My page - topic 1, topic 2, topic 3

கோடை உழவு கோடி நன்மை தரும்!

கோடை உழவு கோடி நன்மை தரும்!

மிழகத்தின் சாகுபடி நிலப்பரப்பில் சுமார் 50 விழுக்காடு மானாவாரி ஆகும். மானாவாரி வேளாண்மையில் விளைச்சல் என்பது, அங்கே பெய்யும் மழையைப் பொறுத்தே அமையும். பயிரின் குறிப்பிட்ட வளர்ச்சிப் பருவத்தில் மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்தால், பயிரின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். மழையின் அளவு குறைவாகவோ அல்லது சீரற்றோ இருப்பின், மானாவாரிப் பயிர் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலில், மழைநீர்ச் சேமிப்பு என்பது, மானாவாரி சாகுபடியில் மிக முக்கியத் தொழில் நுட்பமாக அமைகிறது. மானாவாரியில் மழைநீரைச் சேமித்து, அதிக மகசூலைப் பெறுவதற்கான உழவியல் தொழில் நுட்பங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

கோடை உழவின் அவசியம்

நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப் பகுதிக்குச் செல்லும் போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறி விடும். மேல் மண்ணை உழவு செய்து புழுதிப் படலத்தை அமைத்து விட்டால், விண்வெளிக்கும் வேர் சூழ் மண்டலத்திற்கும் இடையேயான தொடர்பு அறுந்து விடும். இதனால், நிலத்தில் உள்ள ஈரத்தை ஆவியாக விடாமல் இந்தப் புழுதிப் படலம் தடுத்து விடும்.

கோடைக் காலத்தில் பெய்யும் மழைத்துளியின் அளவு 5 மி.மீ. ஆகும். இது, பருவமழைக் காலத்தில் பெய்யக்கூடிய மழைத்துளியின் அளவை (0.5 மி.மீ.) விட அதிகமாகும். அதுமட்டுமின்றி, மழைக் காலத்தில் ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழையை, ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்து விடும். எனவே, இத்தகைய மழையை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோடை உழவின் நன்மைகள்

கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால், மண் விரைவில் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்து விடும். எனவே, மண்ணில் மழைநீர் இறங்கும் திறன் அதிகமாகும்.

கோடை உழவு செய்யாத நிலங்களில் நீர் வேகமாக வடிந்து ஓடும். இப்படி வழிந்து ஓடும் போது மண்ணரிப்பு ஏற்படும். எனவே, கோடையில் நிலத்தின் சரிவுக்குக் குறுக்கே உழும் போது, மண்ணரிப்புத் தடுக்கப்படும்.

கோடை உழவின் மூலம் மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்படுவதால், மண்வளம் காக்கப்படும்.

நிலத்திலுள்ள களைகள், குறிப்பாகக் கோரை போன்ற களைகள் கட்டுப்படுத்தப்படும்.

ஏற்கனவே மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப்புழுக்கள் கோடை உழவால் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால், அடுத்து வரும் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்கதல் பெருமளவில் குறையும்.

சரிவுக்குக் குறுக்கே உழுதல்

மானாவாரி நிலங்களில் சரிவுக்குக் குறுக்கே உழும் போது, மழைநீர் ஆங்காங்கே சால்களில் தேங்கி நின்று, மண்ணின் அடிப்பகுதி வரை செல்லும். இதனால், கூடுதல் செலவும் எதுவும் இல்லை. மேலும், இந்த முறையைக் கையாண்டால், அதிகப்படியான நீர், மேல் மண்ணோடு வீணாதல் தடுக்கப்படும்.

சரிவுக்குக் குறுக்கே சிறு வரப்புகள் அமைத்தல்

நிலச்சரிவு 0.5 சதத்துக்கு அதிகமாக இருக்கும் நிலங்களின் குறுக்கே, 0.5 முதல் 0.75 அடியளவில் சிறுசிறு வரப்புகளை அமைத்தால், நிலத்திலிருந்து மண் மற்றும் மழைநீர் அடித்துச் செல்வதைத் தடுத்து, நிலத்தின் ஈரத்தை அதிகமாக்கலாம்.

சரிவுக்குக் குறுக்கே சம மட்ட வரப்புகள் அமைத்தல்

நிலச்சரிவு 2-10 சதமாக இருக்கும் இடங்களில், சத்தான மேல்மண் மற்றும் மழைநீரைப் பாதுகாக்க, 130 செ.மீ. அடிமட்ட அகலம், 30 செ.மீ, மேல்மட்ட அகலத்தில், 40 செ.மீ, உயரமுள்ள சமமட்ட வரப்புகளை அமைக்க வேண்டும். இதனால், சிறிய வடிகால்களை உருவாக்கி, நிலத்திலுள்ள மண்ணை, மழைநீர் அடித்துச் செல்வது தவிர்க்கப்படுவதுடன், நாளடைவில் நிலமும் சமனாவதற்கு வழியேற்படும்.

ஆழச்சால் அகலப்பாத்தி அமைத்தல்

விதைப்பதற்கு முன் நிலத்தை நன்கு உழுது ஆழச்சால் அகலப் பாத்திகளை அமைத்தால், மழைநீரை வீணாகாமல் சேமித்து, மகசூலைக் கணிசமாக அதிகரிக்கலாம். இம்முறையில், 150 செ.மீ. அகலத்தில் பாத்தியையும், 30 செ.மீ. அகலம், 15 செ.மீ. ஆழத்தில் வடிகாலையும் அமைத்து, பல்நோக்கு விதைப்புக் கருவி மூலம் விதைத்தால், தற்போதைய விதைப்பு முறையில் கிடைப்பதை விட அதிக விளைச்சல் கிடைக்கும்.

விவசாயிகள் மேலே குறிப்பிட்ட அனைத்துத் தொழில் நுட்பங்களையும் கடைப்பிடித்து மழைநீரை நிலத்தில் சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்; மண்ணரிப்பையும் தடுக்க வேண்டும்.


கோடை உழவு கோடி நன்மை தரும்!

முனைவர் ப.அய்யாத்துரை,

சிறுதானிய மகத்துவ மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், அத்தியந்தல், திருவண்ணாமலை – 606 603. முனைவர் ப.துக்கையண்ணன், மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வாகரை, திண்டுக்கல் – 624 613. முனைவர் கு.சத்தியா, எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், திண்டிவனம், விழுப்புரம் – 604 001.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்: