எல்-நினோ (El Nino) என்னும் பருவநிலை மாற்றம் என்பது, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, இயல்பை விடக் கூடுவதால் ஏற்படும் நிகழ்வாகும். இந்தியாவில் பருவநிலை மாற்றக் காலத்தில், தென்மேற்குப் பருவமழை குறைதல், அதிக வெப்பநிலை, நீண்ட வறட்சி, நீர்ப் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதனால், மகசூல் குறைதல், பூச்சி மற்றும் நோய்த் தாக்கம் மிகுதல், கால்நடைத் தீவனத் தட்டுப்பாடு போன்ற சவால்கள் உருவாகின்றன. (el nino velanmai uthigal) இந்தச் சூழலில், விவசாயிகள் கால நிலைக்கு ஏற்ற நவீனத் தொழில் நுட்பங்களைப் பின்பற்றினால், மகசூல் இழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
எல் நினோ வேளாண் உத்திகள் (el nino velanmai uthigal) | காலநிலைக்கு ஏற்ற பயிர்த் திட்டமிடல்
- இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வேளாண் பல்கலைக் கழகங்களின் காலநிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
- குறைந்த நீரில் வளரும் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறுதானியப் பயிர்கள் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.
- நீண்டகால நெல் இரகங்களுக்குப் பதிலாக, குறுகிய கால இரகங்களைப் பயிரிட வேண்டும்.
- ஒரு பயிரை மட்டும் சாகுபடி செய்யாமல், பல பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.
வறட்சியைத் தாங்கும் இரகங்கள்
- சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
- வறட்சியைத் தாங்கும் நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
பயிர்களும் இரகங்களும்
- நெல்: அண்ணா 4, PMK 1, ADT 45, TKM 15, ADT 39, ADT 36, TKM 13, கோ 52, ADT 59.
- கம்பு: கோ.10, COH 10.
- சோளம்: கோ.34.
- கேழ்வரகு: ATL 1.
- வரகு: TNAU 86, ATL 1.
- நிலக்கடலை: VRI 10.
- எள்: VRI 4, VRI 5.
- உளுந்து: வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 10, வம்பன் 11.
- பாசிப்பயறு: வம்பன் 5.
- பருத்தி: VPT 2, VPT 3, கோ 17.
El nino velanmai uthigal | எல் நினோ வேளாண் உத்திகள்
வறட்சியைத் தாங்கவும், நல்ல முளைப்புத் திறனைப் பெறவும், விதைகளை, த.வே.ப.க. விதை அமிர்தத்தில் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மேலும், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசிலஸ் சப்டிலிஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்தல் மற்றும் அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா கொண்டு விதைப்பூச்சு செய்தல் மூலம், பயிரின் முளைப்புத் திறனையும் வறட்சியைத் தாங்கும் திறனையும் மேம்படுத்தலாம்.
நீர் மேலாண்மை
- சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.
- நெற்பயிரில் காய்ச்சலும் பாய்ச்சலும் (Alternate Wetting and Drying) முறையைப் பின்பற்ற வேண்டும்.
- கரும்பு மற்றும் காய்கறிப் பயிர்களில் மண் ஈரப்பதமானி (Soil moisture indicator tool) காட்டும் அளவின் அடிப்படையில் பாசனத்தைப் பின்பற்ற வேண்டும்.
- முந்திரி மற்றும் மரப்பயிர் நிலங்களில் மழைநீர்ச் சேமிப்புக் குளங்களை அமைக்க வேண்டும்.
- பண்ணைக் குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் மூலம் நீரைச் சேமிக்க வேண்டும்.
மண் ஈரம் காத்தல்
- காய்கறி சாகுபடி நிலங்களில், தென்னைநார், வைக்கோல் மற்றும் கரும்புத் தோகையை, மூடாக்காக (Mulching) இட வேண்டும்.
- கோடையுழவு செய்து மழைநீரை நிலத்தில் சேமிக்க வேண்டும்.
- இயற்கை உரங்கள் மற்றும் தொழுவுரத்தை அதிகமாக இட வேண்டும்.
சத்து மேலாண்மை
- மண் பரிசோதனையின் அடிப்படையில் உரமிட வேண்டும்.
- டி.ஏ.பி., பாக்டம்பாஸ், கலப்பு உரங்கள் போன்ற பாஸ்பேட் உரங்களை இடுவதைத் தவிர்த்து, நேரடி உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகியவற்றை இட்டால், அவற்றின் பயனை, பயிர்கள் விரைவாக எடுத்துக் கொள்ளும். மேலும், உவர் மற்றும் களர் சார்ந்த நிலங்களில் ஏற்படும் பயிர்ப் பாதிப்பைத் தடுக்கலாம்.
- வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
- நீரில் கரையும் உரங்களை, சொட்டுநீர் மூலம் கொடுத்தால் சத்துகள் வீணாவதைத் தடுத்து, உரச்செலவையும் குறைக்கலாம்.
- வறட்சியைத் தாங்குவதற்கு, ஒரு சதவீதப் பொட்டாசியம் குளோரைடு மற்றும் ஒரு சதவீத யூரியாக் கரைசலைத் தெளிக்கலாம்.
- ஒரு லிட்டர் நீருக்கு 10 மி.லி. மெத்தேலோ பாக்டீரியம் வீதம் எடுத்து, ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால், பயிர்களில் வறட்சியைத் தாங்கும் தன்மையை மேம்படுத்தலாம். (el nino velanmai uthigal)
- தோட்டக்கலைப் பயிர்களான, வெண்டை, மிளகாய் மற்றும் கத்திரியின் வளர்ச்சியை மேம்படுத்த, ஒரு சதவீத யூரியாக் கரைசல் மற்றும் ஒரு சதவீத பொட்டாஷ் கரைசலைத் தெளிக்கலாம்.
- வறட்சியைத் தாங்கவும், அதிக மகசூலைப் பெறவும், த.வே.ப.க. பயிர் பூஸ்டர்களைப் பயன்படுத்தலாம்.
நெற்பயிர்
- பூஸ்டர்: நெல் ரிப்/ நெல் ப்ளூம்.
- தெளிக்கும் பருவம்: சூல் பிடிக்கும் பருவம், பூப்பிடிக்கும் பருவம்.
- அளவு: ஏக்கருக்கு ஒரு முறைக்கு 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
மக்காச்சோளம்
- பூஸ்டர்: திரவ மக்காச்சோள மேக்சிம்.
- தெளிக்கும் பருவம்: பூக்கும் காலம்.
- அளவு: ஏக்கருக்கு 1 லி./ 200 லிட்டர் நீர்.
நிலக்கடலை
- பூஸ்டர்: நிலக்கடலை ரிச்.
- தெளிக்கும் பருவம்: பூக்கும் போதும், காய்க்கும் போதும்.
- அளவு: ஏக்கருக்கு ஒரு முறைக்கு 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
பருத்தி
- பூஸ்டர்: பருத்தி பிளஸ்.
- தெளிக்கும் பருவம்: பூக்கும் போதும், காய்க்கும் போதும்.
- அளவு: ஏக்கருக்கு ஒரு முறைக்கு 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
உளுந்து, பாசிப்பயறு
- பூஸ்டர்: பயறு அதிசயம்.
- தெளிக்கும் பருவம்: பூக்கும் போதும், காய்க்கும் போதும்.
- அளவு: ஏக்கருக்கு ஒரு முறைக்கு 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
கொள்ளு
- பூஸ்டர்: கொள்ளு பூஸ்டர்.
- தெளிக்கும் பருவம்: பூக்கும் போதும், காய்க்கும் போதும்.
- அளவு: ஏக்கருக்கு ஒரு முறைக்கு 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
கரும்பு
- பூஸ்டர்: கரும்பு பூஸ்டர்.
- தெளிக்கும் பருவம்: நட்ட 45, 60 மற்றும் 70-வது நாள்.
- அளவு: 1 கி.கி., 1.5 கி.கி., 2 கி.கி./ 200 லிட்டர் நீர்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
- பருவநிலை மாற்றக் காலத்தில், ஏற்படும் அதிக வெப்பத்தால், செஞ்சிலந்தி, தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப் புழு, மாவுப்பூச்சி, வெள்ளை ஈ போன்றவை பெருகலாம்.
- எனவே, மஞ்சள் ஒட்டுப்பொறி, விளக்குப் பொறியை நிலத்தில் அமைக்க வேண்டும்.
- நிலத்தில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் உள்ளதா என்பதை வாரம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும். el nino velanmai uthigal
- ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM) முறையைப் பின்பற்ற வேண்டும்.
- தேவையின் போது மட்டுமே சரியான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பயிர்க் காப்பீடு
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய காலத்தில் சேர வேண்டும். இதனால், வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடர் இழப்புகளிலிருந்து பொருளாதாரப் பாதுகாப்புக் கிடைக்கும்.
இயந்திரமயமாக்கல்
இயந்திரங்கள் மூலம் விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல், டிரோன் மூலம் உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தல் ஆகியவற்றால், செலவைக் குறைத்து உற்பத்தித் திறனைக் கூட்டலாம்.
டிஜிட்டல் வேளாண்மை
- IMD வானிலை முன்னறிவிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
- மொபைல் செயலிகள் மூலம் பூச்சி, நோய், வானிலைத் தகவல்களைப் பெற வேண்டும்.
- விவசாயத்தில், டிரோன், செயற்கைக்கோள், மண் ஈரப்பத உணரிகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்..
மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல்
- அறுவடை செய்த விளைபொருள்களைச் சரியான முறையில் சேமிக்க வேண்டும்.
- அவற்றிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும்.
- அவற்றை, உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) மூலம் சந்தைப்படுத்த வேண்டும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்
கால்நடைகளின் உடல் வெப்பநிலை என்பது, சுற்றுச்சூழல் வெப்ப நிலையைச் சார்ந்தே உள்ளது. அதிக வெப்பம் மற்றும் வறட்சியால், கால்நடைகள் தீவனம் எடுத்தல், வளர்ச்சி, பால் உற்பத்தி, இனப்பெருக்கத் திறன், நோயெதிர்ப்பு சக்தி ஆகியன பாதிக்கப்படும்.
தீவன மேலாண்மை: வறட்சிக் காலத்தைச் சமாளிக்கத் தேவையான தீவனத்தை, முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும். சைலேஜ் மற்றும் உலர் தீவனங்களைப் பயன்படுத்த வேண்டும். சமச்சீர் சத்துகளைக் கொண்ட தீவனத்தை வழங்க வேண்டும்.
நீர் மேலாண்மை: கால்நடைகளுக்குப் போதியளவில் குடிநீரை வழங்க வேண்டும். குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீர் வீணாவதைத் தவிர்க்க வேண்டும்.
கொட்டகை மேலாண்மை: கொட்டகை அமைப்பில், வெப்பத்தைக் குறைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். போதுமான இட வசதியைக் கால்நடைகளுக்கு வழங்குதல் அவசியம். கொட்டகைச் சுத்தம் முக்கியமான ஒன்றாகும்.
பாதுகாப்பு மேலாண்மை: கால நிலைக்கு ஏற்ற தடுப்பூசிகளைச் சரியான கால இடைவெளியில் போட வேண்டும். தொடக்க நிலையிலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும். சுகாதாரமான சூழலைப் பராமரிக்க வேண்டும். el nino velanmai uthigal
மாடுகளில் ஏற்படும் தாக்கங்கள்
கறவை மாடுகள் அதிக உற்பத்தித் திறன் மிக்கவை என்பதால், வெப்ப அழுத்தத்தால் (heat stress) அதிகளவில் பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை காரணமாக மாடுகளின் உடல் வெப்பம் மிகுந்து, வெப்ப அழுத்தம் ஏற்படும். இதனால், தீவனம் எடுக்கும் திறன் குறையும். பால் உற்பத்தியும், பாலிலுள்ள கொழுப்பு மற்றும் புரத அளவும் குறையும்.
இனப்பெருக்கச் செயல்கள் பாதிக்கப்படும். கருவுறுதல் விகிதம் குறைந்து இனப்பெருக்க இடைவெளி கூடும். நோயெதிர்ப்பு சக்திக் குறைவதால், மடிவீக்க நோய், செரிமானச் சிக்கல்கள் போன்றவை ஏற்படலாம். பசுந்தீவன உற்பத்திக் குறைவதால், தீவனச் செலவு கூடும்.
தீர்வுகள்: பண்ணையில் போதிய நிழல் வசதியை ஏற்படுத்த வேண்டும். காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும். சுத்தமான மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதி இருக்க வேண்டும். வெய்யில் குறைவாக இருக்கும் காலை மற்றும் மாலையில் தீவனம் இட வேண்டும். சைலேஜ், வைக்கோல் போன்ற தீவனங்களை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடும் வெய்யிலில் கால்நடைகளை வெளியே அனுப்பக் கூடாது.
ஆடுகளில் ஏற்படும் தாக்கங்கள்
ஆடுகள் ஓரளவு வெப்பத்தைத் தாங்கும் என்றாலும், நீண்டகால வறட்சி மற்றும் தீவனப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும். மேய்ச்சல் நிலங்கள் வறண்டு தீவனப் பற்றாக்குறை ஏற்படும். ஆடுகளின் உடல் எடை குறையும். குட்டிகளின் வளர்ச்சித் தாமதமாகும். பால் தரும் ஆடுகளில் பால் உற்பத்திக் குறையும். உடல் நிலையும் இனப்பெருக்கத் திறனும் பாதிக்கப்படும். நோயெதிர்ப்புத் திறன் குறைந்து நோய்த் தாக்கம் அதிகரிக்கும்.
தீர்வுகள்: வறட்சியைத் தாங்கி வளரும் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். உலர் தீவனங்களைச் சேமித்து வைக்க வேண்டும். சத்துக் குறைந்த வைக்கோல் போன்ற தீவனத்துடன், அசோலா போன்ற புரதமிகு தீவனங்கள் மற்றும் அடர் தீவனங்களைச் சேர்த்து வழங்க வேண்டும். குட்டிகளுக்குக் கூடுதல் சத்துகளை வழங்க வேண்டும்.
கொட்டகையை, நிழல் மற்றும் காற்றோட்ட வசதியுடன் அமைக்க வேண்டும். வெய்யில் குறைவாக உள்ள காலை மற்றும் மாலையில் தீவனம் அளிப்பது அவசியம். தாதுப்புக் கலவை மற்றும் தேவையான சத்துகளை அளிக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கத்தைச் சரியான கால இடைவெளிகளில் கடைப்பிடிக்க வேண்டும்.
கோழிகளில் ஏற்படும் தாக்கங்கள்
வெப்ப அழுத்தத்தால் கோழிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். (el nino velanmai uthigal) கோழிகளின் தீவனம் எடுத்தல் அளவு குறையும். உடல் எடை குறையும். முட்டை உற்பத்தியும் குறையும். முட்டையின் எடையும் ஓட்டின் தரமும் குறையும். கோழிக் குஞ்சுகளின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். நோயெதிர்ப்புத் திறன் குறைந்து நோய்த் தாக்கம் கூடும். இறப்பு விகிதம் அதிகமாகும்.
தீர்வுகள்: பண்ணை, காற்றோட்டமாக இருக்க வேண்டும். கூரையில், வெள்ளைப்பூச்சு அல்லது தென்னங்கீற்று அல்லது பனையோலையை இட்டு, வெப்பத்தைத் தடுக்க வேண்டும். போதியளவில் குடிநீர் வசதி இருப்பது அவசியம். எலக்ட்ரோலைட் மற்றும் வைட்டமின் சத்துகளை வழங்க வேண்டும்.
வெப்பம் மிகுந்த நேரங்களில் பண்ணைப் பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நெருக்கடியற்ற விசாலமான இடத்தில் கோழிகளை வளர்க்க வளர்க்க வேண்டும். சுத்தம் மற்றும் உயிரி பாதுகாப்பு முறைகளைக் (bio security measures) கடைப்பிடிக்க வேண்டும்.
