My page - topic 1, topic 2, topic 3

டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள்!

டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள்!

நோய் வருமுன் பயிர்களைக் காக்கும் சிறந்த உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியாக டிரைக்கோடெர்மா விளங்குகிறது. இது, பயிர்களை நோய்களிலிருந்து காப்பதுடன், அவற்றின் வளர்ச்சியையும் தூண்டுகிறது. டிரைக்கோடெர்மா விரிடி என்பது மிகச் சிறந்த எதிர் உயிர் பூசணமாகும். இது, பயிர்களைத் தாக்கும் பலவகையான, மண்ணால் பரவும் பூசண வேர் நோய்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கட்டுப்படுத்தும் நோய்கள்  

மண்ணால் பரவும் பித்தியம், ரைசோக்டோனியா, ஃபுசாரியம் போன்ற பூசணங்களால் ஏற்படும் வேரழுகல் நோயைத் தீவிரமாகத் தடுக்கிறது.

நாற்றங்காலில் இளம் நாற்றுகள் அழுகி விழுவதைத் தடுத்து, நாற்றுகளுக்கு நோயற்ற வளர்ச்சியைத் தருகிறது.

தக்காளி, பருத்தி மற்றும் பயறுவகைப் பயிர்களில், ஃபுசாரியம் பூஞ்சையால் ஏற்படும் வாடல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

வறண்ட சூழ்நிலையில் பயிர்களைத் தாக்கும் கரியழுகல் நோயின் தீவிரத்தைக் குறைக்கிறது.

கிழங்குப் பயிர்கள் மற்றும் காய்கறிப் பயிர்களின் தண்டுப் பகுதிகளில் ஏற்படும், கிழங்கழுகல் மற்றும் தண்டழுகல் பூஞ்சைத் தொற்றுகளைக் கட்டுப்படுத்துகிறது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

இலைகளில் சாம்பல் பூத்ததைப் போன்ற படலத்தை உருவாக்கும் நுண் துகள் பூஞ்சைகளைத் தடுக்கிறது.

புள்ளிகள் தோன்றி இலைகள் காய்ந்து போவதைத் தடுக்கிறது.

பழங்கள் மற்றும் இலைகளில் தோன்றும் சாம்பல் நிறப் பூஞ்சையைத் தடுக்கிறது.

பிற நன்மைகள்

பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான தாவர ஹார்மோன்களை உற்பத்தி செய்து, வேர் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது.

மண்ணிலுள்ள மட்காத குப்பைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை எளிதாகவும் விரைவாகவும் மட்க வைத்து உரமாக மாற்றுகிறது.

மண்ணில் கரைக்க முடியாத நிலையிலுள்ள பாஸ்பரஸ் போன்ற சத்துகளைக் கரைத்துத் தாவரங்கள் எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்தும் முறை

விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைகளுக்கு 4 முதல் 10 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியைப் பயன்படுத்த வேண்டும். சிறிதளவு நீர் அல்லது அரிசிக் கஞ்சியில் இந்தத் தூளைக் குழைத்து, விதைகளில் நன்றாகப் படுமாறு கலந்து, நிழலில் உலர வைத்து விதைப்பதன் மூலம், வேரழுகல் நோயைத் தடுக்கலாம்.

நாற்று நனைப்பு: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் டிரைக்கொடெர்மா விரிடி வீதம் கலந்த கரைசலில், நாற்றுகளின் வேர்களைப் பத்து நிமிடங்கள் நனைத்து எடுத்து நடலாம். இந்தக் கரைசலில் சிறிதளவு சாணத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நிலத்தில் இடுதல்: ஏக்கருக்கு 2.5 முதல் 5 கிலோ டிடைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, நன்கு மட்கிய 50 கிலோ தொழுவுரத்தில் நன்கு கலந்து நிலத்தில் இடலாம். இதை, நடவுக்கு நிலத்தைத் தயார் செய்யும் போதே இடுவது நல்லது.

செடிகளுக்கு இடுதல்: ஒரு செடிக்கு 10 கிராம், மரத்துக்கு 50 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, மண்புழு உரம் அல்லது தொழுவுரத்தில் கலந்து வேர்ப்பகுதியில் இட்டு, மண்ணால் மூடிவிட வேண்டும்.

வீட்டிலேயே எளிதாகப் பெருக்கம் செய்தல்: டிரைக்கோடெர்மா விரிடி பூசணத்தை, தொழுவுரத்தைப் பயன்படுத்தி எளிதாகப் பெருக்கம் செய்து செடிகளுக்கு இடலாம்.

தேவையான பொருள்கள்: டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோ, நன்கு மட்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் 100 கிலோ, போதியளவு நீர்.

தயாரிப்பு முறை: நிழலுள்ள இடத்தில், தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தைப் பரப்பி வைக்க வேண்டும்.

இதில், ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை இட்டு நன்கு கலந்து விட வேண்டும்.

இந்தக் கலவையில் 50 சதவீத ஈரப்பதம் இருக்கும் வகையில், அதாவது, இந்தக் கலவையைக் கையில் எடுத்து இறுக்கிப் பிடித்தால் நீர் வடியாத அளவில் நீரைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.

பிறகு, இக்கலவையைச் சாக்குப் பை அல்லது தென்னை ஓலையால், காற்றுப் புகாதபடி மூடி வைக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், 7-10 நாட்களில் உரக்கலவையின் மேற்பகுதியில் பச்சை நிறத்தில் பூசணம் படிந்திருப்பதைக் காணலாம். இதுவே, உயிரி உரம் பயன்படுத்தத் தயாராகி விட்டதற்கான அறிகுறி ஆகும்.

இடும் அளவு: இந்த உரத்தை, காய்கறிச் செடிகள் மற்றும் தொட்டிச் செடிகளுக்கு, மண்ணைக் கிளறி, செடிக்கு 50-100 கிராம் வீதம் இட்டு மண்ணை மூடி விடலாம்.

மா, எலுமிச்சை, கொய்யா போன்ற மரங்களுக்கு அவற்றின் வயதைப் பொறுத்து, ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை எடுத்து, மரங்களைச் சுற்றிக் குழியை அமைத்து வேர்ப்பகுதியில் இட்டு மண்ணை மூடி விடலாம்.

கவனிக்க வேண்டியவை

இந்த இயற்கைப் பூசணத்தைப் பயன்படுத்திய பிறகு, குறைந்தது 15-20 நாட்களுக்கு அந்த நிலத்திலோ, மரம் செடி கொடிகளிலோ இரசாயனப் பூசணக்கொல்லி எதையும் பயன்படுத்தக் கூடாது.

டிரைக்கோடெர்மா விரிடியை, மற்ற உயிர் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருள்களுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

டிரைக்கோடெர்மா விரிடியை வெய்யில் படாத இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.


டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்கள்!

கா.அரிபுத்திரன்,

வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • மானாவாரி நிலக்கடலைப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

  • பயிர்களுக்குத் துத்தநாகத்தின் அவசியம்!

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!