My page - topic 1, topic 2, topic 3

பயிர்களைப் பாதுகாக்கும் பூஞ்சைகள்!

Fungus

ன்டோமோபதோஜெனிக் (Fungus Entomopathogenic) என்னும் பூஞ்சைகள், பூச்சிகளைத் தாக்கி, அவற்றின் உடலில் நோயை ஏற்படுத்திக் கொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவை. இயல்பான சூழலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், நச்சற்ற இயற்கை வழி வேளாண்மைக்கும் இவை மிகவும் பயன்படுகின்றன. இலக்கற்ற பூச்சிகளுக்குத் தீங்கு செய்யாமல், தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில், இந்தப் பூஞ்சைகளின் பங்கு நம்பிக்கைக்கு உரியதாக அமைந்துள்ளது.

Fungus | பூச்சிகளைக் கொல்லும் பூஞ்சைகள்

நச்சுத்தன்மை மிக்க இரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்குப் மாற்றாக, நவீன மற்றும் நிலையான இயற்கை வழி வேளாண்மையில், பூச்சிகளைக் கொல்லும் பூஞ்சைகள்  முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இவற்றின் பயன்பாடு தமிழகத்திலும் பிரபலமடைந்து வருகிறது. வணிக நோக்கில் உற்பத்தி செய்யப்படும் என்டோமோபதோஜெனிக் பூஞ்சைகளில், பியூவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனிசோபிலியே, லெகனிசிலியம் லெகனி ஆகியன நன்மையளிக்கும் பூஞ்சைகள் ஆகும்.

செயல்படும் விதம்

இந்தப் பூஞ்சைகள், பூச்சிகளின் உடலில் ஒட்டிக்கொண்டு, அவற்றின் கடினமான மேல் தோலைத் துளைத்து உள்ளே சென்று அழிக்கும். இந்தப் பூஞ்சைகளின் வித்துகள், காற்றின் மூலம் அல்லது மண்ணில் இருந்து பூச்சியின் மேல்தோலில் ஒட்டிக் கொள்ளும். அப்போது சில நொதிகளைச் சுரந்து, பூச்சியின் கடினமான மேல்தோலைச் சிதைத்து உடலுக்குள் நுழையும். பிறகு, பூச்சியின் திசுக்களை உண்டு வளரத் தொடங்கும். இந்தப் பூஞ்சைகள் வெளியிடும் நச்சுகளால் பூச்சிகள் செயலிழந்து இறந்து விடும்.

பூச்சி மேலாண்மையில் பூஞ்சைகளின் பயன்பாடு

பியூவேரியா பேசியானா (வெள்ளை மஸ்கார்டைன் பூஞ்சை): இது, உணவு மூலம் அல்லது பூச்சியின் புறத்தோலில் ஒட்டிக் கொள்வதன் மூலம், பூச்சியின் உடலுக்குள் சென்று இனப்பெருக்கம் செய்யும். மேலும், பியூவேரிசின், பாசியனோசைடு போன்ற நச்சுகளை உற்பத்தி செய்து பூச்சிகளை முடக்கி, 4-5 நாட்களில் அதைக் கொன்று விடும்.

பயிர்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் கம்பளிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இந்தப் பூஞ்சை பயன்படும். இது, நெல்லில் மஞ்சள் தண்டுத் துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டிப் புழுக்கள், நிலக்கடலையில் வெண்புழு, கரும்புப் பிரில்லா, தென்னைக் காண்டாமிருக வண்டு, பயறு வகைகள், தக்காளி மற்றும் பருத்தியைத் தாக்கும் புழுக்கள், வைரமுதுகு அந்துப்பூச்சி, புகையிலை மற்றும் சூரியகாந்தி இலை உண்ணிப் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும், மிகச் சிறந்த உயிரியல் பூச்சிக்கொல்லி ஆகும்.

மெட்டாரைசியம் அனிசோபிலியே (பச்சை மஸ்கார்டைன் பூஞ்சை): இந்தப் பூஞ்சை, தென்னைக் காண்டாமிருக வண்டு, நிலக்கடலை வெட்டுப்புழு, நெல்லின் பழுப்புத் தத்துப்பூச்சி, வைரமுதுகு அந்துப்பூச்சி மற்றும் கரும்பின் முன்தண்டுத் துளைப்பான், நுனித்தண்டுத் துளைப்பான், கணுவிடைத் துளைப்பான் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

லெகனிசீலியம் லெகனி: இந்தப் பூஞ்சை, வெள்ளை ஈக்கள், அசுவினிப் பூச்சிகள், திரிப்ஸ்கள், பழுப்புத் தத்துப்பூச்சி, செதில் பூச்சிகள், மாவுப்பூச்சிகள் மற்றும் பயிர்களில் உள்ள பிற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

நோமுரேயா ரைலி: இது, காய்த்துளைப்பான், வெட்டுப்புழு, முட்டைக்கோஸ் துளைப்பான் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

இசாரியா ஃபுமோசோரோசியா (பேசிலோமைசஸ் ஃபுமோசோரோசியஸ்): இந்தப் பூஞ்சை, தோட்டப் பயிர்கள் மற்றும் பழ மரங்களைத் தாக்கும், மஞ்சள் மற்றும் சிவப்புச் சிலந்திகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

பயன்பாடு மற்றும் பரிந்துரை அளவு

பொதுவாக, ஒரு லிட்டர் நீருக்கு 5-10 மி.லி. அல்லது 5-10 கிராம் வீதம் கலந்து பயிர்களில் தெளிக்க வேண்டும். இவ்வகையில் ஒரு ஏக்கர் தெளிப்புக்கு 150-200 லிட்டர் நீரைப் பயன்படுத்தலாம். அல்லது ஏக்கருக்கு 2-5 கிலோ WP-ஐ, 50-100 மட்கிய தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இடலாம்.

பயிர் வாரியான பயன்பாடு

நெற்பயிர்: தண்டுத் துளைப்பான் மற்றும் இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த, இவற்றின் தாக்கம் தோன்றும் தொடக்க நிலையிலேயே தெளிக்க வேண்டும்.

கரும்பு: வேர்ப்புழு, கரும்புத் துளைப்பானைக் கட்டுப்படுத்த, தெளித்தல் அல்லது நிலத்தில் இடுதல் முறையைப் பயன்படுத்தலாம்.

பருத்தி: வேர்ப்புழு, வண்டு போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த, தெளிப்பு முறையைப் பயன்படுத்த வேண்டும்.

நிலக்கடலை: வெள்ளை வேர்ப்புழு மற்றும் மண் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, நிலத்தில் இடுதல் முறை சிறந்தது.

தக்காளி, மிளகாய், கத்திரி, வெண்டை: பூச்சித் தாக்குதல் தெரிந்ததும் 7-10 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும்.

தென்னை, வாழை: வேர்ப்பகுதியில் இடலாம். அல்லது தேவைப்படின் தெளிப்பு முறையைப் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை

பூஞ்சை வித்துகள் முளைத்துத் தொற்றை ஏற்படுத்த, 70 சதத்துக்கும் மேல் ஈரப்பதம் தேவை. எனவே, புற ஊதாக் கதிர்வீச்சுக் குறைவாகவும், ஈரப்பதம் இயல்பாகவே அதிகமாகவும் இருக்கும் மாலை 4 மணிக்குப் பிறகு அல்லது அதிகாலையில் தெளிப்பது நல்லது. மேலும், தெளிப்பு முடிந்து 6-8 மணி நேரம் மழை வராமல் இருப்பது நல்லது. இந்த உயிரியல் பூஞ்சைக் கரைசலைத் தெளிக்கும் போது, இதனுடன் இரசாயனப் பூஞ்சைக் கொல்லிகளைக் கலக்கக் கூடாது. நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது மணலில் நிலத்தில் சீராக இட வேண்டும்.

முக்கியப் பயன்கள்

மக்களுக்கோ, விலங்குகளுக்கோ, வண்டுகள், தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளுக்கோ, சுற்றுப்புறத்துக்கோ எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இரசாயன மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, அவற்றை எதிர் கொண்டு வாழும் சக்தியைப் பூச்சிகள் பெற்று விடும். ஆனால், பூஞ்சை வழியிலான கட்டுப்பாட்டில் பூச்சிகள் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதில்லை.

பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என்டோமோபதோஜெனிக் பூஞ்சை மருந்துகள் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, ஒரு கிலோ 135 ரூபாய் விலையில், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். 


பயிர்களைப் பாதுகாக்கும் பூஞ்சைகள்!

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்: