My page - topic 1, topic 2, topic 3

வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

ன்றைய காலத்தில் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்களை அனைவரும் தேடி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.

அத்தகைய சிறந்த வாய்ப்புகளில் ஒன்றாகத் திகழ்வது அசோலா வளர்ப்பு. சிறிய தொட்டியில் தொடங்கி நல்ல வருமானம் தரக்கூடிய இந்தப் பசுமைத் தொழில், இன்று பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அசோலா என்பது, நீர் நிலைகளில் மிதந்து வளரக்கூடிய பெரணி வகையைச் சார்ந்த தாவரமாகும். முற்றிலும் நீரை மட்டுமே சார்ந்து வளரக்கூடிய இந்தத் தாவரம் வளி மண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை மண்ணில் இணைத்து, உடனடியாகச் செடிகள் மற்றும் கொடிகள் வளரப் பயன்படுத்த வைக்கும் ஒரு உதவியை செய்கிறது. தழைச்சத்தை நிலை நிறுத்தும் வேலை, நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலா கூட்டு வாழ்க்கையின் மூலம் நடைபெறுகிறது.

அசோலாவிலுள்ள சத்துகள்

அசோலாவில், புரதச்சத்து 25-30 சதம், நார்ச்சத்து 14-15 சதம், கொழுப்புச் சத்து 3-4 சதம், மாவுச்சத்து 4.1-6.5 சதம், கார்போஹைடிரேட் 45-50 சதம் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுப்புகளும் பல நுண்ணுயிரிகளும் உள்ளன.

அசோலா, தென்கிழக்காசிய நாடுகளிலும், சீனாவிலும், நெல் விளையும் பகுதியில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நெல் சாகுபடி நடைபெறும் அனைத்து நாடுகளிலும் தற்போது அசோலாவைப் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பலவித ஆராய்ச்சிகள் மூலம், நெற்பயிருக்குப் பயன் தரும் உயிர் உரமாக அசோலா இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். 

அசோலா வளர்ப்பு

அசோலா வளர்ப்பில், சிமெண்ட் தொட்டி முறை, தார்ப்பாய்க் குழிமுறை, குளமுறை, தட்டு முறை, மண்ணில்லா வளர்ப்பு முறை, நிழல் வலை முறையென பல முறைகள் உள்ளன. இப்படி, பல முறைகள் இருந்தாலும், சிமெண்ட் தொட்டி முறையும், தார்ப்பாய் குழி முறையும் சிறந்த முறைகளாகக் கருதப்படுகின்றன.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சிமெண்ட் தொட்டி முறை

தேவையான பொருள்கள்: தொட்டி, சுத்தமான நீர், மண், மாட்டுச்சாணக் கரைசல், சிங்கள் சூப்பர் பாஸ்பேட், அசோலா, நிழல் அல்லது பகுதி வெய்யில், நீர் இறைக்கும் வாளி, அறுவடைக்குச் சல்லடை அல்லது வலை.

செய்முறை: பத்தடி நீளம், இரண்டடி அகலம், ஓரடி ஆழமுள்ள தொட்டியில், 25-30 கிலோ மண்ணைப் பரப்ப வேண்டும். அதில், மட்கிய 5 கிலோ சாணக் கரைசலைக் கலக்க வேண்டும். மேலும், 50-100 கிராம் ராக் பாஸ்பேட்டையும் கலந்து விட வேண்டும்.

அடுத்து, 5 செ.மீ. அளவுக்கு நீரை நிறுத்தி, 5 கிலோ அசோலாவை இட வேண்டும். மேலும், பத்து நாட்களுக்கு ஒருமுறை சாணக் கரைசலை ஊற்றி வர வேண்டும். இப்படிச் செய்தால், இரண்டு வாரங்களில் 35-40 கிலோ அசோலாவை எடுக்கலாம். அசோலாவின் வளர்ச்சி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். அசோலாவை நெல் வயலில் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் இடலாம். இதனால் பயிருக்குத் தேவையான தழைச்சத்துக் கிடைப்பதுடன், மகசூலும்  15-20 சதம் கூடும்.

தார்ப்பாலின் குழிமுறை

தேவையான பொருள்கள்: திறந்தவெளி அல்லது சமமான நிலம், தார்ப்பாலின் தாள், செங்கற்கள், வளமான மண், மாட்டுச்சாணக் கரைசல், சிங்கள் சூப்பர் பாஸ்பேட், அசோலா, வாளி, அறுவடைக்கான சல்லடை அல்லது வலை. 

செய்முறை

சீரான மற்றும் நிழலுள்ள இடத்தில், பத்தடி நீளம், ஆறடி அகலம், ஓரடி ஆழமுள்ள குழியை அமைக்க வேண்டும். அதில் தார்ப்பாலின் தாளை விரித்து விட வேண்டும். அதில், வளமான 10-15 கிலோ மண்ணை இட வேண்டும். நன்கு மட்கிய 2-3 கிலோ மாட்டுச்சாணக் கரைசலையும் சேர்க்க வேண்டும். இறுதியாக 5-10 சென்டி மீட்டர் ஆழம் வரை நீரை நிறுத்தி, 1-2 கிலோ அசோலாவைக் குழியில் இட்டுப் பராமரிக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு அசோலாவைத் தருதல்

முதன் முதலில் கால்நடைகளுக்கு, அடர் தீவனம் 1 பங்கு, அசோலா 1 பங்கு என்னும் விதத்தில் கலந்து அளிக்க வேண்டும். நன்கு பழக்கப்பட்ட கால்நடைகள் எவ்விதக் கலப்பும் இல்லாத அசோலாவை விரும்பி உண்ணும். கறவை மாட்டுக்குத் தினமும் 1-1.5 கிலோ தரலாம். ஆட்டுக்குத் தினமும் 300-500 கிராம் தரலாம். முயலுக்கு 100 கிராம் வீதமும், கோழிக்கு 25-30 கிராம் வீதம் தரலாம்.

இப்படிக் கொடுக்கும் போது, கறவை மாடுகளில் பால் உற்பத்தி 15-20 சதம் கூடும். கோழிகளில் உடல் எடை, முட்டையின் அளவு மற்றும் முட்டை மஞ்சள் கருவின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

அசோலா வளர்ப்பில் வருமான வேலை வாய்ப்புகள்

புதிய அசோலாவைப் பால் பண்ணை விவசாயிகளுக்கு விற்பனை செய்தல்.

ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் தீவனமாக விற்பனை செய்தல்.

அசோலாவைக் காய வைத்துப் பொடியாக விற்பனை செய்தல்.

விவசாயிகளுக்கு இயற்கை உரமாக வழங்குதல்.

அசோலா என்பது ஒரு தொழில்

அசோலா வளர்ப்பு என்பது, சிறந்த மற்றும் குறைந்த முதலீட்டில் இலாபம் தரக்கூடிய வணிக வாய்ப்பு. ஏனெனில், இது மிகவும் விரைவாக வளர்ந்து சில நாட்களிலேயே அறுவடைக்கு வந்து வருவாயையும் கொடுத்து விடும். அசோலா சத்து மிகுந்தது. எனவே, இதை ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றுக்குத் தீவனமாகத் தரலாம். மேலும், இது சிறந்த இயற்கை உரமாகும். இது, தொட்டிகள், குழிகளில் வளர்க்கப்படுவதால், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு, சிறந்த வருமானம் தரும் சிறு தொழிலாகத் திகழ்கிறது.

அசோலா வளர்ப்பு, எளிமையானது, குறைந்த செலவிலானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறையாகவும், பயிர்களுக்கு இயற்கை உரமாகவும், கால்நடைகளுக்குச் சத்தான தீவனமாகவும், இலாபகரமான சிறு தொழிலாகவும் விளங்கி வருகிறது. குறைந்த இடம், குறைந்த முதலீடு மற்றும் எளிய பராமரிப்புடன் அனைவரும் இந்த அசோலா வளர்ப்பைத் தொடங்கலாம்.


அ.பூர்ணிமா,

நான்காம் ஆண்டு மாணவி, நுண்ணுயிரியல் துறை, டாக்டர் இளம்பரிதி, ஆசிரியர், நுண்ணுயிரியல் துறை, இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, துறையூர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!

  • கோடை நெல் சாகுபடி!