வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஒரு பயிர் நன்றாக வளர்ந்து சிறப்பான மகசூலைத் தருவதற்கு, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய பெருஞ் சத்துகளும், இரும்பு, போரான், துத்தநாகம், மாங்கனீசு, சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம் போன்ற பல்வேறு நுண் சத்துகளும் தேவைப்படும். இந்தச் சத்துகளின் தேவை, ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதாவது, அளவுகள் மாறுபடும்.
இந்நிலையில், ஒரு நிலத்தில் ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது, அந்தப் பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டுமே நிலத்திலிருந்து எடுக்கப்படும். இதே பயிரை இதே நிலத்தில் தொடர்ந்து பயிரிடும் போது, குறிப்பிட்ட சத்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு, வளர்ச்சியும் மகசூலும் பாதிக்கப்படும். அதனால், ஒரு நிலத்தில் சத்துகள் சீராக இருக்க வேண்டுமாயின், விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடியில் கவனம் செலுத்த வேண்டும்.
சாகுபடி செய்ய எளிதாக இருக்கிறது, நல்ல மகசூலும் அதிக விலையும் கிடைக்கிறது என்று நினைத்து, மீண்டும் மீண்டும் இட்ட பயிரையே இடாமல், கால நிலைக்கு ஏற்ப, மாற்றி மாற்றி வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்வதைத் தான் மாற்றுப்பயிர் சாகுபடி என்கிறோம்.
கூடுதல் மகசூலும் நல்ல விலையும் கிடைப்பதால், தமிழக விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோளத்தை மட்டுமே தொடர்ந்து பயிரிட்டு வருகிறார்கள். அதனால், அண்மைக்காலமாக, மக்காச்சோள விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், ஒரு நிலத்தில் தொடர்ந்து மக்காச்சோளத்தை விதைப்பதைத் தவிர்க்க வேண்டும். மக்காச்சோளம் என்றில்லை, எந்தப் பயிரானாலும் அதையே தொடர்ந்து சாகுபடி செய்வது மகசூல் இழப்புக்கே வழி வகுக்கும்.
எனவே, விவசாயிகள் அவரவர் பகுதியில் உள்ள சூழலுக்கு ஏற்ப, ஒரு நிலத்தில் சாகுபடி செய்த பயிரை மட்டுமே திரும்பத் திரும்பப் பயிரிடாமல், தானியப் பயிர்கள், பயறுவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், வணிகப் பயிர்கள் என மாறி மாறிப் பயிரிட்டால், மண்ணிலுள்ள அனைத்துச் சத்துகளும் பயிர்களுக்குப் பயன்பட்டு, சீரான விளைச்சல் கிடைக்க ஏதுவாகும். எனவே, விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மகா விளைச்சலைத் தரும் சாகுபடி என்பதைப் புரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றியடைய வேண்டுகிறோம்.
– ஆசிரியர்
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

