My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்!

இந்தியாவின் முக்கிய வெள்ளாட்டினங்கள்!

இந்தியாவில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. எளிதில் அடையாளம் காணத்தக்க தோற்றம் மற்றும் குணங்களில், வெவ்வேறு பகுதிகளில் இந்த ஆடுகள் உள்ளன. ஒவ்வொரு இனத்தின் பெயரும், வாழும் பகுதி, நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ இருபது வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வெள்ளாட்டு இனங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கன்னியாடுகள்

இந்த ஆடுகள், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி ஆகிய வட்டங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய வட்டங்களிலும், கரிசல் மண் மற்றும் குன்றுகள் நிறைந்த பகுதிகளிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இவற்றின் உடல் முழுவதும் கறுப்பாகவும், முன் தலை மற்றும் காதுகளில் இரண்டு வெள்ளைக் கோடுகளும் இருக்கும். அடிவயிறு, கால்களின் உட்பகுதி, கால் குளம்புகளின் மேல்பகுதி வெள்ளையாக இருக்கும். இந்த ஆடுகளைப் பால் கன்னி என்றும், வெள்ளைக்குப் பதில் சிவப்பாக இருந்தால் செங்கன்னி எனவும் அழைக்கப்படும்.

இந்த ஆடுகள், 85 செ.மீ. உயரம் இருக்கும். கிடா ஆடு 50 கிலோவும், பெட்டை 30 கிலோவும் இருக்கும். ஓர் ஈற்றில் இந்த ஆடு, இரண்டிலிருந்து நான்கு குட்டிகள் வரை ஈனும். கன்னியாடுகள் தேவைப்பட்டால், திங்கள் கிழமை தோறும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடக்கும் வாரச் சந்தையில் வாங்கலாம்.

கொடியாடுகள்

இந்த ஆடுகள், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளிலும், அதையொட்டிய இராமநாதபுரத்திலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. உயர்ந்து நீண்ட கழுத்தும், உயர்ந்த காலும், மெலிந்த உடலமைப்பும் கொண்டவை.

இந்த ஆடுகள் இரண்டு நிறங்களில் இருக்கும். வெள்ளை நிறத்தில் கறுப்பு மையை அள்ளித் தெளித்ததைப் போல இருந்தால், கரும்போரை அல்லது புல்லைப்போரை என்றும், வெள்ளையில் செந்நிறம் கலந்திருந்தால், செம்போரை எனவும் அழைக்கப்படும்.

இந்த ஆடுகளைப் பொதுவாக, போரை ஆடுகள் என அழைப்பார்கள். இந்த ஆடுகள் 100 செ.மீ. உயரம் இருக்கும். கிடா ஆட்டின் எடை 40-70 கிலோ, பெட்டை ஆட்டின் எடை 32 கிலோ இருக்கும். இந்த ஆடுகளுக்குக் கொம்புகள் இருக்கும். கடலோர மாவட்டப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற ஆடுகள்.  

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சேலம் கறுப்பு ஆடுகள்

இந்த ஆடுகள், சேலம் மாவட்டத்தின் ஓமலூர், மேச்சேரிப் பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றின் உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும். கொம்புகள் பின்னோக்கி வளைந்திருக்கும். ஈற்றுக்கு ஒரு குட்டி தான் போடும். இந்த ஆடுகளை, வரையாடுகள் என்றும் சொல்லலாம்.

பள்ளையாடுகள்

இந்த ஆடுகள், மிகவும் குட்டையாக இருக்கும். கால்கள் குட்டையாகவும், உடம்பு அகன்றும் இருக்கும். ஓர் ஈற்றில் ஓர் ஆடு பல குட்டிகளை ஈனும். சிறிய கொம்புகள் மற்றும் மூலிக்காதுகள் இந்த ஆடுகளின் முக்கிய அடையாளங்கள். இந்த ஆடுகளைக் குள்ள ஆடுகள் என்றும், சீனி ஆடுகள் என்றும் சொல்வதுண்டு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மோளையாடுகள்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையப் பகுதியிலும், கோபி மற்றும் குன்னத்தூர் வட்டத்திலும் மோளையாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நடுத்தர உயரம், நல்ல சதைப்பற்று, தூய வெள்ளை ஆகியன, இந்த ஆடுகளின் அடையாளங்கள். தலைச்சேரி ஆடுகளைப் போல இருக்கும். ஓர் ஈற்றில் 2-4 குட்டிகளை ஈனும். வளர்ந்த ஆட்டின் உடல் எடை 30-36 கிலோ இருக்கும்.

ஜமுனாபாரி ஆடுகள்

இவ்வின ஆடுகள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவை. இவற்றின் உடல் வெள்ளை நிறத்திலும், கழுத்திலும் காதுகளிலும் கரும் புள்ளிகளுடன்  இருக்கும். இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களைக் கொண்ட இந்த ஆடுகள், உயரமாக, பெரிய உடலமைப்புடன் இருக்கும்.

ரோமானிய மூக்கும், அதன் மேலுள்ள முடிக்கற்றையும், இந்த ஆடுகளின் வாய்க்கு, கிளியின் வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கும். கொம்புகள் குட்டையாக, தட்டையாக, பின்னோக்கி முறுக்கியிருக்கும். தொடையில் நீளமான முடிக்கற்றைகள் இருக்கும். காதுகள் நீளமாகத் தொங்கும்.

வளர்ந்த கிடா 90-100 செ.மீ. உயரம், 65-80 கிலோ எடையிலும், பெட்டையாடு 70-80 செ.மீ. உயரம், 45-60 கிலோ எடையிலும் இருக்கும். பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டியை ஈனும். பிறந்த குட்டியின் எடை 4 கிலோ இருக்கும். இந்த ஆடுகள், தினமும் 2-2.5 லிட்டர் பாலைத் தரும். இந்தப் பாலில், 3-3.5 சதம் கொழுப்புச் சத்து இருக்கும்.

பீட்டல் ஆடுகள்

இந்த ஆடுகள், பஞ்சாப் மாநிலத்தில், பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை, ஜமுனாபாரி ஆடுகளை விட உயரத்தில் சிறியதாக இருக்கும். உடல் முழுவதும் வெண்புள்ளிகளுடன் சிவப்பு நிறத்தில் இருக்கும். கிடாக்களுக்குத் தாடி இருக்கும்.

பெட்டை ஆடுகள் 20-22 மாதங்களில் இனப்பெருக்கத்துக்கு வரும். இவற்றின் மூலம் பிறக்கும் குட்டியின் எடை 3 கிலோ இருக்கும். வளர்ந்த கிடாயின் எடை 50-70 கிலோ இருக்கும். இந்த ஆடு ஒரு நாளைக்கு 1-2 லிட்டர் பாலைத் தரும்.

பார்பாரி ஆடுகள்

குறைந்த உரோமமும், நீண்ட கொம்புகளும் கொண்ட இவ்வின ஆடுகள், டில்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அரியானா மாநிலத்தின் குர்கயான், பானிபட், கர்னால், ரோடக் ஆகிய பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன.

இந்த ஆடுகள், பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்குப் பயன்படுகின்றன. இவற்றின் உடல், வெள்ளை நிறத்தில், பழுப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். வளர்ந்த கிடா 35-45 கிலோ எடையுடனும், பெட்டை 25-35 கிலோ எடையுடனும் இருக்கும்.

சிறந்த இனப்பெருக்கத் திறனுள்ள இந்த ஆடுகள்,  12-15 மாதங்களில் இருமுறை குட்டிகளை ஈனும். ஒவ்வொரு முறையும் 2-3 குட்டிகளை ஈனும். தினமும் 1-1.5 லிட்டர் பாலைத் தரும். இந்தப் பாலில் 5 சதவீதம் கொழுப்புச் சத்து இருக்கும்.

தலைச்சேரி ஆடுகள்

இந்த ஆடுகள், மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படும். கேரள மாநிலத்தில் காணப்படும் இந்த ஆடுகள், இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவை, வெள்ளை, பழுப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

வளர்ந்த தலைச்சேரிக் கிடா 40-50 கிலோ எடையும், பெட்டையாடு 30-40 கிலோ எடையும் இருக்கும். ஓர் ஆடு தினமும் 1-2 லிட்டர் பாலைத் தரும். சிறந்த இனப்பெருக்கப் பண்புகளைக் கொண்ட இந்த ஆடுகள், ஓர் ஈற்றில் 2-3 குட்டிகளை ஈனும்.

சிரோகி ஆடுகள்

இந்த ஆடுகள், பழுப்பு நிறத்தில், கறுப்பு அல்லது வெளிர் திட்டுகளுடன் காணப்படும். நடுத்தர உடலமைப்பில் இருக்கும். வால் சுருண்டு காணப்படும். கொம்புகள் குட்டையாக, முன்னோக்கியும் பின்னோக்கியும், வளைந்தும் இருக்கும்.

பிறந்த குட்டியின் எடை 2 கிலோ இருக்கும். வளர்ந்த கிடா 50 கிலோ எடையும், பெட்டையாடு 23 கிலோ எடையும் இருக்கும். இந்த ஆடுகள் 19 மாதங்களில் இனப்பெருக்கத் தகுதியை அடையும். ஆண்டுக்கு ஒருமுறை இரட்டைக் குட்டிகளை ஈனும்.

உஸ்மனாபாடி ஆடுகள்

இந்த ஆடுகள் பெரும்பாலும் கறுப்பு நிறத்தில் அல்லது வெள்ளை, பழுப்பு நிறத்தில் காணப்படும். நீண்ட அல்லது குட்டையான உரோமங்களுடன் இருக்கும். உயரமான கால்கள் மற்றும் பெரிய உடலமைப்பில் இருக்கும்.

இந்த ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இவை, 19-20 மாதங்களில் இனப்பெருக்கத் திறனை அடையும். ஆண்டுக்கு ஒருமுறை ஈனும். பிறக்கும் குட்டியின் எடை 2.4 கிலோ இருக்கும்.

வங்காளக் கறுப்பு ஆடுகள்

இந்த ஆடுகள், கறுப்பு நிறத்தில் இருக்கும். இவற்றின் உரோமம் சிறியதாகவும், மென்மை மற்றும் பளப்பளப்பாகவும் இருக்கும். இந்த ஆடுகள், குட்டையான கால்களுடன் சிறிய உடலமைப்பில் இருக்கும். கிடா, பெட்டை ஆகிய இரண்டு ஆடுகளுக்கும் தாடி இருக்கும்.

வளர்ந்த கிடா 15 கிலோ எடையும், பெட்டையாடு 12 கிலோ எடையும் இருக்கும். இந்த ஆடுகள் 9-10 மாதங்களில் இனப்பெருக்கத் திறனை அடையும். ஆண்டுக்கு இருமுறை ஈனும். ஓர் ஈற்றில் 2-3 அல்லது நான்கு குட்டிகள் வரை ஈனும். தரம் மிகுந்த இந்த ஆடுகளின்  தோல், விலை மதிப்புள்ள காலணிகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

செகு ஆடுகள்

இந்த ஆடுகள், பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும், பழுப்புக் கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இவற்றின் உரோமம் நீளமாகவும், காதுகள் சிறியதாகவும், கால்கள் நடுத்தரமாகவும் இருக்கும். கொம்புகள் வளைந்தும் முறுக்கியும் இருக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை ஈனும். பிறக்கும் குட்டியின் எடை 2 கிலோ இருக்கும். வளர்ந்த கிடா 39 கிலோ எடையும், பெட்டையாடு 26 கிலோ எடையும் இருக்கும். இந்த ஆடுகள், உப்பு மற்றும் சிறியளவு சுமைகளைத் தூக்கிச் செல்வதற்குப் பயன்படுகின்றன. இவை, பாஸ்மினா என்னும் ரோம உற்பத்திக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.

சங்தங்கி ஆடுகள்

இந்த ஆடுகள், பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும், பழுப்பு, சாம்பல், கறுப்பு ஆகிய நிறங்களிலும் இருக்கும். இந்த ஆடுகளின் கால்கள் குட்டையாகவும், உடலமைப்பு வலிமையாகவும் இருக்கும். இவற்றின் கொம்புகள் அரை வட்டமாக இருக்கும்.

சுமார் 20 மாதங்களில் இந்த ஆடுகள் இனப்பெருக்கத் திறனை அடையும். ஓர் ஆடு, ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு குட்டியை மட்டுமே ஈனும். பிறக்கும் குட்டியின் எடை 2.1 கிலோ இருக்கும். இவை, பாஸ்மினா என்னும் உரோம உற்பத்திக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.


தொகுப்பு: மு.உமாபதி.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

விளம்பரம்:


விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

மேலும் படிக்கலாம்: