விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான பெரிய வாய்ப்பாக உயிர்ம வேளாண்மைச் சான்று அமைந்துள்ளது. நுகர்வோரிடையே இரசாயனமற்ற உணவுப் பொருள்கள் மீதான ஆர்வம் அதிகமாகி வருவதால், இந்தச் சான்றிதழ், விவசாயிகளுக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.
செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கை உரம், பயிர்ச்சுழற்சி மற்றும் உயிரியல் முறைகளைப் பின்பற்றிச் செய்யப்படும் நிலையான வேளாண் முறை, உயிர்ம வேளாண்மை. மண்வளத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்கள் சிதைவதைத் தடுத்தல் மற்றும் அவற்றை மீட்டெடுத்தல், சத்தான உணவு உற்பத்தி ஆகியன இயற்கை வேளாண்மையின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
இயற்கை முறை விளை பொருள்களை உற்பத்தி செய்ய விரும்புவோர், இயற்கை முறைச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்து, உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறலாம். இந்தச் சான்றைப் பெற, தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறையின் (Department of Seed Certification and Organic Certification) இணையதளத்தில் அல்லது அருகிலுள்ள அலுவலகத்தை அணுகிப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழைப் பெறுவது எளிமையான செயல் முறையாகும். இது, APEDA-வின் NPOP திட்டத்தின் கீழ், அரசு அல்லது PGS-இந்தியா போன்ற உள்ளூர், சமூக அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படும். சிறு விவசாயிகள், உள்ளூர்ச் சந்தைகள் மற்றும் சமூக விற்பனைக்கு, பிஜிஎஸ்-இந்தியா பங்கேற்பு உத்தரவாத முறை சான்றிதழைப் பெறுவது மிகவும் சிறந்தது.
இயற்கை விளை பொருள்களை ஏற்றுமதி செய்யவோ, பெரிய தேசியப் பல்பொருள் அங்காடிகளில் விற்கவோ விரும்பினால், NPOP (தேசிய இயற்கை உற்பத்தித் திட்ட முறை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். புதிய விண்ணப்பதாரராக இருந்தால், இறுதி விளைபொருள் 100 சதம் இயற்கை என அங்கீகரிக்கப்படுவதற்கு முன், நிலத்தில் எவ்விதச் செயற்கை இரசாயனமும் பயன்படுத்தப்படாத, மூன்றாண்டு மாற்றக்காலம் கோரப்படுகிறது.
தமிழ்நாடு இயற்கை வேளாண்மைச் சான்றளிப்புத் துறை (TNOCD) என்பது, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழுள்ள, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தால் (APEDA) அங்கிகரிக்கப்பட்ட அங்ககச் சான்றளிப்பு அமைப்பாகும். தேசிய இயற்கை உற்பத்தித் திட்டத்தின் (NPOP) விதிமுறைகள் மற்றும் ISO 65 தரநிலைகளின்படி, மாநிலத்தில் இயற்கை உற்பத்தி முறைகளை ஆய்வு செய்து சான்றளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு இயற்கை வேளாண்மைச் சான்றளிப்புத்துறை (TNOCD) நிறுவப்பட்டது.
இத்துறையால் சான்றளிக்கப்படும் இயற்கை வேளாண்மைப் பொருள்கள், ஐரோப்பிய தரநிலைகளுக்கு இணையானவை மற்றும் ஏற்றுமதிக்குத் தகுதியானவை. இது இயற்கை விளை பொருள்களுக்குப் பெருமதிப்பைச் சேர்க்கும். சர்வதேசச் சந்தைகளில் அங்ககப் பொருள்களை எளிதாக விற்க முடியும்; சாதாரணப் பொருள்களை விட அதிக விலை கிடைக்கும்.
சான்றிதழைப் பெறுவதற்கான வழிமுறைகள்
தனி நபராகவோ அல்லது குறைந்தது 25 விவசாயிகள் அடங்கிய குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். உரிய படிவத்தை நிரப்பி, பதிவுக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணத்தை, அரசு நிர்ணயித்த கணக்கில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்துடன் பண்ணை வரைபடம், மண் மற்றும் பாசனநீர் ஆய்வு முடிவுகள், இயற்கை இடுபொருள்களை வாங்கிய இரசீதுகள், பயிர் சாகுபடிப் பதிவேடுகள், ஆண்டுப் பயிர்த் திட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, அங்ககச் சான்றளிப்பு அதிகாரிகள் குழுவினர், பண்ணைக்கு நேரில் வந்து, அங்கக உற்பத்தி முறைகள், National Programme for Organic Production அல்லது Participatory Guarantee System தர நிலைகளில் உள்ளனவா என ஆய்வு செய்வார்கள்.
இயற்கை முறைக்கு மாறுவதற்கு, குறிப்பிட்ட மாறுதல் காலம் தேவைப்படும். ஆண்டுப் பயிர்களைப் பயிரிடுவோர், மூன்று ஆண்டுகள் வரை இயற்கை வேளாண்மை முறைகளை முறையாகப் பின்பற்றி, சான்றுகளைப் பராமரிக்க வேண்டும்.
அதிகாரிகளின் ஆய்வறிக்கைகள் சரியாக இருந்தால், அங்கக வேளாண் உற்பத்திச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் உரிய ஆய்வுடன் புதுப்பிக்க வேண்டும்.
கட்டண விவரங்கள்
தனி நபர் பதிவின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகள், பதிவுக் கட்டணமாக ரூ.500, பிற விவசாயிகள் ரூ.1,000, ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.1,000, பயணச் செலவுக்காக ரூ.200 செலுத்த வேண்டும்.
குழுவாக இயங்குவோர், பதிவுக் கட்டணமாக ரூ.5,000, ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.1000, பயணச் செலவுக்காக ரூ.200 செலுத்த வேண்டும்.
பெருநிறுவனங்கள், பதிவுக் கட்டணமாக ரூ.5,000, ஆய்வு மற்றும் சான்றளிப்புக் கட்டணமாக ரூ.2,000, பயணச் செலவுக்காக ரூ.400 செலுத்த வேண்டும். அனைத்துப் பயிர்களுக்கும் இந்தச் சான்றளிப்பைப் பெறலாம்.
தொடர்புகொள்ள வேண்டிய இடம்
அவரவர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறை அலுவலகம் அல்லது தமிழ்நாடு விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



