மக்காச்சோளம், தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவைப் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கியமான தானியப் பயிராகும். இப்பயிரில், விதைத்தது முதல் அறுவடை வரை, பல்வேறு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்கி, மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, அமெரிக்கன் படைப்புழு, தண்டுத் துளைப்பான், கதிர்த் துளைப்பான் போன்ற பூச்சிகளும், அடிச்சாம்பல் நோய், டர்சிகம் இலைக்கருகல் நோய், மேடிஸ் இலைக்கருகல் நோய், துரு நோய், தண்டழுகல் நோய், பட்டை இலை உறை நோய் போன்ற நோய்களும் தாக்கி, பயிரின் வளர்ச்சியையும், கதிர்களின் தரத்தையும் பாதிக்கின்றன.
எனவே, விவசாயிகள் பயிரைத் தொடர்ந்து கண்காணித்து, பூச்சி மற்றும் நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, உரிய மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.
மக்காச்சோளத்தைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள்
அமெரிக்கன் படைப்புழு: இது, மக்காச்சோளத்தில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும் முக்கியப் புழுக்களில் ஒன்றாகும். இதன் இளம் புழுக்கள் இலைகளைச் சுரண்டி உண்பதால், வெள்ளைக் கோடுகளும், சிறிய துளைகளும் தோன்றும். வளர்ந்த புழுக்கள் குருத்துகளில் புகுந்து, இலைகளைத் தின்று சேதப்படுத்தும். இதனால், இலைகளில் ஒழுங்கற்ற பெரிய துளைகள் ஏற்படும்.
இதைக் கட்டுப்படுத்த, வாரம் இருமுறை பயிரைக் கண்காணித்து, முட்டைக் குவியல்கள் மற்றும் இளம் புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். கடைசி உழவின் போது, ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். மேலும், எக்டருக்கு 12 இனக்கவர்ச்சிப் பொறிகள் வீதம் வைத்து, அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். நிலத்தைச் சுற்றி, தட்டைப்பயறு, உளுந்து, துவரை போன்ற தடுப்புப் பயிர்களைப் பயிரிடலாம்.
விதைத்த 15-25 நாட்களில் முதல் கட்டமாக, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. அசாடிராக்டின் 1 சதவீத EC மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் தயோடிகார்ப் 75 சதவீத WP மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் இமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீத SG மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.
விதைத்த 31-45 நாட்களில் இரண்டாம் கட்டமாக, 10 லிட்டர் நீருக்கு 5 மி.லி. ஸ்பைனிடோரம் 11.7 சதவீத SC மருந்து வீதம் அல்லது 80 கிராம் மெட்டாரைசியம் மருந்து வீதம் அல்லது 4 மி.லி. குளோரான்ட்ரானிலிபுரோல் 18.5 சதவீத SC மருந்து வீதம் அல்லது 4 கிராம் புளுபெண்டமைடு 20 சதவீத WG மருந்து வீதம் அல்லது 15 மி.லி. நோவாலுரான் 5.25 சதவீத SC மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.
தண்டுத் துளைப்பான்: இந்தப் புழுக்கள், இலைகளின் மடிப்புப் பகுதிகளை உண்பதால், சிறிய துளைகள் தோன்றும். பிறகு, தண்டுக்குள் புகுந்து உட்புறத் திசுக்களைச் சேதப்படுத்தும். இதனால், நடுக்குருத்துக் காய்தல், தண்டில் துளைகள் தோன்றுதல், பயிர்கள் சாய்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்தப் புழுக்களைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட தண்டுப் பகுதிகள் மற்றும் முந்தைய பயிர்க்கழிவைச் சேகரித்து அழிக்க வேண்டும். தேவைப்படின், டிரைக்கோகிரம்மா சிலோனிஸ் முட்டை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால், வேளாண் அலுவலரின் ஆலோசனைப்படி, உரிய கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
இளஞ்சிவப்புத் தண்டுத் துளைப்பான்: இந்தப் புழுக்கள், தண்டுக்குள் புகுந்து உட்புறத் திசுக்களை உண்பதால், தண்டின் வலிமை குறைந்து, பயிர்கள் சாய்ந்து விடும். நடுக்குருத்துக் காய்தல் மற்றும் தண்டில் துளைகள் தோன்றுதல் இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். பாதிக்கப்பட்ட பயிர்களைக் கண்காணித்து, கடும் சேதமடைந்த தண்டுகளை அகற்ற வேண்டும். அறுவடைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட தண்டுக்கழிவை, நிலத்தில் குவித்து வைக்காமல் அகற்ற வேண்டும்.
