My page - topic 1, topic 2, topic 3

மானாவாரி நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மானாவாரி நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

நிலக்கடலை முக்கியமான எண்ணெய் வித்துப் பயிராகும். இதைப் பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இவற்றின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தினால் தான் நல்ல மகசூலை எடுக்க முடியும். எனவே, இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு விவசாயப் பெருமக்களிடம் அவசியம் இருக்க வேண்டும். இவ்வகையில், இங்கே நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

முன்பருவ இலைப்புள்ளி நோய் (செர்கோஸ்போரா அரசிடிகோலா)

அறிகுறிகள்: விதைத்து ஒரு மாதம் கழித்து இந்நோய் தோன்றும். இலைகளின் இருபுறமும் வட்டக் கரும் பழுப்பு அல்லது கரும்புள்ளி இருக்கும். இப்புள்ளியைச் சுற்றி, மஞ்சள் நிற வளையங்கள் காணப்படும். காம்புகளிலும் தண்டுகளிலும் அறிகுறிகள் காணப்படும்.

கட்டுப்பாடு: கம்பு மற்றும் சோளத்தை, நிலக்கடலையுடன் 1:3 வீதம் விதைத்தால், இலைப்புள்ளி நோயின் தாக்கம் குறையும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும் நிலங்களில் ஊடுபயிராக, கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றைப் பயிரிட்டு, அடுத்த பயிருக்கு நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.

முந்தைய பயிரின் கழிவுகளை அகற்றி விட்டு, ஆழமாக உழுது முதல் நிலை நோய்ப் பரப்பிகளைத் தடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டாசிம் அல்லது 200 கிராம் மாங்கோசெப் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, இலைகள் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பின்பருவ இலைப்புள்ளி நோய்  

அறிகுறிகள்: குறுவைப் பருவத்தில், விதைத்த 55-57 நாட்களில் அறிகுறிகள் தென்படும். சம்பா பருவத்தில், விதைத்த 42-46 நாட்களில் அறிகுறிகள் தென்படும். வட்டக் கரும் புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். ஒழுங்கற்ற வடிவிலிருக்கும் இந்தப் புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலையின் காய்ந்த தோற்றத்தைக் கொடுக்கும். இறுதியில் இலைகள் உதிர்ந்து விடும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கட்டுப்பாடு: கம்பு மற்றும் சோளத்தை, நிலக்கடலையுடன் 1:3 வீதம் விதைத்தால், இலைப்புள்ளி நோயின் தாக்கம் குறையும். இந்நோயின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும் நிலங்களில் ஊடுபயிராக, கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றைப் பயிரிட்டு, அடுத்த பயிருக்கு நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம்.

முந்தைய பயிரின் கழிவுகளை அகற்றி விட்டு, ஆழமாக உழுது முதல் நிலை நோய்ப் பரப்பிகளைத் தடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டாசிம் அல்லது 200 கிராம் மாங்கோசெப் வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் கலந்து, இலைகள் நன்கு நனையும் வகையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

துரு நோய் (பக்சீனியா அரசிடிஸ்)

அறிகுறிகள்: முதல் இலையின் அடிப்புறத்தில்  கொப்புளங்கள் தோன்றும். இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் இரகங்களில், கொப்புளங்களைச் சுற்றிப் பூசண வித்துகள் பரவியிருக்கும். இலையின் மேற்புறமும் ஆரஞ்சு நிறக் கொப்புளங்கள் இருக்கும். இந்தக் கொப்புளங்கள் பூக்களிலும் இருக்கும். இந்நோயின் அறிகுறிகள் அதிகமாக இருக்கும் செடிகளின் இலைகள் காய்ந்த நிலையில், செடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கட்டுப்பாடு: முன்பருவமான ஜூன் 15-இல் விதைத்தால், இந்நோய்ப் பரவலைத் தடுக்கலாம். முன்பருவ நிலக்கடலை சாகுபடி மூலம் இந்நோய்ப் பரவல் ஏற்படும். இதைக் கட்டுப்படுத்த, குளோரோதலோனில் 0.2 சதவீதக் கரைசல் அல்லது மேங்கோசெப் 0.25 சதவீதக் கரைசலைத் தெளிக்கலாம்.

மொட்டுக்கருகல் நோய் (நிலக்கடலை மொட்டுக்கருகல் வைரஸ்)

அறிகுறிகள்: இளம் இலைகளில் வெளிர் பச்சை நிறத்தில் வளையப் புள்ளிகள் தோன்றி கோடுகளாக மாறும். அதிக வெப்ப நிலையில், இலை நுனியில் கருகல் ஏற்படும். செடிகள் முதிர்ச்சியடையும் போது, சிறிய இடைக்கணுவுடன் மொட்டுகள் தோன்றி வளர்ச்சிக் குன்றிக் காணப்படும். இந்நோய், இலைப்பேன் மூலம் பரவும்.

கட்டுப்பாடு: குருவை, சம்பா ஆகிய பருவங்களில் முன் காலங்களில் விதைப்புச் செய்தால், இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். பயிர்கள் அடர்த்தியாக இருத்தல், முன்பருவக் காலத்தில் விதைத்தல், கலப்புப் பயிராகக் கம்பை விதைத்தல் ஆகிய முறைகளால், நோயைப் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.

