My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி!

வெள்ளாடுகள் - ஏழைகளின் நடமாடும் வங்கி!

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் வெள்ளாடு வளர்ப்பு, விவசாயத்தின் ஒரு பகுதியாக விளங்கி வருகிறது. குறைந்த இடவசதிப் பராமரிப்பில் அதிக இலாபம் தருவதால், வெள்ளாடு வளர்ப்பு, இன்று முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது.

தற்போது, படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள், சுய வேலை வாய்ப்பில் ஈடுபட விரும்பும் மகளிர், தொழிலதிபர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என, பல்வேறு தரப்பினரும் வெள்ளாடுகளை வளர்க்க விரும்புகின்றனர். இந்த வெள்ளாடுகள், இறைச்சி, தோல், பால், உரோமம் மற்றும் சாணத்துக்காக வளர்க்கப்படுகின்றன.

ஏழைகளின் நடமாடும் வங்கி எனப்படும் வெள்ளாடுகள் வளர்ப்பு இலாபகரமாக இருப்பது, ஆடுகளின் இனவிருத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பொறுத்தே அமையும். சரியான காலத்தில் ஆடுகளை இனவிருத்திக்கு உட்படுத்தி, குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட காலத்தில், தரமான குட்டிகளை ஈனச் செய்வதன் மூலம், சிறப்பான பண்ணையை உருவாக்க முடியும். 

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளாடுகளைத் தேர்வு செய்தல்

வெள்ளாட்டுப் பண்ணையில் பெட்டை மற்றும் கிடாக்களை, அவற்றின் பாரம்பரியக் குணங்கள் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

  • இரண்டு பற்களைக் கொண்ட 5 வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • ஆடுகளை வாரச் சந்தையில் வாங்குவதை விட, தரமான பண்ணைகளில் இருந்து அல்லது நல்ல முறையில் வளர்த்து வரும் விவசாயிகளிடம் இருந்து வாங்குவது நல்லது.
  • மென்மையான மற்றும் பளபளப்பான தோலைக் கொண்ட, திடமான ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • முதுகுப்புறமும், பின்பகுதியும் அகன்று விரிந்திருக்கும் ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • ஈன்ற குட்டிகளைக் காக்கக்கூடிய மற்றும் நன்கு பால் வழங்கும் திறனுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் கிடாக்கள், திடமாக, சுறுசுறுப்பாக மற்றும் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியில் இருக்க வேண்டும். சிறந்த இனப்பெருக்கத் திறனுள்ள தாயின் பிள்ளைகளாக இருத்தல் வேண்டும்.

வெள்ளாடுகளை வளர்க்கும் முறைகள்

மேய்ச்சல் முறை: இம்முறையில், ஆடுகளை 7-8 மணி நேரம் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இதற்குத் திறந்தவெளி மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம். இரவில் ஆடுகள் தங்குவதற்கு ஏற்ற கொட்டிலை அமைக்க வேண்டும்.

கொட்டில் முறை: ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டிலில் வைத்தே தீவனம் கொடுத்து வளர்ப்பது கொட்டில் முறையாகும். இம்முறையில், ஒவ்வொரு ஆட்டுக்கும் 10-15 சதுரடி கூரை வசதியுள்ள இடமும், 25-30 சதுரடி திறந்த வெளியும் தேவை.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேய்ச்சலுடன் தீவனமும் இடும் முறை: இது, மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள பகுதிகளில், 4-5 மணி நேர மேய்ச்சலுக்குப் பிறகு, கொட்டிலில் வைத்துப் பசுந்தீவனம், அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் கொடுத்துப் பராமரிப்பதாகும். இம்முறையில், ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சியை அடைந்து, அதிக எடையுடன் திடமாக இருக்கும்.

கொட்டில் அமைத்தல்

  • ஆட்டுக் கொட்டிலை, மேட்டுப்பாங்கான இடத்தில், கிழக்கு மேற்காக அமைத்தால், நல்ல காற்றோட்டம் கிடைக்கும். கொட்டிலின் உயரம், 9 அடியிலிருந்து 12 அடி வரை இருக்கலாம்.
  • குட்டிக்கு 4 சதுரடி, பெட்டை ஆட்டுக்கு 10-15 சதுரடி, கிடாய்க்கு 15-20 சதுரடி வீதம் இடவசதி அளிக்க வேண்டும்.
  • கொட்டிலின் தரை உறுதியாகவும், ஈரத்தை உறிஞ்சும் தன்மையிலும் இருக்க வேண்டும்.
  • கொட்டிலைச் சுற்றிலும் தீவன மரங்களை வளர்த்தால், ஆடுகளுக்கு மரத்தழைத் தீவனமும் நிழலும் கிடைக்கும்.
  • ஆடுகளுக்குச் சுத்தமான குடிநீர்க் கிடைக்க வேண்டும். ஓரடி அகலம், 1.5 அடி ஆழம், 5-6 அடி நீளத்தில், தொட்டியைக் கட்டி, நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
  • கொட்டிலில் அடர் தீவனத் தொட்டியும், புல், மரத்தழைகளை அளிப்பதற்கான தொட்டியும் இருக்க வேண்டும். தீவனத்தொட்டி, ஒரு மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும்.

தீவனப் பராமரிப்பு

ஆடுகளின் இனவிருத்தி மற்றும் சினைப்பருவத்தை வெளிப்படுத்தும் திறன், அவற்றுக்குக் கிடைக்கும் தீவனத்தின் தன்மையைப் பொறுத்தே அமைகிறது. சினைப்பருவக் காலத்தில், நல்ல மேய்ச்சல் நிலம் மற்றும் தாதுப்புகள் அடங்கிய சரிவிகிதக் கலப்புத் தீவனத்தைக் கொடுக்கும் போது, இனப்பெருக்கத் திறன், கருத்தரிக்கும் திறன் மற்றும் பல குட்டிகளை ஈனும் திறனை ஆடுகள் அடையும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதைப்போலவே இனவிருத்திக் கிடாக்களின் தீவனத் தேவையையும் சரி செய்ய வேண்டும். இனவிருத்திக் காலத்தில், தாதுப்புகளுடன் புரதம் நிறைந்த தீவனத்தைக்  கொடுப்பதன் மூலம், ஆடுகளைச் சினைப்படுத்தும் திறன் கிடாக்களில் கூடும். இந்தக் கிடாக்களுக்கு அளவுக்கு அதிகமாகத் தீவனம் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். கூடுதலாகத் தீவனத்தைக் கொடுத்தால், எடையும் கொழுப்பும் கூடி, இனவிருத்தித் திறனைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

இனப்பெருக்க முறை

ஆடுகள் குறைவாக உள்ள மந்தைகளில், ஒரு கிடாய்க்குப் பிறக்கும் கிடாக்குட்டிகளையே திரும்பத் திரும்ப அந்த மந்தையின் இனவிருத்திக்குப் பயன்படுத்தும் போதும், ஒரு கிடாயையே, அதன் மூலம் பிறக்கும் பெட்டைகளின் இனவிருத்திக்குப் பல ஆண்டுகள் பயன்படுத்தும் போதும், நெருங்கிய இரத்தச் சொந்தங்கள் அதிகமாகும்.

இதனால், இனவிருத்தித் திறன், கருத்தரிக்கும் திறன், ஈனும் திறன், பால் சுரக்கும் திறன் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். மேலும், வளர்ச்சிப் பாதிப்பு மற்றும் குறைப் பிரசவமும் ஏற்படும். ஆகவே, உரிய காலங்களில் கிடாக்களை மாற்றி விட்டு, இரத்த உறவற்ற வெளி மந்தைகளில் இருந்து கிடாக்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

சினையாடுகள் பராமரிப்பு

புரத உணவு: சினையாடுகளின் புரதம் மற்றும் தாதுப்புத் தேவையைச் சரி செய்ய வேண்டும். மேலும், இதர தீவனத்துடன், தினமும் தரமான புரதம் நிறைந்த பயறுவகைப் பசுந்தீவனத்தை 1-2 கிலோ வீதம் கொடுக்க வேண்டும்.

தாதுப்புகள்: சினையாடுகளின் உடல் பராமரிப்புக்கு, கரு வளர்ச்சிக்கு, குட்டிகளின் வளர்ச்சிக்கு, பால் உற்பத்திக்கு மற்றும் குட்டிகளை ஈன்ற தாய் ஆடுகளின் உடல் நலனுக்கு, தாதுப்புகள் மிக மிக அவசியமாகும். எனவே, இவற்றைச் சரியான அளவில் ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

ஆடுகளில் ஏற்படும் தாதுப்புப் பற்றாக்குறையை, அவற்றின் செயல்பாடுகளில் இருந்து ஊகிக்க முடியும். கொட்டில் சுவரை நக்கிச் சுவைப்பது, மேய்ச்சலுக்குத் திறந்து விடும் போது, மண், மணல் போன்றவற்றை நக்கிச் சுவைப்பது போன்ற செயல்கள் மூலம், தாதுப்புப் பற்றாக்குறையை அறியலாம்.

இந்நிலையில், தாதுப்புக் கலவையைத் தீவனத்துடன் சேர்த்துக் கொடுப்பது அல்லது தாதுப்புக் கலவைக் கட்டிகளைக் கொட்டிலில் ஆங்காங்கே கட்டித் தொங்க விட்டு, நக்கிச் சுவைக்க விடுவதன் மூலம், ஆடுகளின் தாதுப்புத் தேவையைச் சரி செய்யலாம்.

இதர பராமரிப்பு

சினையாடுகளில் இருந்து கிடாக்களைப் பிரித்து வைக்க வேண்டும். மற்ற கால்நடைகளுடன் சினையாடுகளைச் சேர்த்து மேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மேய்ச்சல் போட்டியில் ஆடுகள் இடிபடவும், இதனால் கருச்சிதைவு, ஆடுகளில் இறப்பு போன்றவை ஏற்படவும் நேரலாம்.

இனச்சேர்க்கை செய்த முதல் 3-5 நாட்கள் மிகவும் முக்கியமானவை. சினைக்குப் போட்ட ஆடுகளை நீண்ட நேரம் வெய்யிலில் இருக்கச் செய்வது, நீண்ட தூரம் நடத்திச் செல்வது, மேய்ச்சலுக்காக அங்கும் இங்கும் விரட்டிச் செல்வது மற்றும் நிறைய ஆடுகளைச் சிறிய இடத்தில் அடைத்து வைப்பதால், உடலியக்கதில் மாற்றம் ஏற்பட்டு, உண்டான கரு அழிய வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சினையாடுகளைத் தனிப் பட்டியில் வைத்துப் பராமரிக்க வேண்டும். சினைக் காலத்தில் ஓர் ஆட்டுக்கு 250 கிராம் கலப்புத் தீவனம் வீதம் கூடுதலாகத் தர வேண்டும். சினை ஆடுகளைக் குளிப்பாட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தவறுதலாக அல்லது சினையாடுகளை விரட்டிப் பிடித்தால், அவற்றின் உடல் நலனில் பாதிப்பும், கருச்சிதைவும் ஏற்படலாம்.

நோய்த் தாக்கம்

ஆடுகள், நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரித் தாக்குதல்களால் பலவகையான நோய்களுக்கு உள்ளாகின்றன. இதனால், ஆடுகளின் வளர்ச்சித் திறனில் பாதிப்பு, சினையாடுகளில் குட்டி வீச்சு, குட்டிகள் மெலிந்து பிறத்தல், தாய் ஆடுகளில் பால் இல்லாமை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். ஆகவே, நோய்களில் இருந்து ஆடுகளைக் காக்க, உரிய தடுப்பூசிகளைச் சரியான காலத்தில் போட வேண்டும்.

ஒட்டுண்ணித் தாக்கம்

சினையாடுகளை ஒட்டுண்ணிகள் தாக்கினால், இரத்தச்சோகை, குட்டி வீச்சு, பால் உற்பத்திக் குறைதல் போன்றவை ஏற்படும். மேலும், உடல் நலன் பாதிக்கப்படுவதால், அந்த ஆடுகள் இறக்கவும் நேரிடும். ஆகவே, சரியான மருந்தைக் கொண்டு, உரிய காலத்தில் குடற்புழு நீக்கம் செய்தால், ஆடுகளில் ஏற்படும் கருச்சிதைவு, இரத்தச்சோகை போன்றவற்றைக் கட்டுப்படுத்தி, தரமான குட்டிகளைப் பெறலாம்.

குடற்புழு நீக்கம் செய்யும் முறை

குடற்புழுத் தாக்கம் இருப்பதை உறுதி செய்த பிறகு தான், குடற்புழு நீக்க மருந்தைக் கொடுக்க வேண்டும். குடற்புழுத் தாக்கம் இருப்பதை உறுதி செய்யாமல், அடிக்கடி குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்தால், அந்தப் புழுக்கள் மருந்தை எதிர்த்து வாழும் சக்தியைப் பெற்று விடும். அதன் பிறகு, எவ்வளவு மருந்தைக் கொடுத்தாலும் குடற் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாது.

மேலும், ஒரே வகை மருந்தைத் தொடர்ந்து கொடுக்கக் கூடாது. மேலும், ஆட்டின் உடல் எடைக்கு ஏற்ப, சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லையெனில் புழுக்கள் இறக்காமல் மருந்தை எதிர்த்து வளரும் சக்தியைப் பெற்று விடும். குடற்புழு நீக்க மருந்தை, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் தான் கொடுக்க வேண்டும்.


வெள்ளாடுகள் - ஏழைகளின் நடமாடும் வங்கி! DR.C.VELLADURAI https://pachaiboomi.net/46789656-2/

மருத்துவர் சி.வெள்ளதுரை,

முனைவர் இரா.சுபாஷ், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம், பர்கூர், அந்தியூர், ஈரோடு – 638 501, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்: