செம்பேன் (Rice mite) என்பது, சிலந்திப் பூச்சி வகையைச் சேர்ந்த நுண்ணுயிரி அளவிலான சாற்றுறிஞ்சிப் பூச்சியாகும். இதன் அறிவியல் பெயர், Oligonychus oryzae ஆகும். இந்தச் செம்பேன்கள் நெற்பயிரைத் தாக்கினால், இலைகளின் பச்சையம் பாதிக்கப்படும். இதனால், ஒளிச்சேர்க்கையும் பயிர் வளர்ச்சியும் குறைந்து, மகசூல் இழப்பு ஏற்படும்.
குறிப்பாக, அதிக வெப்பமும், வறண்ட வானிலையும் நிலவும் காலத்தில், செம்பேன்களின் தாக்குதல் அதிகரிக்கும். எனவே, விவசாயிகள் செம்பேன் தாக்குதலின் அறிகுறிகளை அறிந்து, உரிய மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.
செம்பேன் தாக்கத்தின் அறிகுறிகள்
நெல் இலைகளின் அடிப்பகுதியில் செம்பேன்கள் கூட்டமாகக் காணப்படும். இவை, இலைகளில் இருக்கும் பச்சையத்தை உறிஞ்சுவதால், இலைகளில் வெண் புள்ளிகள் தோன்றும். நாளடைவில் இலைகள் பச்சை நிறத்தை இழந்து, வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும். மேலும், இலைகளில் சிலந்தி வலையைப் போன்ற மெல்லிய வலைகள் காணப்படும். தாக்குதல் தீவிரமானால், இலைகள் காய்ந்து சருகு போல மாறி விடும். குறிப்பாக, நாற்றங்காலில் மற்றும் வயலிலுள்ள இளம் பயிர்களில், இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தாக்குதல் அதிகரிக்கக் காரணங்கள்
அதிக வெப்பநிலை, வறண்ட வானிலை, வயலில் போதிய ஈரப்பதம் இல்லாமை, நீண்ட நாட்கள் மழையின்றி வறட்சி நிலவுதல் ஆகியன, செம்பேன்களின் பெருக்கத்திற்குச் சாதகமாக அமைகின்றன. மேலும், தேவையற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால், செம்பேன்களின் இயற்கை எதிரிகளான, இரையுண்ணிப் பூச்சிகள் மற்றும் சிலந்திகளின் எண்ணிக்கை குறைந்து தாக்குதல் அதிகரிக்கிறது. ஒரு வயலில் தொடர்ந்து நெல்லையே சாகுபடி செய்தாலும், செம்பேன்களின் தாக்கம் அதிகமாகும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள்
உழவியல் முறைகள்: வயலில் பயிரின் தேவைக்கேற்ப, போதியளவில் நீர் மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு பயிர்களின் அடித்தாள்களை உழுது மடக்கி அழிக்க வேண்டும். பயிர்ச்சுழற்சி முறையில் மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். வயலையும் வரப்புகளையும், களைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். செம்பேன் தாக்கமுள்ள பயிர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உயிரியல் முறைகள்: செம்பேன்களை உணவாகக் கொள்ளும் இரை விழுங்கிப் பூச்சிகள் மற்றும் இரையுண்ணிச் சிலந்திப் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். தேவையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். வேம்பு சார்ந்த அசாடிராக்டின் மருந்துகளைப் பரிந்துரை அளவில் பயன்படுத்தலாம்.
இரசாயன முறைகள்: செம்பேன்களின் தாக்குதல் அதிகமாக இருந்து, உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 0.8 மி.லி. Spiromesifen 22.9% SC மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. Fenazaquin 10% EC மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. Propargite 57% EC மருந்து வீதம் எடுத்துக் கலந்து தெளிக்கலாம்.
மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் செம்பேன் தாக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்து, மருந்தைத் தேர்வு செய்ய வேண்டும். மருந்தைத் தெளிப்பதற்கு முன், நெற்பயிருக்கான தற்போதைய பதிவு, லேபிள் வழிமுறைகள் மற்றும் உள்ளூர் வேளாண்மைத் துறை பரிந்துரைகளை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரை அளவை மீறக்கூடாது. பாதுகாப்புக் கவசத்தை அணிந்து கொண்டு மருந்தைத் தெளிக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு
வாரம் ஒருமுறை நெற்பயிர் இலைகளின் அடிப்பகுதியை, பூதக்கண்ணாடி மூலம் பரிசோதிக்க வேண்டும். செம்பேன் தாக்குதலைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரே மருந்தைத் தொடர்ந்து தெளிப்பதைத் தவிர்த்து, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



