My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும்!

வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும்! வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும் https://pachaiboomi.net/6485996-2/

வெள்ளாடுகள், ஏழைகளின் வறுமையைப் போக்கும் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. தற்போது, கிராமப்புற ஏழை விவசாயிகள் முதல் நடுத்தர விவசாயிகள் வரை வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறைச்சிக்காக வளர்க்கப்படும் வெள்ளாட்டு இனங்களான, ஜமுனாபாரி, பீட்டல், சிரோகி போன்றவை, ஆங்காங்கே வளர்க்கப்பட்டு வந்தாலும், தலைச்சேரி வெள்ளாட்டு இனத்தின் பண்புகளைக் கொண்ட, நாட்டு வெள்ளாடுகளே பெருமளவில் இலாபகரமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் ஒன்றிரண்டு வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அதிக எண்ணிக்கையில் நாட்டு வெள்ளாடுகளை வாங்குவதற்குப் பல்வேறு பகுதிகளுக்கு அலைய வேண்டியுள்ளது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்நிலையைத் தவிர்க்கும் வகையில், வெள்ளாடுகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் கிராமப்புற விவசாய உற்பத்தியாளர்களும், வெள்ளாட்டு வணிகர்களும் ஒருங்கிணைந்து, வெள்ளாட்டுச் சந்தைகளை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஆங்காங்கே சில இடங்களில், வெள்ளாட்டுச் சந்தைகள் நடைபெற்று வந்தாலும், வெள்ளக்கோவில் முத்தூர் வெள்ளாட்டுச் சந்தையானது, அதிகமான வெள்ளாடுகள் விற்பனைக்கு வரும் சந்தையாக வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இங்கு சனிக்கிழமை தோறும் வெள்ளாட்டுச் சந்தை கூடுகிறது.

இந்தச் சந்தைக்கு வெள்ளாடுகள் மட்டுமின்றி, செம்மறியாடுகளும் பெருமளவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், பரமத்தி, கன்னிவாடி, கரூர் மணல்மேடு, கரூர் பாளையம், குண்டடம், பல்லடம் ஆகிய இடங்களில், வெள்ளாட்டுச் சந்தைகள் சிறியளவில் நடைபெற்று வருகின்றன.

சில நேரங்களில் ஒருசில வணிகர்கள், சந்தைக்குக் கொண்டு வரும் ஆடுகளுக்கு நீரை ஊற்றியோ, குடிக்க வைத்தோ அல்லது வறண்ட கொள்ளு மற்றும் சோளத்தைத் தின்ன வைத்து நீரை ஊற்றி அவற்றின் உடல் எடையைக் கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து விடுவதும் உண்டு. எனவே, ஆடுகளை வாங்கும் போது, கவனமாக இருந்து சிறந்த வெள்ளாடுகளை வாங்க வேண்டும்.

நம் நாட்டு இனங்கள்

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஜமுனாபாரி (Jamunapari): இந்த ஆட்டினம் உத்தரபிரதேச மாநிலம் எட்டாவி மாவட்டத்தைச் சேர்ந்தது. நமது நாட்டின் இனங்களிலேயே மிகவும் பெரியதும், கம்பீரமான தோற்றமும் உடைய இனம். காதுகள் பெரியதாகவும், மடிந்தும் தொங்கிக் கொண்டிருக்கும். முகம் வெள்ளை நிறத்திலும், கழுத்து இளம் கருஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். உடலில் சிவப்பு அல்லது கரும் புள்ளிகள் இருக்கும். பின்னந்தாடையில், அடர்த்தியான உரோமம் காணப்படும். கிடா 65-75 கிலோ எடையும், பெட்டை ஆடு 45-60 கிலோ எடையும் இருக்கும். ஓர் ஆடு தினமும் 1.5-2.0 கிலோ பாலைக் கொடுக்கும்.

தலைச்சேரி (Thalassery): இந்த ஆட்டினம், கேரள மாநிலம், மலபார் கோட்டயம் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆடுகள், மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படும். வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும் ஆடுகள் ஒவ்வொன்றும் 2-3 குட்டிகளை ஈனும். இந்த ஆட்டுக்கிடா 40-50 கிலோ எடையும், பெட்டை ஆடு 30 கிலோ எடையும் இருக்கும். இது, நன்றாகப் பாலைத் தரும் இனமாகும்.

பீட்டல் (Beetal): இந்த ஆடுகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன. இந்த ஆடுகளும் தோற்றத்தில் ஜமுனாபாரி ஆடுகளைப் போலவே இருக்கும். ஆனால், உருவத்தில் சிறியதாக இருக்கும். கிடாக்கள் கறுப்பு நிறத்தில் தாடியுடன் இருக்கும். காதுகள் வெற்றிலையைப் போல இருக்கும். வளர்ந்த கிடா 60-70 கிலோ எடையும், பெட்டை ஆடு 35-45 கிலோ எடையும் இருக்கும்.

சிரோகி (Sirohi): இந்த இனம் இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆடுகள் பழுப்பு, வெள்ளை அல்லது இரண்டும் கலந்த நிறத்தில், நடுத்தர உடலமைப்பில் இருக்கும். வளர்ந்த கிடா 45-50 கிலோவும், பெட்டை ஆடு 20-25 கிலோவும் இருக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

இதுவரை கூறியுள்ள இனங்களைத் தவிர, பார்பாரி, மார்வாரி, சத்தியவாரி போன்ற பல்வேறு இனங்கள், நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன.

தமிழக வெள்ளாட்டு இனங்கள்

தமிழ்நாட்டில், கன்னியாடு, கொடியாடு, பள்ளையாடு, சேலம் கறுப்பு ஆடு, எனப் பல இனங்கள் உள்ளன. இவற்றில் கன்னியாடு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஆடுகள் கறுப்பு நிறத்தில் காணப்படும். முகத்தில் இரண்டு வெள்ளைக் கோடுகளுடன், அடி வயிற்றுப் பகுதி முதல் வால் வரை, வெள்ளி நிறத்தில் காணப்படும்.

இவ்வகை ஆடுகளைப் பால்கன்னி என்றும் கூறுவர். வெள்ளைக்குப் பதிலாகச் சிவப்பு நிறமாக இருந்தால் செங்கன்னி என்று கூறுவர். இந்த ஆடுகள் ஒவ்வொன்றும் 2-3 குட்டிகளை ஈனும். இந்த ஆட்டுக்கிடா 35-40 கிலோ எடையும், பெட்டை ஆடு 28-30 கிலோ எடையும் இருக்கும்.

வெளிநாட்டு இனங்கள்

நம் நாட்டு வெள்ளாடுகளின் பால் உற்பத்தி மற்றும் வளர்ச்சியைக் கூட்டும் கலப்பினங்களை உருவாக்கும் நோக்கில், சில வெளிநாட்டு இனங்கள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன.

ஆல்பைன் (Alpine): இந்த இனம், ஆல்ப்ஸ் மலைத்தொடரைப் பிறப்பிடமாகக் கொண்டது. வெப்பப் பகுதிகளில் இந்த ஆடுகள் வாழப் பழகிக் கொள்கின்றன. இந்த ஆட்டுக்கிடா 65-80 கிலோ எடையும், பெட்டையாடு 50-60 கிலோ எடையும் இருக்கும்.

நூபியன் (Nubian): இந்த இனம், ஜெர்ஸி பசு இனத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது, இங்கிலாந்து நாட்டில், இந்திய இனமான ஜமுனாபாரி மற்றும் எகிப்திய வெள்ளாடுகளை கலந்து உருவாக்கப்பட்ட இனமாகும். மூக்கு ரோமன் அமைப்பில் இருக்கும். காதுகள் நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த ஆட்டுக்கிடா 65-80 கிலோவும், பெட்டை ஆடு 50-60 கிலோ எடையும் இருக்கும்.

சானன் (Saanen): இந்த இனம் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது. இவ்வின ஆடுகள் தாடியுடனும், தாடியில்லாமலும் காணப்படும். காதுகள் கூர்மையாக, முன்னோக்கி இருக்கும். முதுகின் பின்பகுதியில் உரோமம் நீளமாக வளர்ந்து, தொடைகள் பக்கம் தொங்கிக் கொண்டிருக்கும்.

போயர் (Boer): இந்த இனம் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்ததாகும். இந்த ஆடுகளின் தலையும் கழுத்தும் பழுப்பு நிறத்திலும், மற்ற பகுதிகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.  கால்கள் குட்டையாக இருக்கும். வளர்ந்த கிடா 100-120 கிலோ எடையும், பெட்டையாடு 70-80 கிலோ எடையும் இருக்கும்.

வெள்ளாடுகளைத் தேர்வு செய்யும் முறைகள்

  • வெள்ளாட்டுப் பண்ணையில், பெட்டை ஆடுகள் மற்றும் கிடாக்களை, அவற்றின் பாரம்பரியக் குணங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
  • பெட்டை ஆடுகள், 2-3 குட்டிகளை ஈனும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். கிடாக்கள் உயரமாகவும், அகன்ற நெஞ்சுடனும், நீண்ட உடலுடனும் இருக்க வேண்டும்.
  • தரமான 30-35 சதவீதப் பெட்டைக் குட்டிகளை, 3 மாத வயதில் தேர்வு செய்ய வேண்டும். பெட்டை ஆடுகள், 6–9 மாதங்களில் பருவமடையும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.
  • இனப்பெருக்கக் கிடாக்குட்டிகளை 6 மாத வயதில் வாங்க வேண்டும். கிடாக்கள், 9-12 மாதங்களில் பருவமடையும் தன்மையில் இருக்க வேண்டும். இந்தக் கிடாக்கள், 2-3 குட்டிகளை ஈனும் பெட்டை ஆட்டிலிருந்து பிறந்திருக்க வேண்டும்.
  • மூன்று மாதக் குட்டிகள் அல்லது இரண்டு பல் வயதுள்ள ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. இந்த ஆடுகளின் தோலும் உரோமமும் மென்மையாக மற்றும் மினுமினுப்பாக இருக்க வேண்டும்.
  • அகன்ற, சுறுசுறுப்பான மற்றும் தெளிவான பார்வையுள்ள கண்களைக் கொண்ட ஆடுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆடுகளின் முதுகுப்புறமும் பின்பகுதியும் அகன்று விரிந்திருக்க வேண்டும். விலா எலும்புகள் நன்கு விரிந்திருக்க வேண்டும்.
  • ஆடுகளை வாங்கும் போது, அவற்றின் நாசித்துளை மற்றும் வாய்ப்பகுதியை முழுமையாகச் சோதிக்க வேண்டும். நாசித்துளையில் சளி மற்றும் புண்கள் இல்லாமலும், வாயில் அதிகமான உமிழ்நீர்ச் சுரப்பு மற்றும் புண்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.
  • ஆடுகளின் ஆசனவாய், கழிச்சல் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். கால்கள் நேராக, உறுதியுடன் இருக்க வேண்டும்.

இப்படி, தரமான வெள்ளாடுகளை வாங்கி வளர்த்தால் நல்ல வருவாயை அடையலாம். மேலும், தரிசு நில மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஊக்கமளித்து வரும் இன்றைய நிலையில், வெள்ளாடுகளுக்குத் தேவைப்படும் பசுந்தீவனப் பயிர்களான, வேலிமசால், முயல் மசால், சூபாபுல், கினியாப்புல், கிளைரிசிடியா ஆகியவற்றைப் பயிரிட்டு, வெள்ளாடுகளுக்குக் கொடுத்து வளர்த்தால், விவசாயிகள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.


வெள்ளாட்டு இனங்களும் அவற்றைத் தேர்வு செய்யும் முறைகளும்! DR.C.VELLADURAI https://pachaiboomi.net/6485996-2/

மருத்துவர் சி.வெள்ளதுரை,

முனைவர் இரா.சுபாஷ், பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம், பர்கூர், அந்தியூர், ஈரோடு – 638 501, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்:

  • வெள்ளாடுகள் – ஏழைகளின் நடமாடும் வங்கி!

  • இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்!

  • இந்திய செம்மறி ஆட்டினங்கள்!

  • தீவன உற்பத்தியில் எல் நினோவின் தாக்கத்தைக் குறைக்கும் உத்திகள்!

  • குளிர்கால அயர்ச்சியில் இருந்து கறவை மாடுகளைப் பாதுகாத்தல்!

  • குறைந்த செலவிலான கால்நடைத் தீவனம் அசோலா!

  • காடை வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

  • முயல் வளர்ப்பில் கோடைக்கால வெப்ப அழுத்த மேலாண்மை!

  • நிலையான மற்றும் கூடுதல் பால் உற்பத்திக்கான வழிமுறைகள்!