செம்மறியாடு வளர்ப்பில், தீவனப் பராமரிப்பு மிகவும் முக்கியமானது. சத்துள்ள தீவனத்தைத் தேவையான அளவில் அளித்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும். புல் வகைகள், பயறுவகைத் தீவனப் பயிர்கள் மற்றும் மர இலைகள் போன்றவற்றைப் பசுந்தீவனமாக அளிக்கலாம். இவ்வகையில், செம்மறி ஆடுகளின் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் அளிக்க வேண்டிய தீவன முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பெட்டை ஆடுகளின் இனவிருத்திக்கான தீவனம்
பெட்டை ஆடுகளின் உடல் பருமனைக் குறைத்தல்: உடல் பருமனால் உடலில் அதிகமாகச் சேரும் கொழுப்பு, இனப்பெருத்தத் திறனைக் குறைக்கும். எனவே, இனப்பெருக்கக் காலம் தொடங்குவதற்கு முன், 1.5-2 மாதங்களுக்கு ஒருமுறை ஆடுகளின் உடல் பருமனைக் கண்காணிக்க வேண்டும்.
உடல் பருத்த பெட்டை ஆடுகளை, தீவனக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சி மூலம், சீரான உடலமைப்புக்குப் படிப்படியாகக் கொண்டு வர முடியும். பெட்டை ஆடுகளை இனப்பெருக்கத்துக்குத் தயார்ப்படுத்த, தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சியை அளிக்க வேண்டும்.
இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனம்: இனப்பெருக்கத்துக்கு 2-3 வாரங்களுக்கு முன்பே, பெட்டை ஆடுகளின் உடல் எடையைக் கூட்டும் வகையில், அவற்றின் தீவனத்தில், சத்துகளைச் சேர்க்க வேண்டும். இதன் மூலம், பெட்டை ஆடுகள் விரைவில் சினைப்பருவம் எய்தவும், குட்டிகள் ஈனவும் வழி வகுக்கலாம்.
மேலும், பெட்டை ஆடுகளின் சினைப்பருவ இடைவெளி, சமமாகவும், குட்டிகளை ஈனும் அளவு சீராகவும் அமையும். அது மட்டுமின்றி, குட்டி ஈனும் விகிதத்தையும், ஒரே ஈற்றில் பல குட்டிகளை ஈனும் விகிதத்தையும் அதிகரிக்கலாம்.
தீவன மூலப்பொருள்கள் கிடைப்பதைப் பொறுத்து, வெவ்வேறு வகையான இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இனப்பெருக்கக் காலக் கூடுதல் தீவனக் கலவைகள்: பயறு மற்றும் புல்வகைத் தீவனங்களின் கலவை. ஒரு ஆட்டுக்கு, ஒரு நாளைக்கு, புல் வகையுடன், 150 கிராம் கோதுமைத் தவிடு. புல் வகையுடன், 250 கிராம் தானியம் மற்றும் 450 கிராம் புண்ணாக்கு.
பயறுவகை உலர் செடிகளுடன், 100 கிராம் கோதுமைத் தவிடு, 150-200 கிராம் தானியம் மற்றும் ஒரு ஆட்டுக்கு, ஒரு நாளைக்கு அதன் எடையில் 10 சதவீதப் பசும்புல் மற்றும் 150-200 கிராம் அடர் தீவனம்.
சினைக்காலத்துக்கு முன்பும், இடையிலும் தீவனமளித்தல்: சினைக் காலத்தில் நல்ல தீவனத்தை அளித்தால் தான், நல்ல குட்டிகளைப் பெற முடியும். போதுமான மற்றும் சத்துள்ள தீவனத்தை அளிக்கா விட்டால், நலிந்த மற்றும் இறந்த குட்டிகள் பிறக்க வாய்ப்புண்டு.
ஈற்றின் மூலம் திடமான குட்டிகள் கிடைப்பதை உறுதி செய்யும். பெட்டை ஆடுகளின் உற்பத்தித் திறன் காலத்தை நீட்டிக்கும். பெட்டை ஆடுகளின் பால் உற்பத்தி அதிகமாவதால், தரமான குட்டிகளை உருவாக்க முடியும்.
மேலும், இதனால் கம்பள உற்பத்தியும் அதிகமாகும். குட்டிகளில் முடக்குவாதம் ஏற்படுவதைக் குறைக்கும். பெட்டை ஆடுகள் உடல் சோர்வினால், குட்டிகளை ஒதுக்குவதும் குறையும்.
சினை ஆடுகளுக்கான தீவனக் கலவை: நல்ல மேய்ச்சல். ஓர் ஆட்டுக்குத் தினமும், 1-2 கிலோ சோளப் பதனப் பசுந்தீவனத்துடன், அரை முதல் ஒரு கிலோ பயறுவகை உலர் செடிகளை அளித்தல்.
ஓர் ஆட்டுக்குத் தினமும், போதியளவில் மக்காச்சோளம் அல்லது சோளப் பசுந்தீவனம் மற்றும் 50 கிராம் கடலைப் புண்ணாக்கைத் தருதல். ஓர் ஆட்டுக்குத் தினமும், அறுவடைக்குப் பிந்தைய நிலங்களில் மேய்ச்சலுடன், 100 கிராம் புண்ணாக்கைத் தருதல்.
சினைக்கால இறுதியிலான தீவனப் பராமரிப்பு: பெட்டை ஆடுகளை அறுவடைக்குப் பிந்தைய நிலங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பலாம். ஓர் ஆட்டுக்குத் தினமும், 5 கிலோ பசும்புல் வீதம் அளிக்க வேண்டும்.
சினைக் காலத்தின் கடைசி மாதத்தில் தான், கருவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். எனவே, தீவனத்தில் போதிய எரிசக்தி இல்லாவிடில், ஆடுகள் சினைப்பருவ நச்சேற்றத்தால் பாதிக்கப்படும்.
அதனால், கரும்புச் சர்க்கரைப் பாகு அல்லது பார்லி, மக்காச்சோளம், ஓட்ஸ் போன்ற தானியங்களை, ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 225 கிராம் வீதம் தர வேண்டும். மேலும், ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 7 கிலோ பசும்புல் வீதம் அளிக்க வேண்டும்.
சினைக் காலத்தின் கடைசி 45 நாட்களுக்கு, தரமான 600 கிராம் பயறுவகை உலர் செடிகள் அல்லது 12-14 சதவீத அளவில் செரிமானக் கச்சாப் புரதம் மற்றும் 65-70 சதவீத அளவில், மொத்தச் செரிமானச் சத்தடங்கிய அடர் தீவனம் 300 கிராம் அளிக்கப்பட வேண்டும்.
ஈனும் காலத்திலான தீவனப் பராமரிப்பு: குட்டிகளை ஆடுகள் ஈனும் காலம் நெருங்கும் போது, தீவனத்தில் தானியங்களின் அளவை வெகுவாகக் குறைத்து, தரமான உலர் புல் தீவனத்தைப் போதியளவில் அளிக்க வேண்டும். குட்டிகளை ஈன்ற பின், பெட்டை ஆடுகளின் தீவன அளவைப் படிப்படியாகக் கூட்டி, அதை ஒரு நாளைக்கு 6-7 முறையாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
எளிதில் செரிக்கக்கூடிய தீவன மூலப்பொருள்களை, குட்டிகளை ஈன்ற முதல் சில நாட்களிலேயே தீவனத்தில் சேர்க்க வேண்டும். கோதுமைத் தவிடு மற்றும் பார்லி அல்லது ஓட்ஸ் அல்லது மக்காச்சோளத்தை 1:1 வீதம் சேர்த்தல் நல்லது.
குட்டிகளை ஈன்றதும், பெட்டை ஆடுகளுக்குப் போதியளவில் மிதமான வெந்நீரைத் தர வேண்டும். முதல் குட்டியை ஈன்றதும், குட்டிகளுக்கான ஆரம்பக்காலத் தீவனத்தைக் கணக்கிடத் தொடங்கி விட வேண்டும். நிறைவான ஆரம்பக்காலத் தீவனமென்பது, 16 பாகம் கடலைப் புண்ணாக்கு, 84 பாகம் பார்லி அல்லது மக்காச்சோளம் மற்றும் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனம் அடங்கியதாகும்.
பால் கொடுக்கும் தாய் ஆடுகளின் தீவனப் பராமரிப்பு: பால் உற்பத்தியை நன்கு பராமரித்து, குட்டிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தத் தேவையான தீவனப் பொருள்களை, தாய் ஆடுகளின் தீவனத்தில் சேர்க்க வேண்டும். இந்த ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் இருந்தாலே, அவற்றின் தேவைகள் பெருமளவில் சரியாகி விடும்.
கூடுதல் சத்துகள் தேவைப்படும் போது, ஒரு தாய் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய உணவை, 450 கிராம் நல்ல உலர்புல், 1.4 கிலோ பதனப் பசுந்தீவனம் அல்லது 250 கிராம் தானியங்கள் மூலம் ஈடு செய்ய வேண்டும்.
பசும்புல் தீவனத்தைத் தருவதாக இருந்தால், குட்டிகளை ஈன்றதில் இருந்து 75 நாட்களுக்கு, ஓர் ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 10 கிலோ பசும்புல் அல்லது 400 கிராம் அடர் தீவனம் அல்லது 800 கிராம் தரமான பயறுவகை உலர் செடிகள் வீதம் தருவதுடன், 8 மணி நேர மேய்ச்சலும் அளிக்க வேண்டும்.
குட்டிகளைப் பிரித்தது முதல் அடுத்த சினைக்காலம் வரையான தீவனப் பராமரிப்பு: தீவனச் சத்துத் தேவைகளைப் பொறுத்தவரை, இந்தக் காலம் தான் அதிகக் கவனத்துக்கு அவசியமற்ற காலம். பெட்டை ஆடுகளை முழுமையாக மேய்ச்சலிலேயே பராமரிக்கலாம். இந்தக் காலத்தில், தரம் குறைந்த நார்ப்புல் தீவனத்தைக் கூடப் பயன்படுத்தலாம்.
இனப்பெருக்கக் கிடாக்களுக்கான தீவனப் பராமரிப்பு
கிடாக்களை இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தும் போது, அவற்றுக்குக் கூடுதலான சத்துகள் தேவைப்படும். அதே நேரம், அதிக எடையுள்ள கிடாக்கள் மூலம், முழுமையான இனப்பெருக்க வேலையைச் செய்ய முடியாது என்பதால், அவற்றின் உடல் எடையை மெலியச் செய்ய வேண்டும். இதை, தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி மூலம் படிப்படியாகக் குறைக்கலாம்.
பொதுவாக, கிடாக்களைப் பெட்டை ஆடுகளுடன் சேர்த்து மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம், பெட்டைகளுக்குக் கிடைக்கும் அதே சத்துகள் தான் கிடாக்களுக்கும் கிடைக்கும். எனவே, கிடாக்களுக்கெனத் தனியாகத் தீவனம் அளிக்க வேண்டுமெனில், 3 பாகம் ஓட்ஸ் அல்லது ஒரு பாகம் பார்லி, மக்காச்சோளம் மற்றும் ஒரு பாகம் கோதுமை அடங்கிய அடர் தீவனக் கலவையை, தினமும் ஒரு கிடாவுக்கு 300-500 கிராம் வீதம் அளிக்க வேண்டும்.
பால் குடிக்கும் குட்டிகளுக்கான தீவனப் பராமரிப்பு
- குட்டிகள் பிறந்ததும் சீம்பாலைக் கொடுக்க வேண்டும். முதல் 3-4 நாட்களுக்கு, குட்டிகளுக்கு நல்ல சீம்பால் கிடைக்க, அவற்றைத் தாயிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும். முதல் 3 நாட்களுக்குத் தினமும் 300 மி.லி. சீம்பாலை 3 முறை கொடுக்க வேண்டும்.
- அடுத்து, 4-14 நாட்களுக்கு, தினமும் 350 மி.லி. பால் அல்லது பசும்பாலை 3 முறை கொடுக்க வேண்டும்.
- அடுத்து, 15-30 நாட்களுக்கு, தினமும் 350 மி.லி. பால் அல்லது பசும்பாலை 3 முறை கொடுக்க வேண்டும். மேலும், சிறிதளவு அடர் தீவனம் மற்றும் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
- அடுத்து, 31-60 நாட்களுக்கு, தினமும் 400 மி.லி. பால் அல்லது பசும்பாலை 2 முறை கொடுக்க வேண்டும். மேலும், 100-150 கிராம் அடர் தீவனம் மற்றும் போதியளவில் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
- அடுத்து, 61-90 நாட்களுக்கு, தினமும் 200 மி.லி. பால் அல்லது பசும்பாலை 2 முறை கொடுக்க வேண்டும். மேலும், 200-250 கிராம் அடர் தீவனம் மற்றும் போதியளவில் பசுந்தீவனம் அல்லது உலர் தீவனத்தைத் தர வேண்டும்.
இளங்குட்டிகளுக்கான கலப்புத் தீவனக்கலவை
- மக்காச்சோளம்: 40 சதம்,
- கடலைப் புண்ணாக்கு: 30 சதம்,
- கோதுமைத் தவிடு: 10 சதம்,
- எண்ணெய் நீக்கப்பட்ட அரிசித் தவிடு: 13 சதம்,
- கரும்புச் சக்கரைப்பாகு: 5 சதம்,
- தாதுப்புக் கலவை: 2 சதம்,
- உப்பு: 1 சதம்.
இவற்றுடன் உயிர்ச் சத்துகள் ஏ, பி2, டி3 மற்றும் நுண்ணுயிர்க் கொல்லியைச் சேர்த்துச் சத்தேற்றம் செய்ய வேண்டும்.
தாயைப் பிரிந்ததில் இருந்து விற்பனை வரையிலான தீவனப் பராமரிப்பு
- தீவன வகைகள் மற்றும் தீவனமளிப்பு முறைகள்; பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தீவன மூலப்பொருள்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து வேறுபடும்.
- மேய்ச்சலைப் பொறுத்து, ஒரு குட்டிக்கு 225-450 கிராம் அடர் தீவனக் கலவையைக் கொடுக்கலாம்.
- மேய்ச்சல் அதிகமாக இருப்பின், 225 கிராம் அடர் தீவனமே போதுமானது.
- மேய்ச்சல் நிலத்தில் தீவனப் புற்கள் குறைவாக இருந்தால், 450 கிராம் அடர் தீவனத்துடன், 2 கிலோ பசுந்தீவனத்தைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
தொகுப்பு: மு.உமாபதி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