பன்றிகளில் ஏற்படும் தாக்கங்கள்
குறைந்தளவில் வியர்வைச் சுரப்பிகளைக் கொண்ட பன்றிகளால், அதிக வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே, வெப்பழுத்தம் (heat stress) அதிகமாக ஏற்படும். இதனால், உண்ணும் அளவு குறையும். எடை குறைந்து இறைச்சி உற்பத்திப் பாதிக்கப்படும். இனப்பெருக்கத் திறன் குறையும். பன்றிக் குட்டிகளின் இறப்பு விகிதம் அதிகமாகும்.
தீர்வுகள்: நிழலும் குளிர்ச்சியும் உள்ள கொட்டகை அவசியம். இதற்கு, நீர்த் தெளிப்பு அல்லது குளிரூட்டு வசதியை அமைக்கலாம். எப்போதும் சுத்தமான குடிநீரையே வழங்க வேண்டும். (el nino velanmai uthigal) வெப்ப நேரத்தில் தீவனத்தைக் குறைத்தும், குளிர்ந்த நேரத்தில் கூட்டியும் வழங்க வேண்டும். கொட்டகைச் சுகாதாரம் அவசியம். தடுப்பூசி மற்றும் நோய்க் கண்காணிப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதிக வெப்பம், வறட்சி, தீவன மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையால், கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். இதைச் சரி செய்ய, அசோலா என்னும் பெரணி வகைப் பாசியை உற்பத்தி செய்து கொடுத்தால், வெப்ப அயர்ச்சி மற்றும் தீவனப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.
அசோலா வழங்கும் அளவு
- பசு மாடு: தினமும் 1.5-2 கிலோ.
- எருமை மாடு: தினமும் 2-3 கிலோ.
- கன்று: தினமும் 500 கிராம் – 1 கிலோ.
- வெள்ளாடு, செம்மறி ஆடு: தினமும் 200-300 கிராம்.
- பன்றி: தினமும் 1.5-2 கிலோ.
- நாட்டுக்கோழி: தினமும் 20-30 கிராம்.
- வாத்து: தினமும் 30-50 கிராம்.
அசோலாவை நன்கு கழுவிக் கொடுக்க வேண்டும். முதலில் குறைந்தளவில் கொடுத்து, படிப்படியாக அதிகரிக்க வேண்டும். அடர் தீவனத்தில் கலந்து கொடுத்தால் விரும்பி உண்ணும். மொத்தத் தீவனத்தில் 15-20 சதவீதம் மட்டுமே அசோலாவைச் சேர்க்க வேண்டும்.
பருவநிலை மாற்றக் காலத்தில் பெய்யும் குறைவான மழை, அதிக வெப்பம் போன்ற வேளாண்மைச் சவால்களை எதிர்கொள்ள, பயிர்த் தேர்வு, நீர்ச்சேமிப்பு, மண் ஈரம் காத்தல், துல்லிய உர மேலாண்மை, பூச்சி, நோய் மேலாண்மை, டிஜிட்டல் தொழில் நுட்பப் பயன்பாடு, பயிர்க் காப்பீடு, கால்நடை மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.
இந்தத் தொழில் நுட்பங்கள், பருவநிலை மாற்றத்துக்கு உகந்த வேளாண்மை (Climate Smart Agriculture) (el nino velanmai uthigal) என்னும் அணுகுமுறையின் அடிப்படையாக அமைந்து, நாளைய பருவநிலை மாற்றச் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிக்க விவசாயிகளுக்கு உதவும்.

முனைவர் ஜி.அழகு கண்ணன்,
முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், எம்.திருமலை வாசன், உழவியல் வல்லுநர், மரு.வி.சரண்யா, கால்நடை அறிவியல் வல்லுநர், முனைவர் ஏ.இராஜ்கலா, வேளாண் விரிவாக்க வல்லுநர், கிரீடு வேளாண்மை அறிவியல் மையம், அரியலூர் மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

