போதோஸ் அல்லது மணி பிளாண்ட் (Pothos or Money Plant) என்பது, வீட்டுக்குள் எளிதாக வளரக்கூடிய அழகான கொடிவகைச் செடியாகும். இச்செடியை குறைந்த பராமரிப்பிலும் நன்றாக வளர்க்கலாம். இதன் பச்சை இலைகளும், நீண்ட கொடிகளும், வீட்டின் உட்புறம், பால்கனி மற்றும் சன்னல் ஓரங்களில் இயற்கையான அழகைச் சேர்க்கும்.
குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் வளரும் தன்மை இச்செடிக்கு இருப்பதால், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மிகவும் ஏற்றது. மண் தொட்டி, கண்ணாடிப் புட்டி நீரில் வளர்த்தல், தொங்கும் தொட்டி, குடுவை மற்றும் சுவர் அலங்காரம் போன்ற, பல்வேறு முறைகளில் வளர்க்கலாம். எளிதாகப் பெருக்கி, புதிய செடிகளை உருவாக்க முடிவதும் இதன் சிறப்பாகும்.
மண் தொட்டியில் வளர்ப்பது
போதோஸ் செடி நீண்ட காலம் நன்றாக இருப்பதற்கு, மண் தொட்டியில் வளர்ப்பது சிறந்த முறையாகும். இதற்கு, அடிப்பகுதியில் வடிகால் துளைகள் உள்ள தொட்டியைத் தேர்வு செய்ய வேண்டும். தொட்டியில், தோட்ட மண், தேங்காய் நார்த்தூள், இயற்கை உரம் அல்லது மண்புழு உரத்துடன், சிறிதளவு மணல் அல்லது பெர்லைட்டைச் சேர்க்கலாம்.
மண் கலவையைத் தயாரிக்க, தோட்ட மண் நாற்பது சதவீதம், தேங்காய் நார்த்தூள் முப்பது சதவீதம், இயற்கை உரம் முப்பது சதவீதம் சேர்க்க வேண்டும். முதலில் தொட்டியின் அடிப்பகுதியில் வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்து கொண்டு, மண் கலவையை நிரப்ப வேண்டும். மூன்று முதல் ஐந்து இலைகளுடன் இருக்கும் தரமான போதோஸ் கிளையை மண்ணில் நட்டு, சிறிதளவு நீர் ஊற்ற வேண்டும். செடியை, கடும் வெய்யில் படும் இடத்தில் வைக்காமல், நன்கு மறைமுக வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைப்பது நல்லது.
கண்ணாடிப்புட்டி நீரில் வளர்ப்பது
போதோஸ் செடியை, கண்ணாடிப் புட்டி நீரில் வளர்த்தால், வீட்டின் மேசை, சன்னல் ஓரம் போன்ற இடங்களில் மிகவும் அழகான தோற்றத்தை அளிக்கும். இதற்கான கொடியைக் கணுவுடன் சேர்த்து வெட்ட வேண்டும். இந்தக் கணு தான் நீருக்குள் புதிய வேர்களை உருவாக்கும்.
முதலில், ஒரு கண்ணாடிப் புட்டியில் சுத்தமான நீரை நிரப்பி, அந்த நீருக்குள் கணு இருக்கும் வகையில் போதோஸ் கிளையை வைக்க வேண்டும். இலைகள் நீருக்குள் மூழ்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு, மறைமுக வெளிச்சம் நன்றாகக் கிடைக்கும் இடத்தில் புட்டியை வைத்துப் பராமரித்தால், சில நாட்களில் கணுவிலிருந்து புதிய வேர்கள் தோன்றத் தொடங்கும். நீரை அவ்வப்போது மாற்றி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நீரில் மட்டும் நீண்ட காலம் வளர்ப்பது
போதோஸ் செடியை மண்ணே இல்லாமல் நீரில் மட்டுமே வளர்க்க முடியும். ஆனால், இம்முறையில் நீர் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். நீர், துர்நாற்றம் வீசத் தொடங்கினாலோ அல்லது பச்சை நிறமாக மாறினாலோ அதை மாற்ற வேண்டும்.
வேரழுகல் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றி விட்டு, தரமான வேர்களைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும், செடியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் கிடைக்க, அவ்வப்போது மிகவும் நீர்த்த திரவ உரத்தைப் பயன்படுத்தலாம்.
பழைய புட்டியில் வளர்ப்பது
பழைய பிளாஸ்டிக் புட்டியிலும் போதோஸ் செடியை எளிதாக வளர்க்கலாம். இதற்கு, 1-2 லிட்டர் கொள்ளளவு உள்ள பழைய பிளாஸ்டிக் புட்டியை எடுத்துக்கொண்டு, அதன் மேற்பகுதியை வெட்ட வேண்டும். தேவையற்ற நீர் வெளியேறும் வகையில், புட்டியின் அடிப்பகுதியில் சில துளைகளைப் போட வேண்டும்
பிறகு, மண், தேங்காய் நார்த்தூள் மற்றும் இயற்கை உரத்தை நிரப்பி, போதோஸ் கிளையை நட்டு வளர்க்கலாம். இப்படி, பழைய புட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம், கூடுதல் செலவில்லாமல், புதிய போதோஸ் செடிகளை உருவாக்கலாம்.
தொங்கும் தொட்டியில் வளர்ப்பது
போதோஸ், கொடியாக நீண்டு வளர்வதால், தொங்கும் தொட்டி மிகவும் பொருத்தமானது. செடி மேலிருந்து கீழே தொங்கும் போது அழகாக இருக்கும். கொடிகள் மிகவும் நீளமாகி விட்டால், அவற்றை வெட்டி மீண்டும் அதே தொட்டியில் நட்டு, அடர்த்தியான செடியாக மாற்றலாம்.
ஒரு கிளையிலிருந்து பல செடிகளை உருவாக்குவது
போதோஸ் செடியின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று, ஒரு கிளையிலிருந்து பல புதிய செடிகளை உருவாக்க முடிவதாகும். இதற்கு, நீண்ட கொடியை எடுத்து, அதிலுள்ள ஒவ்வொரு கணுவையும் தனித்தனியாக வெட்டி, ஒவ்வொரு துண்டையும் நீரில் வைக்கலாம். அல்லது நேரடியாக மண்ணிலும், தேங்காய் நார்த்தூள் கலவையிலும் நடலாம்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு துண்டிலிருந்தும் புதிய வேர்களும். புதிய இலைகளும் வளரத் தொடங்கும். இதன் மூலம், ஒரே ஒரு கொடியிலிருந்து பல புதிய போதோஸ் செடிகளை, எளிதாக உருவாக்கி நீரில் வைக்கலாம்
ஆதரவுக் கம்பியில் வளர்ப்பது
போதோஸ், இயற்கையில் மேல்நோக்கி வளரும் தன்மை கொண்டது. எனவே, ஆதரவுக் கம்பியைக் கொடுத்து, மேல்நோக்கி வளரச் செய்யலாம். கம்பியில் கொடியை மெதுவாகக் கட்டி வளர்க்கலாம். இதனால், தொங்கும் செடி, ஏறும் செடி என்று வடிவத்தை மாற்றலாம்.
சுவர் அலங்காரமாக வளர்ப்பது
சுவருக்கு அருகில் தொட்டியை வைத்து, அதிலுள்ள கொடிகளைச் சிறிய கொக்கிகள் அல்லது செடித் தாங்கிகள் மூலம் வழி நடத்தலாம். இதன் மூலம் பச்சைச் சுவர் போன்ற தோற்றம் சுவருக்குக் கிடைக்கும். சுவரில் நேரடியாக நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒளி மிக முக்கியம்
போதோஸ் செடி நன்றாக வளர்வதற்கு, பிரகாசமான மறைமுக வெளிச்சம் மிகவும் அவசியம். சன்னல் அருகில் வைப்பதும் நல்லது. காலை நேரத்தில் கிடைக்கும் மென்மையான சூரிய ஒளியைச் செடி ஓரளவு தாங்கும். ஆனால், மதிய நேரத்தில் கிடைக்கும் கடுமையான நேரடி வெய்யிலைத் தவிர்ப்பது நல்லது.
பச்சை இலைகளைக் கொண்ட போதோஸ் வகைகள், குறைந்த ஒளியையும் ஓரளவு தாங்கி வளரும். அதே நேரத்தில், பலநிற இலைகளைக் கொண்ட வகைகளில், இலைகளின் நிறத்தையும் வளர்ச்சியையும் பராமரிக்க, சற்று அதிகமான மறைமுக வெளிச்சம் தேவைப்படும்.
எவ்வளவு நீர்?
மண்ணில் வளர்க்கும் போது, தினமும் நீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. மேல் மண் உலர்ந்திருப்பதை விரலால் நோண்டிப் பார்த்து, தேவையான போது நன்றாக நீர் ஊற்றலாம். நீரை அதிகமாக ஊற்றினால், வேரழுகல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீரைக் குறைவாக ஊற்றினால், இலைகள் வாடக்கூடும். எனவே, செடிகளுக்கு அளவான நீரை வழங்குவதுடன், கூடுதலான நீர்த் தேங்காமல் இருக்க, நல்ல வடிகால் வசதியை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.
கிளைகளை வெட்ட வேண்டுமா?
கொடிகள் நீளமாக வளர்ந்து, கீழ்ப்பகுதி காலியாகத் தெரிந்தால், கிளைகளை வெட்டிச் சீரமைத்து, அவற்றிலிருந்து புதிய செடிகளை உருவாக்கலாம். வெட்டிய கிளைகளை வீணாக்காமல் நீரிலிட்டு வேர்களை முளைக்கச் செய்து மீண்டும் தொட்டியில் நடலாம். இதனால், ஒரே தொட்டியில் அடர்த்தியான, அழகான போதோஸ் செடி உருவாகும். அழகான போதோஸ் செடிகளை வளர்ப்போம்; வீட்டில் இயற்கையான அழகை உருவாக்கி இரசிப்போம்!

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

