கோடைக்கால வெப்பத்துக்கு நிவாரணமாக அமையும் குளிர்காலம், கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்குப் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகிறது. வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று அதிகமாகும் போது, இந்த விலங்குகள் குளிர்கால அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இதனால், அவற்றின் உடல் நலம், பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் பெரிதும் பாதிக்கப்படும்.
குளிர் அழுத்தம் என்பது, குறைந்த வெப்ப நிலையை மட்டும் குறிக்காது. சுற்றுச்சூழல், சத்துகள், மேலாண்மை மற்றும் விலங்கின் உடலியலுக்கு இடையிலான சிக்கலான தொடர்பும் இதில் அடங்கும்.
உடல் வெப்பத்தைப் பராமரிக்கத் தேவையான ஆற்றல், தீவனத்தின் மூலம் கிடைக்கும் ஆற்றலை விட அதிகமானால், விலங்கானது, பால் உற்பத்தி மற்றும் நோயெதிர்ப்பு செயலுக்குச் செல்ல வேண்டிய சத்துகளை, உடல் வெப்பத்தைப் பாதுகாக்கத் திருப்பி விடும்.
இதனால், உற்பத்திக் குறைதல், எளிதில் நோய்களுக்கு உள்ளாதல், விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும். குளிர்காலத்தின் தாக்கத்தைப் புரிந்து, அறிவியல் சார்ந்த மேலாண்மையைப் பின்பற்றுவது, உற்பத்தித் திறன் மற்றும் மாடுகளின் நலத்தைப் பாதுகாக்க உதவும்.
கறவை மாடுகளில் குளிர்கால அழுத்தத்தைப் புரிந்து கொள்தல்
பசு மாடுகளும் எருமை மாடுகளும் வெப்ப இரத்தத்தைக் கொண்ட விலங்குகள். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, கூடுதல் ஆற்றலைச் செலவிடத் தேவையில்லாத சுற்றுப்புற வெப்பநிலை வரம்பு, வெப்பச் சமநிலை மண்டலம் எனப்படும். பெரும்பாலும் வயதான கறவை மாடுகளில் இது, 5 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். புதிதாகப் பிறந்த கன்றுகளில் இது, 15 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
வெப்பநிலை, முக்கிய வரம்பான LCT-ஐ விடக் குறையும் போது, உடலைச் சூடாக வைத்திருக்க, விலங்குகள் உடலுக்குள் கூடுதல் வெப்பத்தை உருவாக்க வேண்டும். குளிரின் தீவிரம் மற்றும் காற்றால் ஏற்படும் குளிர்ச்சியைப் பொறுத்து, பராமரிப்பு ஆற்றல் தேவை, 10 முதல் 30 சதவீதம் வரை கூடும். கூடுதல் தீவனம் வழங்கப்படா விட்டால், உடல் எடையும், பால் உற்பத்தியும் குறையும். இனப்பெருக்கத் திறனும் பாதிக்கப்படும்.
குளிர்கால அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்
- மாடுகள் நடுங்கும். ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கூட்டமாக நிற்கும்.
- தீவனம் எடுத்தல் குறையும் அல்லது தீவனம் எடுப்பதில் சிரமம் ஏற்படும்.
- தோல் உலர்ந்து கரடுமுரடாக மாறும்.
- பால் உற்பத்தியும், பாலில் கொழுப்பின் அளவும் குறையும்.
- சினைப்பருவம் ஒழுங்கற்றதாக மாறும் அல்லது கருத்தரிப்பில் தாமதம் ஏற்படும்.
- மாடுகள், சுவாசம் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு உள்ளாகும்.
இந்த அறிகுறிகளை அறிந்து கொள்வது, விவசாயிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க உதவும்.
பால் உற்பத்தியில் குளிர் அயர்ச்சியின் தாக்கம்
குளிர்கால அயர்ச்சி, பால் உற்பத்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும். விலங்குகள் தமது உடல் வெப்ப நிலையைப் பராமரிக்க, அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதால், பால் உருவாகக் கிடைக்கும் ஆற்றல் குறையும். இனம், சத்துகள் மற்றும் தங்குமிட நிலைகளைப் பொறுத்து, கடுமையான குளிர், பால் உற்பத்தியை 10-25 சதவீதம் வரை குறைக்கும் என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உலர் பொருளை உண்பது குறைவதால், பாலின் கொழுப்பும், புரதமும் குறையலாம்.
