பருத்தித் தண்டுக் கூன்வண்டு (பெம்பெருலஸ் அபினிஸ்) என்பது, பருத்திப் பயிரைத் தாக்கி, 50-60 சதவீதம் வரையான கடும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் முக்கியப் பூச்சியாகும். கறுப்பு நிறத்தில் 3-5 மி.மீ. அளவில் இருக்கும் இக்கூன்வண்டு, பருத்திச் செடியின் இளம் பருவத்தில் தண்டுப் பகுதியில் முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், தண்டின் உட்பகுதியைத் தின்று வளர்வதால், தரை மட்டத்துக்கு மேலுள்ள தண்டுப்பாகம் வீங்கத் தொடங்கும். இதனால், வளர்ச்சிக் குன்றிச் செடிகள் காய்ந்து விடும்.
மேலும், வீங்கிய பகுதி வலுவிழந்து, பலமான காற்று வீசும் போதும், மண் அணைக்கும் போதும் ஒடிந்து விடும். நடவு செய்து 30-40 நாட்களில் தாக்கப்படும் செடிகள் இறந்து விடும். மேலும், பாதிக்கப்பட்ட செடிகளில் காய்ப்பிடிப்புக் குறைவதால், மகசூல் இழப்பு ஏற்படும்.
கூன்வண்டின் வாழ்க்கைச் சுழற்சி
ஒரு கூன்வண்டு ஒரு செடியில் 7-8 முட்டைகள் வீதம் 120 முட்டைகள் வரை இடும். பத்து நாட்களில் வெளிவரும் புழுக்கள், இரண்டு மாதம் வரை தண்டுக்குள் வளரும். பத்து நாட்கள் கூட்டுப் புழுக்களாக இருந்து விட்டு, தாய் வண்டாக வெளிவரும். இப்படி, பருத்தியின் 6-7 மாதக் காலத்தில் மூன்று தலைமுறைகளை உருவாக்கிப் பெருகும்.
கூன்வண்டுத் தாக்குதல் அறிகுறிகள்
இள வயது மற்றும் நடுத்தர வயது பருத்திச் செடிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
கூன்வண்டின் பெண் பூச்சிகள் பருத்தித் தண்டைத் துளைத்து முட்டைகளை இடும். அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், தண்டின் உட்புறத் திசுக்களைச் சேதம் செய்வதால், செடிகள் வளர்ச்சிக் குன்றி வாடி விடும். இளம் செடிகள் திடீரென வாடிக் காய்ந்து விடும்.
நில மட்டத்துக்குச் சற்று மேலே செடியின் அடித்தண்டில், முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
புழுக்கள் உள்ளே குடைவதால், தண்டு வலுவிழந்து, மெல்லிய காற்று வீசினாலும் செடிகள் எளிதில் முறிந்து விடும்.
தாக்கப்பட்ட செடிகளில் காய்களின் எண்ணிக்கையும் தரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்
தாக்கப்பட்ட தண்டுகள் மற்றும் செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும்.
அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவுகளை நிலத்திலிருந்து அகற்ற வேண்டும்.
பயிர்ச்சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
களையின்றி நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை நிலத்தைச் சுற்றிப் பார்த்து, தண்டில், துளை, வீக்கம், வாடுதல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா எனக் கண்காணிக்க வேண்டும்.
எக்டருக்கு 25 டன் தொழுவுரம் அல்லது 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை அடியுரமாக இட வேண்டும்.
குளோர்பைரிஃபாஸ் 20 ஈ.சி. மருந்தைக் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
நடவு செய்த 20 நாட்கள் கழித்து, தூரைச் சுற்றி மண்ணை அணைக்க வேண்டும்.
விதைத்த 20-ஆம் நாளில், ஏக்கருக்கு 10 கிலோ கார்போபியூரான் 3 சதக் குருணை மருந்துடன் 40 கிலோ மணலைக் கலந்து, செடிகளின் தூர்ப்பகுதியில் இட்டு, நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
தாக்குதல் அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. பிப்ரோனில் அல்லது 2.5 மி.லி. குளோர்பைரிபாசைக் கலந்து, மண் ஈரமாக இருக்கும் போது, தண்டைச் சுற்றியுள்ள தூர்ப்பகுதி நனையுமாறு ஊற்ற வேண்டும்.
ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மிலி. இமிடாகுளோபிரிட் 17.8 SL அல்லது 0.3 மி.லி. குளோரான்ட் ரனிலிப்ரோல் 18.5 SC அல்லது 0.4 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் 5 SG அல்லது 0.2 கிராம் தியாமெத்தாக்ஸம் 25 WG வீதம் கலந்து, தண்டுப்பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
கூன்வண்டுப் புழுக்கள், தண்டுக்குள் இருப்பதால், பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அகற்றுவது மிகவும் பயனுள்ள கட்டுப்பாட்டு முறையாகும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



