும் மொத்த உற்பத்தித் திறன் கூடியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வு, நுண்ணீர்ப் பாசனம் தான் என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மழைத் துப்பாக்கி அமைப்பைத் திறம்பட பயன்படுத்த, சில தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றுவது அவசியம். பொதுவாக, 3-5 கிலோ/செ.மீ.² அழுத்தத்தில், கருவியை இயக்க வேண்டும். அதிகமாகக் காற்று வீசும் போது, பாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். காலையில் அல்லது மாலையில் பாசனம் செய்தால், நீர் ஆவியாவதைக் குறைக்கலாம்.
வடிகட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், நாசில்களைப் பராமரித்தல் மற்றும் தேவையான அழுத்தத்தைப் பராமரித்தல் மூலம், இந்த அமைப்பின் நீண்டகால செயல் திறனை உறுதி செய்யலாம். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, 5-8 நாட்கள் இடைவெளியில் பாசனம் செய்வது, பெரும்பாலான தீவனப் பயிர்களுக்கு ஏற்றதாகும்.
இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு, மண் ஈரப்பத உணரிகள், தானியங்கி வால்வுகள் மற்றும் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் பம்புகள் போன்றவற்றுடன், மழைத் துப்பாக்கிப் பாசன அமைப்பை ஒருங்கிணைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் இணையவழிப் பொருள்கள் (Internet of Things) அடிப்படையிலான துல்லியப் பாசன அமைப்புகள், தீவனப் பண்ணைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் என்பது, வேளாண்மையின் மிகவும் மதிப்புமிக்க வளமாகும். ஒவ்வொரு துளி நீரையும் சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிகளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதே, நிலையான கால்நடை வளர்ப்பின் அடிப்படையாகும். அந்த நோக்கில், மழைத் துப்பாக்கிப் பாசனம் என்பது, சாதாரணத் தெளிப்புக் கருவியல்ல.
அது, நீர்வளத்தைப் பாதுகாக்கும், உற்பத்திச் செலவைக் குறைக்கும், பசுந்தீவன மகசூலைப் பெருக்கும், தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் மற்றும் இலாபமிகு கால்நடை வளர்ப்பை உறுதி செய்யும், அறிவியல் சார்ந்த நவீனத் தொழில் நுட்பமாகும்.
தமிழ்நாடு அரசு நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவித்து வரும் இன்றைய சூழலில், அரசு மானியத் திட்டங்களைப் பயன்படுத்தி, மழைத் துப்பாக்கிப் பாசன முறையை, விவசாயிகள் தங்களின் தீவனப் பண்ணைகளில் அமைப்பதன் மூலம், நீர்வளத்தைப் பாதுகாத்து, ஆண்டு முழுவதும் தரமான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து, நிலையான மற்றும் இலாபகரமான கால்நடை வளர்ப்பை நோக்கி முன்னேற முடியும்.

முனைவர் மு.வெங்கிடசாமி,
உதவிப் பேராசிரியர், முனைவர் நி.பர்கத்துல்லா, கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