எருமைகளின் தோல் மென்மையாகவும், ரோமம் குறைவாகவும் இருப்பதால், அவற்றின் குளிர் உணர் திறன் அதிகமாக இருக்கும். குளிர்ந்த காற்றில் நீண்ட நேரம் இருப்பதால், தீவனப் பயன்பாட்டுத் திறன் குறையும். ஈற்றுக்குப் பிறகு, கருத்தரிப்புத் தாமதமாவதால், ஈனுதல்களுக்கு இடையிலான காலம் நீளும்.
குளிர் காலத்தில் சத்து மேலாண்மை
குளிர்கால அயர்ச்சியைச் சமாளிப்பதில் சத்து மேலாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. குளிர் காலத்தில் ஆற்றலின் தேவை அதிகமாவதால், தீவனக் கலவைகளை அதற்கேற்ப மாற்ற வேண்டும்.
- ஆற்றல் அடர்த்தியை அதிகரித்தல்: கூடுதலான கலோரி தேவையைச் சரி செய்ய, செறிவூட்டிய தீவனம், தானியங்கள் அல்லது கொழுப்புச் சேர்க்கைகளை அதிகமாக வழங்க வேண்டும். தீவனத்தின் சுவையையும், ஆற்றல் உட்கொள்ளலையும் உயர்த்த, வெல்லப்பாகு, மக்காச்சோளம் அல்லது எண்ணெய்ப் புண்ணாக்குகளைச் சேர்க்கலாம்.
- போதிய நார்ச்சத்துத் தீவனத்தை வழங்குதல்: தரமான பசுந்தீவனம் அல்லது சைலேஜ், அசை போடும் இரைப்பையில் நொதித்தலை ஆதரிக்கும் நார்ச்சத்தை வழங்கும். இந்த நொதித்தல், உடல் வெப்பத்தை உருவாக்க உதவும். பெர்சீம், லூசர்ன் அல்லது ஓட்ஸ் போன்ற தீவனங்கள், குளிர் காலத்துக்கு ஏற்றவை.
- தாதுகள் மற்றும் வைட்டமின்களின் சமநிலையை உறுதி செய்தல்: குளிர் காலத்தில் சூரிய ஒளி குறைவதால், வைட்டமின் டி உருவாக்கம் குறையலாம். வைட்டமின்கள் ஏ, டி, இ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், நுண் தாதுகளைச் சமமாக வழங்குவது, நோயெதிர்ப்பு மற்றும் இனப்பெருக்கச் செயல்பாட்டை ஆதரிக்கும்.
- வெதுவெதுப்பான நீர் வழங்குதல்: குளிர் காலத்தில் விலங்குகள் குறைவாகவே நீரைக் குடிக்கும். இதனால், தீவனம் எடுத்தலும், பால் உற்பத்தியும் குறையும். தினமும் இருமுறை, 20-25 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள இளஞ்சூடான நீரை வழங்கினால், நீர் அருந்தல் அதிகமாகி, செரிமானத்துக்கு உதவும்.
- தீவனம் வழங்கும் நேரம்: வெப்பமான நேரங்களில், குறிப்பாக முற்பகுதி அல்லது பிற்பகல் தொடக்கத்தில், முக்கியத் தீவனத்தை வழங்குவது, அசை போடும் இரைப்பையின் செயலையும், உடலுக்குள் வெப்பம் உருவாவதையும் ஆதரிக்கும்.
கொட்டகை மற்றும் தங்குமிட மேலாண்மை
குளிர்கால அழுத்தத்தைத் தடுப்பதற்கான மிகச்சிறந்த சத்து சாராத வழி, சரியான தங்குமிடமாகும். குளிர் காற்றின் தாக்கத்தைக் குறைத்தல், உலர்ந்த சூழலைப் பராமரித்தல், வசதியை உறுதி செய்தல், போதுமான காற்றோட்டத்தை வழங்குதல் ஆகியன, முக்கிய நோக்கங்கள் ஆகும்.
- காற்றுத் தடுப்பு மற்றும் வெப்பக்காப்பு: கொட்டகையின் காற்று வரும் பக்கத்தில் திரைகள், மூங்கில் பாய்கள் அல்லது பாலித்தீன் தாள்களைப் பயன்படுத்தலாம். கூரைக்கு வெப்பக் காப்பு அமைத்தல் மற்றும் பக்கங்களை மூடுதல், வெப்பத்தைத் தக்க வைக்க உதவும்.
- உலர்ந்த படுக்கை: வைக்கோல் அல்லது மரத்தூள் போன்ற தடித்த, உலர்ந்த படுக்கைப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். ஈரமான படுக்கை, உடல் வெப்ப இழப்பைக் கூட்டி, மடி ஒவ்வாமை போன்ற தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
- குழுவாகத் தங்க வைத்தல்: மாடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக நிற்க அனுமதிப்பது, இயற்கையாக வெப்பத்தைப் பாதுகாக்க உதவும்.
- சரியான காற்றோட்டம்: கொட்டகையை முழுமையாக மூடக்கூடாது. தேங்கிய காற்றும், அதிக ஈரப்பதமும், சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வெப்பத்தையும் புதிய காற்றையும் சமநிலைப்படுத்த வேண்டும்.
- சூரிய ஒளி கிடைக்கச் செய்தல்: காலைச் சூரிய ஒளி, உடல் வெப்ப நிலையை ஒழுங்குபடுத்தவும், வைட்டமின் டி வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.
கடுமையான குளிரில் கன்றுகள் இருக்கும் இடங்களிலும், ஈனும் விலங்குகளுக்கான பகுதிகளிலும், வெப்ப விளக்குகள் அல்லது வெதுவெதுப்பான காற்றை ஊதும் கருவியைப் பயன்படுத்தலாம்.
கன்றுகள், சினை மாடுகள் மற்றும் புதிதாக ஈன்ற மாடுகளுக்கான பராமரிப்பு
சிறிய உடல், குறைந்த கொழுப்பு இருப்புக் காரணமாக, கன்றுகள் குளிர் அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படும். சரியான பராமரிப்பு இல்லா விட்டால், புதிதாகப் பிறந்த கன்றுகளின் உடல் வெப்ப அளவு குறையும் நிலை விரைவாக ஏற்படலாம்.
கன்றுப் பராமரிப்பு முறைகள்
- கன்று பிறந்ததும் அதை உடனடியாகத் துடைத்து உலர்த்தி, வெதுவெதுப்பான உலர்ந்த படுக்கையில் விட வேண்டும்.
- பிறந்த 1-2 மணி நேரத்தில் கன்றுக்குச் சீம்பாலை வழங்கி, அதன் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்ட வேண்டும்.
- கடுங்குளிரில் கன்றுகளுக்கான ஜாக்கெட் அல்லது போர்வையைப் போர்த்தலாம்.
- குளிர்காற்று நேரடியாகப் படாத, உலர்ந்த படுக்கை மற்றும் போதிய காற்றோட்டம் உள்ள இடத்தில் கன்றுகளைக் கட்டி வைக்க வேண்டும்.
- ஆற்றல் தேவையைச் சரி செய்ய, வெதுவெதுப்பான பாலும், தொடக்கத் தீவனமும் கன்றுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
சினை மாடுகளுக்கும், அண்மையில் ஈன்ற மாடுகளுக்கும், கூடுதல் கவனம் தேவை. குளிர் அழுத்தம், ஹார்மோன் சமநிலையைப் பாதித்து, சினைப்பருவம் தாமதமாகவோ, கருத்தரிப்பு விகிதம் குறையவோ செய்யலாம். இந்த மாடுகளுக்கு, கூடுதல் ஆற்றல், தாதுகள் மற்றும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உடல் நலம் மற்றும் நோய் மேலாண்மை
குளிர்காலச் சூழல் என்பது, சுவாச நோய்கள், செரிமான நோய்கள் பரவுவதற்கு ஏற்றதாக இருக்கலாம். சரியாகப் பேணப்படாத குளிர்காலத் தங்குமிடங்களில், நிமோனியா, குளம்பழுகல் மற்றும் மடி ஒவ்வாமை அதிகமாகும்.
தடுப்புச் சுகாதார நடவடிக்கைகள்
- கொட்டகையைச் சுத்தமாக வைத்திருந்து, ஈரமான படுக்கைப் பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
- குளிர்காலம் தொடங்குமுன், மந்தையின் சுகாதாரத் திட்டப்படி, தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்.
- இருமல், மூக்கில் சளி வடிதல் அல்லது தீவனம் எடுத்தல் குறைதல் போன்ற ஆரம்ப நோய் அறிகுறிகளைக் கவனித்து, உடனடியாகக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
- மடி ஒவ்வாமையைத் தடுக்க, மடியைச் சுத்தமாகவும் உலர்த்தியும் வைத்திருக்க வேண்டும்.
- செரிமான மண்டலத்தில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க, தீவனத்தைத் திடீரென மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
தொடர் உடற் பயிற்சியும் சூரிய ஒளியும், குளிர் காலத்தில், நோயெதிர்ப்பு சக்தியையும் ஒட்டு மொத்த நலத்தையும் மேம்படுத்த உதவும்.
நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த மாற்றங்கள்
மாடுகளின் நடத்தையைக் கவனிப்பதன் மூலம், அவற்றின் வசதி நிலையை அறியலாம். மாடுகள் மிகவும் நெருக்கமாக நிற்பது, படுக்க மறுப்பது அல்லது அசைவுகள் குறைவது, குளிர் அழுத்தத்தைக் குறிக்கும். காலையின் நடுப்பகுதியில் சூரிய ஒளியில் நிற்க அனுமதித்தல், உலர்ந்த ஓய்விடத்தை வழங்குதல் போன்ற எளிய நடைமுறைகள், வசதியை மேம்படுத்தும்.
திறந்த கொட்டகை அமைப்பில், கிழக்கு-மேற்குத் திசையில் கொட்டகையை அமைப்பது, சூரிய ஒளி கிடைப்பதை அதிகரித்து, காற்றின் தாக்கத்தைக் குறைக்க உதவும். கொட்டகையின் நிலையைக் கண்காணிக்க, வெப்பமானிகள் அல்லது குறைந்த செலவிலான வெப்ப- ஈரப்பதமானிகளை நிறுவி, அளவீடுகளுக்கு ஏற்ப மேலாண்மையை மாற்றலாம்.
பொருளாதார நலம் மற்றும் விலங்குகள் நல விளைவுகள்
குளிர்கால அழுத்தத்தைப் புறக்கணித்தால், பால் உற்பத்திக் குறைதல், இனப்பெருக்கச் சிக்கல்கள் மற்றும் நோய்கள் அதிகரித்தல் மூலம், கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும். மாதக்கணக்கில் தினமும், ஒரு மாட்டுக்கு 1-2 லிட்டர் பால் வீதம் குறைவதும் கூட, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு, பெரிய நிதிச் சுமையாக மாறும்.
விலங்கு நலன் குறித்த அக்கறை, நுகர்வோர் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் மிகுந்து வருகிறது. குளிர் அழுத்தத்தை நிர்வகிப்பது, உற்பத்தியைக் கூட்டுவதற்காக மட்டுமல்ல; நெறியுடனும் மனித நேயத்துடனும், கால்நடைகளைப் பராமரிப்பதற்கு அவசியமாகும்.
கறவை மாடுகளில் குளிர்கால அழுத்தம், பல காரணிகளால் உருவாகும் சவாலாகும். இதற்கு முன்கூட்டிய மேலாண்மை தேவை. மாடுகளுக்கான சத்துகள், தங்குமிடம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம், குளிரின் பாதிப்பிலிருந்து மாடுகளைப் பாதுகாத்து, பருவம் முழுவதும் உற்பத்தித் திறனைத் தக்க வைக்கலாம்.
காலநிலை மாறுபாடு அதிகரிக்கும் நிலையில், கடுமையான குளிர் அலைகள் அடிக்கடி ஏற்படலாம். தயார்நிலை, விழிப்புணர்வு மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், குளிருக்கு ஏற்ப கால்நடை விவசாயிகள் எவ்வளவு திறம்படச் செயல்படுவார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
குளிர்காலத்தில் மாடுகளைச் சூடாகவும் நலமாகவும் வசதியாகவும் வைத்திருப்பது, நல்ல கால்நடைப் பராமரிப்பு மட்டுமல்ல; அது, பொருளாதார ரீதியாக, சரியான நடைமுறையும், நிலைத்த பால் பண்ணை வளர்ப்பின் அடித்தளமும் ஆகும்.

முனைவர் செ.பிரவின்,
முனைவர் த.கீதா, கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் – 625 205.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