கதிர்த் துளைப்பான்: இந்தப் புழுக்கள், கதிரிலுள்ள பட்டுப் போன்ற பகுதியை மற்றும் இளம் மணிகளை உண்பதால், கதிரின் நுனிப்பகுதி மணிகள் சேதமடையும். கதிர்களில் புழுக்கள் ஏற்படுத்திய துளைகளும் கழிவும் காணப்படும். கதிர் உருவாகும் பருவத்தில் பயிர்களைத் தொடர்ந்து கவனித்து, பாதிக்கப்பட்ட கதிர்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
குருத்து ஈ மற்றும் அசுவினி: குருத்து ஈக்களின் தாக்குதலால், இளம் பயிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். எனவே, சரியான விதைப்புக் காலத்தைக் கடைப்பிடித்து, தரமான சான்று விதைகளை விதைக்க வேண்டும். அசுவினிகள், இலைகள் மற்றும் இளம் தளிர்களில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் மஞ்சளாகி வளர்ச்சிக் குறையும்.
இவற்றைக் கட்டுப்படுத்த, தழைச்சத்தை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும். அசுவினிகளை உண்ணும் பொறி வண்டுகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். மருந்தின் தேவை ஏற்பட்டால், வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி, சரியான மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
மக்காச்சோளத்தைத் தாக்கும் முக்கிய நோய்கள்
அடிச்சாம்பல் நோய்: இந்நோய் தாக்கும் போது, இலைகளில் நீளவாக்கில், வெள்ளை அல்லது மஞ்சள் கோடுகள் தோன்றும். பாதிக்கப்பட்ட பயிர்களின் வளர்ச்சிக் குன்றி, கதிர்கள் சரியாக உருவாகாமல் போகலாம்.
இந்நோயைக் கட்டுப்படுத்த, நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களைப் பயிரிட வேண்டும். நோயுற்ற பயிர்களைத் தொடக்க நிலையிலேயே அகற்றி விட வேண்டும். நிலத்தில் நீர்த் தேங்காத வகையில், வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
Metalaxyl, Mancozeb, Cymoxanil, Dimethomorph சார்ந்த பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாட்டு அளவுகளை, மருந்துப் புட்டிகளின் லேபிளில் பார்த்து அறியலாம்.
டர்சிகம் இலைக்கருகல் நோய்: இந்நோய் தாக்கும் போது, இலைகளில் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில், படகு வடிவில் நீண்ட புள்ளிகள் தோன்றும். நோய் தீவிரமாகும் போது, இந்தப் புள்ளிகள் இணைவதால், இலைகளின் பெரும்பகுதி காய்ந்து விடும். இதனால், ஒளிச்சேர்க்கை குறைந்து மகசூல் பாதிக்கப்படும்.
இந்நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2-4 கிராம் மேன்கோசெப் (Mancozeb) மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2-4 கிராம் ஜினெப் மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. புரோப்பிகோனசோல் 25 சதவீத EC மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. கிரெசாக்சிம் மெத்தில் 44.3 சதவீத SC மருந்து வீதம் கலந்து, இலைகளின் மேலும் கீழும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
மேடிஸ் இலைக்கருகல் நோய்: இந்நோய் தாக்கும் போது, இலைகளில் சிறிய பழுப்புப் புள்ளிகள் தோன்றி, நீள்வட்ட வடிவில் விரிவடையும். கடும் தாக்குதலில், இலைகள் காய்ந்து, கதிர்களில் மணிகள் பிடிப்பது பாதிக்கப்படும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மேன்கோசெப் 75 சதவீத WP மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. புரோப்பிகோனசோல் 25 சதவீத EC மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. கிரெசாக்சிம் மெத்தில் 44.3 சதவீத SC மருந்து வீதம் கலந்து, இலைகளின் மேலும் கீழும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். மேலும், நோயுற்ற இலைகளையும் பயிர்க்கழிவையும் அகற்ற வேண்டும்.
துரு நோய்: இந்நோய் தாக்கும் போது, இலைகளின் மேலும் கீழும் சிறியளவில், துருப்பிடித்த பழுப்புநிறக் கொப்புளங்கள் தோன்றும். நோய் தீவிரமாகும் போது, இலைகள் காய்ந்து கதிர்களின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.
இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. கிரெசாக்சிம் மெத்தில் 44.3 சதவீத SC மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. டெபுகோனசோல் (Tebuconazole) மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 2-3 கிராம் மேன்கோசெப் 75 சதவீத WP மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
தண்டழுகல் மற்றும் கரிக்கரி அழுகல்: இந்நோய்களால் தண்டின் உட்பகுதி அழுகி, தண்டின் வலிமை குறைந்து பயிர்கள் சாய்ந்து விழும். கரிக்கரி அழுகலில், தண்டின் உட்பகுதியில் கறுப்புப் பொடி காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த, மண்ணில் போதிய ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில், பொட்டாசியம் உரத்தை இட வேண்டும். சாகுபடியில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். நோயுற்ற தாவரக் கழிவுகளை அகற்ற வேண்டும்.
கரிக்கரி அழுகலைக் கட்டுப்படுத்த, விதைத்த 30 நாட்கள் கழித்து, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (Pseudomonas fluorescens) அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை (Trichoderma viride), எக்டருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, நன்கு மட்கிய 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து மண்ணில் இடலாம். பூக்கும் பருவத்தில், மண்ணில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாக்டீரியா தண்டழுகல்: இதனால், தண்டின் அடிப்பகுதி நீரில் நனைந்ததைப் போல் மென்மையாக மாறி அழுகுவதுடன் துர்நாற்றமும் வீசும்.
இதைக் கட்டுப்படுத்த, நிலத்தில் நீர்த் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நோயுற்ற பயிர்களை அகற்ற வேண்டும். இந்நோய் பாக்டீரியாவால் ஏற்படுவதால், பூஞ்சைக் கொல்லிகளை மட்டும் தெளிப்பது பயனளிக்காது. எனவே, நோயின் தன்மையை அறிந்து வேளாண் அலுவலரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
பட்டை இலை மற்றும் உறை நோய்: இந்நோய் தாக்கும் போது, தண்டைச் சுற்றியுள்ள இலை உறைகளில் சாம்பல் கலந்த பச்சை அல்லது பழுப்புப் புள்ளிகள் தோன்றி, பட்டையைப் போலப் பரவும்.
இந்நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. புரோப்பிகோனசோல் 25 சதவீத EC மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. ஹெக்சகோனசோல் (Hexaconazole) மருந்து வீதம் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. அசோக் சிஸ்ட்ரோபின் 23 சதவீத SC மருந்து வீதம் கலந்து, இலை உறைகளிலும், தண்டின் அடிப்பகுதியிலும், மருந்து நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கான ஆலோசனைகள்
- மக்காச்சோளத்தில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் குறைக்க, வாரம் இருமுறை, பயிர்களைக் கண்காணிக்க வேண்டும்.
- நோயெதிர்ப்புத் திறனுள்ள இரகங்களின் சான்று விதைகளைப் பயிரிட வேண்டும்.
- பயிர்ச்சுழற்சி முறையைக் கடைப்பிடித்து நோயுற்ற பயிர்க்கழிவை அகற்ற வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும்.
- பயிரின் தேவைக்கேற்ப பாசனம் செய்வதுடன், நிலத்தில் நீர்த் தேங்காத வகையில், வடிகால் வசதியைப் பராமரிக்க வேண்டும்.
- நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க, தேவையற்ற பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
- மேலும், பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது, கையுறை, முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும்.
- வேளாண் அலுவலரின் ஆலோசனை இல்லாமல், வெவ்வேறு மருந்துகளைக் கலந்து தெளிக்கக் கூடாது.
- மருந்துப் புட்டியில் குறிப்பிட்டுள்ள பயிர், பூச்சி அல்லது நோய், மருந்தளவு மற்றும் காத்திருப்புக் காலத்தைச் சரிபார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
- நிலத்தில் காணப்படும் பூச்சிகள் மற்றும் நோய்களின் அறிகுறிகளை, வேளாண் அலுவலர்களிடம் காட்டி, பயிரின் வயது மற்றும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ற மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