நிலக்கடலை மற்றும் கம்பை 7:1 வீதம் விதைக்கலாம். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 1.6 மி.லி. மானோகுரோட்டாபாஸ் அல்லது 2 மி.லி. டைமீதோயேட் வீதம் கலந்து செடிகளில் தெளிக்கலாம்.

அல்டர்னேரியா இலை நோய் (அல்டர்னேரியா அரசிடிஸ் அ.டெனுசியாமா)

அறிகுறிகள்: அ.அரசிடிஸ் தோற்றுவிக்கும் அறிகுறிகள், இலைகள் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற வடிவில், சுற்றிலும் மஞ்சள் கோடுகளுடன் இருக்கும். அ.டெனுசியாமா தோற்றுவிக்கும் அறிகுறிகள், இலை நுனி பழுப்பு நிறத்தில் காணப்படும். காய்ந்த இலைகள் திருகிய நிலையில் இருக்கும். இலை நரம்புகளும் காய்ந்திருக்கும். இலையின் கருகல் பெரிதாகிக் காய்ந்து விடும். பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறத்தில் இருக்கும்.

கட்டுப்பாடு: மாங்கோசெப் 0.3 சதவீதம் அல்லது காப்பர்  ஆக்ஸிகுளோரைடு 0.3 சதவீதம் அல்லது கார்பன்டாசிம் 0.1 சதவீதக் கலவையை இலைகளில் தெளிக்கலாம்.

தண்டழுகல் நோய் (ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி)

அறிகுறிகள்: பாதிக்கப்பட்ட செடிகளில் வெண்ணிறப் பூசண வித்துகள் காணப்படும். செடிகளின் அடிப்புறம் காய்ந்தும் மஞ்சள் நிறமாகவும், திசுக்கள் உதிர்ந்து காணப்படும். பாதிக்கப்பட்ட இடத்தில், கடுகைப் போன்ற சிறியளவு ஸ்கிலிரோசியம் காணப்படும். பாதிக்கப்பட்ட செடியில், நீலம் கலந்த சாம்பல் நிற விதைகள் உண்டாகும்.

கட்டுப்பாடு: மண்ணிலுள்ள பழைய பயிர்க் கழிவுகளை அகற்றி விட்டு ஆழமாக உழ வேண்டும். ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்வதுடன், ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 50 கிலோ எரு வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

அடியுரமாக, ஏக்கருக்கு 200 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு அல்லது கடுகுப் புண்ணாக்கு வீதம் எடுத்து, விதைப்புக்கு முன் இடலாம். ஒரு கிலோ விதைகளுக்கு 3 கிராம் திரம் + கார்பன்டாசிம் வீதம் கல்ந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

விதை நேர்த்தி

விதைப்பதற்குச் சற்று முன், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி வீதம் எடுத்து விதைகளுடன் கலக்க வேண்டும். இந்த விதைகளில் உயிர் உரங்களையும் கலக்கலாம். ஆனால், பூசணக்கொல்லிகளை இந்த விதைகளில் கலக்கக் கூடாது.

இரசாயன முறையில், ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் திரம் அல்லது 4 கிராம் மாங்கோசெப் அல்லது 2 கிராம் கார்பாக்சின் அல்லது 2 கிராம் கார்பெண்டாசிம் வீதம் கலந்து விதைகளை நேர்த்தி செய்யலாம்.

ஒருங்கிணைந்த மேலாண்மை

விதைப்புக்கு முன், பழைய பயிரின் விடுபட்ட கழிவுகளை அகற்றி விட்டு, அதிகளவில் எருவை இட்டுஆழமாக உழுதால், இந்நோயின் தாக்கம் குறையும்.

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்வதுடன், ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 50 கிலோ எரு வீதம் கலந்து நிலத்தில் இட வேண்டும்.

அடியுரமாக, ஏக்கருக்கு 200 கிலோ ஆமணக்குப் புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு அல்லது கடுகுப் புண்ணாக்கு வீதம் எடுத்து, விதைப்புக்கு முன் இடலாம்.

ஒரு கிலோ விதைகளுக்கு 2-3 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் அல்லது கேப்டான் வீதம் கலந்து, உலர் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.

செடிகளில் விழுது இறங்கும் போது, ஏக்கருக்கு, டெர்ராகுளோர் (Terrachlor 75% WP) 8 கிலோ, டெராஸோல் (Terrazole 35% WP) 16 கிலோ வீதம் கலந்து, நிலத்தில் இட்டு இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது, பாதுகாப்பான ஆடைகளை அணிவதோடு, தயாரிப்புச் சீட்டில் உள்ளபடி மருந்தின் அளவு,  பயன்படுத்தும் நேரம் மற்றும் அறுவடைக்கு முந்தைய இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் – 642 101 என்னும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி: 04253 – 288722.


மானாவாரி நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

முனைவர் இரா.இராதா ஜெயலட்சுமி,

முனைவர் சி.சுதாலட்சுமி, முனைவர் இரா.அருள் பிரகாஷ், முனைவர் சு.பத்மபிரியா, தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் – 642 101.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்களுக்குத் துத்தநாகத்தின் அவசியம்!

  • டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள்!

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!