My page - topic 1, topic 2, topic 3

உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

Aflatoxin

ரிசி, மக்காச்சோளம், வேர்க்கடலை, பருப்பு, மிளகாய், மசாலாப் பொருள்கள் போன்றவை, நம் அன்றாட உணவு முறையில் முக்கியப் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. ஆனால், இவற்றில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் (Aflatoxin) என்னும் ஆபத்தான நச்சுப்பொருள், உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

அஃப்ளாடாக்சின் (Aflatoxin) என்பது, ஆஸ்பர்ஜில்லஸ் என்னும் பூஞ்சையால் உருவாகும் மிக ஆபத்தான நச்சு. குறிப்பாக, வெப்பமான மற்றும் ஈரப்பதமுள்ள சூழலில் சேமிக்கப்படும் தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் இந்தப் பூஞ்சை வேகமாக வளரும். உலக சுகாதார அமைப்பும், சர்வதேசப் புற்று நோய் ஆராய்ச்சி (IARC) நிறுவனமும், அஃப்ளாடாக்சின் பி1-ஐ, மனித புற்றுநோய்க் காரணிக்குழு 1 என வகைப்படுத்தியுள்ளது. 

அதாவது, மக்களுக்கு நேரடியாகப் புற்று நோயைத் தரக்கூடிய மிக ஆபத்தான நச்சாக இது கருதப்படுகிறது. இந்த நச்சானது தொடர்ந்து உடலுக்குள் சென்றால், கல்லீரல் புற்று நோய், நோயெதிர்ப்புச் சக்திக் குறைவு, குழந்தைகளில் வளர்ச்சிப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் நலச் சிக்கல்கள் உருவாகக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2024-ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) அறிக்கைப்படி, உலகளவில் உற்பத்தியாகும் உணவுப் பயிர்களில் சுமார் 25 சதம் வரை, மைகோடாக்சின் (Mycotoxin) மாசு இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இதில், அஃப்ளாடாக்சின் (Aflatoxin) மிகவும் ஆபத்தான மற்றும் பரவலாகக் காணப்படும் நச்சுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தியாவின் வெப்பமான மற்றும் ஈரப்பதமுள்ள காலநிலை, ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்ற சூழலை உருவாக்குகிறது. குறிப்பாக, மக்காச்சோளம், வேர்க்கடலை, அரிசி மற்றும் மசாலாப் பொருள்களில், அஃப்ளாடாக்சின் (Aflatoxin) மாசு அதிகமாக காணப்படுவதாகச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2023-24 உலக மைகோடாக்சின் ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் சோதிக்கப்பட்ட மாதிரிகளில் 97 சதம் வரை குறைந்தது ஒரு மைகோடாக்சினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், 76 சத மாதிரிகளில் பல மைகோடாக்சின்கள் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, அஃப்ளாடாக்சின் மற்றும் ஃபுமோனிசின் அளவுகள் அதிகமாக இருந்ததால், இந்தியா, தீவிர ஆபத்துப் பகுதியாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய காலாண்டு மைகோடாக்சின் கண்காணிப்பு அறிக்கையில், அஃப்ளாடாக்சின் மாசு 90 சதத்துக்கும் மேல் பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மக்காச்சோள மாதிரிகளில் மட்டும் சுமார் 78 சதம் வரை அஃப்ளாடாக்சின் (Aflatoxin) மாசு காணப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அஃப்ளாடாக்சின் பிரச்சினை, உணவுப் பாதுகாப்பை மட்டுமல்ல, ஏற்றுமதியையும் பாதிக்கிறது.

குறிப்பாக, அஃப்ளாடாக்சின்மிளகாய், வேர்க்கடலை மற்றும் மசாலாப் பொருள்களில் அஃப்ளாடாக்சின் (Aflatoxin) அளவு அதிகமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் அவற்றை நிராகரித்து விடுகின்றன. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரியளவில் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினையைச் சமாளிக்க, பல ஆண்டுகளாக இரசாயன முறைகள், வெப்பமூட்டும் முறைகள் மற்றும் கதிர்வீச்சுத் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இம்முறைகளால், சில சமயங்களில் உணவின் தரம் பாதிக்கக் கூடும். சில தொழில் நுட்பங்கள் அதிகச் செலவையும் தரும். மேலும், சில முறைகளால், உணவின் மேற்பரப்பில் உள்ள நச்சுகளை மட்டுமே குறைக்க முடியும்; உள்ளே இருக்கும் நச்சுகளை முழுமையாக அகற்ற முடியாது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, அஃப்ளாடாக்சின் (Aflatoxin) போன்ற மைக்கோ டாக்சின்கள் வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டவை. அதனால், சாதாரணAflatoxinச் சமையல் அல்லது உணவுப் பதன முறைகளில் அவை முழுமையாக அழியாது. இந்தச் சூழலில், உலக ஆராய்ச்சியாளர்கள் அதிகக் கவனம் செலுத்தும் புதிய தொழில் நுட்பமாக, கோல்ட் பிளாஸ்மா (Cold Plasma) உருவெடுத்துள்ளது.

பிளாஸ்மா என்பது, பொருளின் நான்காவது நிலை என்று அழைக்கப்படுகிறது. திட, திரவ, வாயு நிலைக்கு அடுத்ததாக இருக்கும் ஓர் ஆற்றல் நிலை தான் பிளாஸ்மா. ஆனால், கோல்ட் பிளாஸ்மா என்பது, அதிக வெப்பம் இல்லாமல் உருவாக்கப்படும் சிறப்பு பிளாஸ்மா தொழில் நுட்பமாகும்.

இம்முறையில் உருவாகும் வினை புரியும் ஆக்ஸிஜன் மூலக்கூறு (ROS) மற்றும் வினை புரியும் நைட்ரஜன் மூலக்கூறு (RNS) போன்ற செயல்படும் மூலக்கூறுகள் அஃப்ளாடாக்சின் நச்சின் வேதியியல் கட்டமைப்பை உடைத்து, அதன் நச்சுத் தன்மையைக் குறைக்கின்றன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கோல்ட் பிளாஸ்மா தொழில் நுட்பம், அஃப்ளாடாக்சின் மூலக்கூறுகளின் இரசாயனப் பிணைப்புகளைத் தாக்கி, அவற்றை, குறைந்த நச்சுத் தன்மையுள்ள பொருள்களாக மாற்றுகிறது.

குறிப்பாக, ஓசோன், ஹைட்ராக்சில் ரேடிக்கல்கள் மற்றும் பிற வினை புரியும் மூலக்கூறுகள், இந்தச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொழில் நுட்பத்தின் மிகப்பெரிய நன்மை யாதெனில், இது அதிக வெப்பத்தைப் பயன்படுத்தாமல் செயல்படுகிறது. அதனால், உணவின் நிறம், சுவை, மணம் மற்றும் சத்துகள் பெரும்பாலும் காக்கப்படுகின்றன. மேலும், எந்த இரசாயன மீதமுமில்லாமல் செயல்படுவதால், இது, பசுமைத் தொழில் நுட்பம் என உலகளவில் கவனம் பெறுகிறது.

ஆய்வுகளில், மக்காச்சோளம், வேர்க்கடலை, விதைகள், மசாலாப் பொருள்கள் மற்றும் பல உலர் உணவுகளில், கோல்ட் பிளாஸ்மா சிறந்த முடிவுகளை அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சில ஆய்வுகள், சில நிமிடச் சிகிச்சையிலேயே அஃப்ளாடாக்சின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறுகின்றன. காலநிலை மாற்றமும் இந்தப் பிரச்சினையைத் தீவிரப்படுத்துகிறது.

அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, அஃப்ளாடாக்சின் (Aflatoxin) மாசு, எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் கடுமையாகி வரும் நிலையில், இந்தியா போன்ற விவசாய நாடுகளுக்கு இந்தத் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானதாக மாறக்கூடும்.

கூடுதல் தகவல்களுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் 

குறிப்பாக, தமிழ்நாட்டில் மிளகாய், வேர்க்கடலை, மக்காச்சோளம் மற்றும் மசாலாப் பொருள்கள் சேமிப்பில், கோல்ட் பிளாஸ்மா தொழில் நுட்பம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உலகம் இன்று பாதுகாப்பான மற்றும் இரசாயனமில்லா உணவுகளை நோக்கி நகர்கிறது. அந்த மாற்றத்தின் மையத்தில் கோல்ட் பிளாஸ்மா தொழில் நுட்பம் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.


உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

முனைவர் மு.வெங்கிடசாமி,

உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!