My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை! காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை https://pachaiboomi.net/680705-2/

கடந்த சில ஆண்டுகளாக, கோடைக்கால வெப்பத் தாக்கம் (Heat Stress)  அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகள் (Heat Waves), நீண்டகால வறட்சி, காற்றின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற, காலநிலை மாற்றத்தின் விளைவுகள்; மனிதர்களை மட்டுமன்றி, கால்நடை மற்றும் பறவை வளர்ப்புத் தொழிலையும் பெரியளவில் பாதித்து வருகின்றன.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (ICAR) தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. வெப்ப அழுத்தத்தை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ற மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவது மட்டுமே, எதிர்காலத்தில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும்.

இந்தச் சூழலில், குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரக்கூடிய மாற்றுத் தொழிலாக காடை (Coturnix japonica) வளர்ப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. வேகமான வளர்ச்சி, குறைந்த தீவனத் தேவை, குறைந்த இடவசதி, அதிக இனப்பெருக்கத் திறன் மற்றும் விரைவான வருமானம் ஆகியன, காடை வளர்ப்பின் சிறப்புகளாகும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஒருநாள் வயதில் வெறும் 8-9 கிராம் எடையுள்ள காடைக்குஞ்சு, 5-6 வாரங்களில் 180-200 கிராம் எடையை எட்டுவதோடு, உச்சபட்சமாக 200-250 கிராம் எடையை அடையும். ஆண் காடைகளின் எடையை விட, பெண் காடைகளின் உடல் எடை சற்றுக் கூடுதலாக இருக்கும்.

மேலும், 6-7 வாரங்களிலேயே முட்டையிடத் தொடங்கும் பெண் காடைகள் ஆண்டுக்கு  280-300 முட்டைகள் வரை இடும். இந்த அதிக உற்பத்தித் திறனைத் தொடர்ந்து பராமரிக்க, காடைகளின் உடலியல் தேவைகளைப் புரிந்து, அவற்றுக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.

காடை வளர்ப்பில், காடைகள் பிறந்த முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமான வளர்ச்சிக் காலமாகும். இந்தக் காலத்தில் 37-38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், 60-65 சதவீதச் சார்பு ஈரப்பதமும் பராமரிக்கப்பட வேண்டும். அதன் பிறகு, வளர்ச்சிப் பருவம் மற்றும் முட்டையிடும் பருவத்தில், 21-22 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், 55-60 சதவீதச் சார்பு ஈரப்பதமும் இருக்க வேண்டும்.

ஒரு குஞ்சுக்கு ஆரம்ப நிலையில் 75 சதுர செ.மீ., வளர்ச்சிக் கட்டத்தில் 110 சதுர செ.மீ., முட்டையிடும் பருவத்தில் 150 சதுர செ.மீ. தரைப்பரப்பு வழங்கப்பட வேண்டும். ஆரம்பக் கட்டத் தீவனத்தில், 25-27 சதம் புரதம், 2,750 கலோரி/கிலோ மாற்று சக்தி (ME), 1.0 சதம் கால்சியம், கிடைக்கும் பாஸ்பரஸ் 0.45 சதம் இருக்க வேண்டும்.

வளர்ச்சிக் கட்டத் தீவனத்தில் 22-24 சதம் புரதம் வழங்கப்பட வேண்டும். முட்டையிடும் பருவத்தில், 20-22 சதம் புரதம், 3.0 சதம் கால்சியமுள்ள தீவனம் வழங்கப்படுவது அவசியம். ஒரு காடைக்குத் தினமும் 25-30 கிராம் தீவனம் மற்றும் எப்போதும் சுத்தமான குடிநீர்க் கிடைக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வளர்ப்புக் கொட்டிலை, போதிய காற்றோட்டம், நல்ல வடிகால் வசதி மற்றும் நேரடி வெய்யில் தாக்கம் குறைவாக இருக்கும் வகையில், கிழக்கு-மேற்குத் திசையில்,  வடிவமைக்க வேண்டும். இப்படி வளர்க்கப்படும் காடைகளில் தீவன மாற்றுத்திறன் கூடுவதுடன், வளர்ச்சி வேகம், இனப்பெருக்கம் மற்றும் முட்டை உற்பத்தியும் உயரும்.

ஆனால், இத்தகைய சூழ்நிலைகளில் வளர்க்கப்பட வேண்டிய காடைகள், கோடையில் வெப்பநிலை கூடும்போது, மிக விரைவாக வெப்ப அழுத்தத்துக்கு ஆளாகின்றன. காடைகளின் இயல்பான உடல் வெப்பநிலை, 41-42 டிகிரி செல்சியசில் இருக்கும். அதிக வளர்சிதை மாற்றம் (High Metabolic Rate) காரணமாக உடலுக்குள் அதிக வெப்பம் உருவாகிறது.

மனிதர்களைப் போல வியர்வைச் சுரப்பிகள் இல்லாததால், காடைகள் உடல் வெப்பத்தை வெளியேற்றுவதற்கு, மூச்சுவிடும் வேகத்தையே (Panting) நம்பியிருக்கின்றன. எனவே, சுற்றுப்புற வெப்பநிலை, 28-30 டிகிரி செல்சியசைத் தாண்டும் போது, உடலியல் சமநிலை மாறத் தொடங்குகிறது. அதாவது, 34-36 டிகிரி செல்சியஸ்  வெப்ப நிலையில், வெப்ப அழுத்தம் மிகவும் தீவிரமடைகிறது.

இதனால், காடைகள் வாயைத் திறந்து வேகமாக மூச்சு விடுகின்றன. இறக்கைகளை விரித்து உடல் வெப்பத்தை வெளியேற்ற முயல்கின்றன. தீனி எடுப்பதைக் குறைத்து அதிகளவில் நீரை அருந்துகின்றன. இந்த மாற்றங்கள், உடலின் சக்தி சமநிலையை மட்டுமின்றி, இரத்தத்தின் அமில-காரச் சமநிலையையும் பாதிக்கச் செய்கின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அதிக வெப்பத்தில் வேகமாக மூச்சு விடுவதால், இரத்தத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு குறைகிறது. இதனால், இரத்தத்தின் பி.எச். உயர்ந்து Respiratory Alkalosis என்னும் நிலை உருவாகிறது. இந்த மாற்றம், கால்சியம் மற்றும் பைகார்பனேட் அயன்களின் கிடைப்பைக் குறைத்து, முட்டை ஓடு உருவாகும் செயல் முறையை நேரடியாகப் பாதிக்கிறது.

இதன் விளைவாக, முட்டையின் எடை குறைதல், ஓட்டின் தடிமன் குறைதல், எளிதில் உடையும் முட்டைகள் அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் தீவனம் எடுத்தல் குறைவதால், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகளின் உறிஞ்சுதலும் குறைகிறது. இதனால் வளர்ச்சி மந்தமாவதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

உடலில் அதிகளவில் சுதந்திர மூலக்கூறுகள் (Free Radicals) உருவாகி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் (Oxidative Stress) கூடுகிறது. இதுவே, நோயெதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்தி, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் ஏற்பட வகை செய்கிறது.  

வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகளும் கணிசமானவை. தீவன மாற்றுத்திறன் (Feed Conversion Ratio) குறைகிறது; வளர்ச்சி வேகம் மந்தமாகிறது; முட்டையிடும் காடைகளில் உற்பத்திக் குறைகிறது; முட்டை ஓட்டின் தரம் பாதிக்கப்படுவதால் சந்தை மதிப்புக் குறைகிறது; இனப்பெருக்கத் திறனும் குறைகிறது. கடுமையான வெப்ப அலைகளின் போது இறப்பு விகிதமும் அதிகரிக்கக் கூடும். எனவே, கோடைக்காலத்தில் காடைகளைப் பாதுகாப்பது, சாதாரண நடவடிக்கை அல்ல; அது நேரடியாக இலாபத்தைப் பாதுகாக்கும் முதலீடாகும்.

வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, முதலில் கொட்டில் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். கொட்டிலை கிழக்கு-மேற்காக அமைத்து, இருபுறமும் காற்றோட்டம் ஏற்படும் வகையில், திறந்த அமைப்பில் வைக்க வேண்டும்.

கூரைக்கு வெள்ளையடித்தல் அல்லது வெப்பத்தைப் பிரதிபலிக்கும் பொருள்களைப் பயன்படுத்துதல், நிழல்வலை அமைத்தல், தேவையான இடங்களில் மிஸ்டிங் (Mist) அல்லது ஃபாக்கிங் (Fogging) வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியன, கொட்டிலின் உள் வெப்ப நிலையைக் குறைக்க உதவுகின்றன.

கூட்ட நெரிசலைத் தவிர்த்து, ஒவ்வொரு காடைக்கும் போதுமான இட வசதியை வழங்க வேண்டும். மேலும், எப்போதும் குளிர்ச்சியான, சுத்தமான குடிநீர்க் கிடைக்க வேண்டும். பகலில் அடிக்கடி குடிநீரை மாற்றி வழங்குவது, வெப்ப அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

கோடைக்காலத்தில் மின்னழுத்த உப்புகள் (Electrolytes), வைட்டமின்கள் சி, ஈ, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துகளை, கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்குவது, உடலின் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சமீபத்திய ஆய்வுகள், வெப்ப அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பைடேஸ் (Phytase) என்னும் நொதியின் பங்களிப்பையும் வெளிப்படுத்தி உள்ளன. தாவர மூலத் தீவனங்களில் உள்ள பைடேட் (Phytate) ஆனது, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற தாதுப்பொருள்களை, உடலில் உறிஞ்ச விடாமல் தடுக்கிறது. பைடேஸ் இந்த பைடேட்டை உடைத்து, சத்துகள் எளிதில் கிடைக்கச் செய்கிறது. இதன் மூலம் கால்சியம் உறிஞ்சுதல் அதிகரித்து, முட்டை ஓட்டின் தரம் மேம்படுகிறது.

குறிப்பாக, 1,500 FTU/கிலோ அளவில் பைடேஸ் சேர்க்கப்பட்ட தீவனத்தைப் பெற்ற காடைகளில், 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும், முட்டை ஓட்டின் தடிமன் அதிகரித்ததுடன், வெப்ப அழுத்தப் பாதிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். எனவே, காடை வளர்ப்பில் வெற்றி பெற வேண்டுமெனில், சிறந்த வளர்ப்புச் சூழல், சமச்சீர்ச் சத்துகள், அறிவியல் அடிப்படையிலான கோடைக்கால மேலாண்மை என்னும் மூன்று கூறுகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

காடைகளின் உடலியல் தேவைகளைப் புரிந்து, அதற்கேற்ற கொட்டில் வடிவமைப்பு, தீவன மேலாண்மை மற்றும் வெப்ப அழுத்தத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால், கோடைக்காலத்தின் கடும் வெப்பத்திலும் உற்பத்தியைப் பாதுகாத்து, நிலையான மற்றும் அதிக இலாபம் தரும் வகையில், காடை வளர்ப்பை வெற்றிகரமாக நடத்த முடியும். இது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நவீன, அறிவியல் சார்ந்த காடை வளர்ப்பின் முக்கிய அடையாளமாக இருக்கும்.


காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை! DR.M.VENKIDASAMY https://pachaiboomi.net/680705-2/

முனைவர் மு.வெங்கிடசாமி,

உதவிப் பேராசிரியர், மருத்துவர் ல.சௌமியா, கால்நடை உதவி மருத்துவர், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • முயல் வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

  • மண்ணின் அணுவுயிர் மாயங்கள்!

  • அழகுக்கு அழகு சேர்க்கும் போதோஸ் செடிகள்!

  • சரியான உத்திகளைக் கடைப்பிடித்தால் இலாபம் பார்க்கலாம்!

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!

  • கறவை மாடுகளின் சூலகத்தில் உருவாகும் நீர்க்கட்டிகள்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுத் தன்மைக்கான காரணிகள்!

  • எருமைகளில் சினைப்பருவ நிர்வாகம்!

  • கறவை மாடுகளில் ஏற்படும் கருச்சிதைவு நோய்!