My page - topic 1, topic 2, topic 3

கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

மிழகக் கிராமங்களில் வேலியோரங்களில் இயல்பாக வளரும் ஒரு செடி தான் பிரண்டை (Cissusquadrangularis). பொதுவாக, சமையலில் துவையல், இரசம் போன்றவற்றில் பயன்படும் இந்த மூலிகை, பாரம்பரியக் கால்நடை மருத்துவத்திலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. காலங்காலமாக மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் மருந்தாகப் பயன்பட்டு வரும் பிரண்டை, இப்போது மீண்டும் விஞ்ஞான உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியா, உலகின் மிகப்பெரிய கால்நடை வளமிக்க நாடுகளில் ஒன்று. சமீபத்திய மதிப்பீட்டின்படி, நாட்டில் 300 மில்லியனுக்கும் அதிகமான பசுக்கள் மற்றும் எருமைகள் உள்ளன. இந்திய கால்நடைச் சுகாதாரச் சந்தை, 2024-ஆம் ஆண்டில் 1.73 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2033-ஆம் ஆண்டுக்குள் இது, 4.17 பில்லியன் டாலரைத் தாண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கால்நடைகளில் நோய்கள், மூட்டுப் பிரச்சினைகள் மற்றும் மருந்துச் செலவுகள் மிகுந்து வரும் நிலையில், குறைந்த செலவிலான மூலிகை மருத்துவ முறைகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக, Ethnoveterinary Medicine எனப்படும் பாரம்பரியக் கால்நடை மருத்துவம், இந்தியாவின் பல கிராமங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது.

2025-ஆம் ஆண்டு வெளியான ஆய்வொன்றில், தமிழ்நாட்டின் சில கிராமங்களில் 80 சதத்துக்கும் அதிகமான விவசாயிகள், இன்னும் மூலிகை சார்ந்த கால்நடை மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

பிரண்டை, விட்டேசி குடும்பத்தைச் சேர்ந்த சதைப்பற்றுள்ள கொடி வகை மூலிகை. இது, அஸ்தி சம்ஹாரகா, ஹட்ஜோட்,, எலும்பு செட்டர் செடி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்குப் பிரண்டை, வஜ்ரவல்லி என்ற பெயர்கள் உண்டு.

இந்த மூலிகையின் முக்கியச் சிறப்பு, எலும்பு முறிவுகளை விரைவாக ஆற்றும் திறன் ஆகும். அதனால், கிராமப்புறங்களில் மாடுகள், ஆடுகள் மற்றும் குதிரைகளில் ஏற்படும் எலும்பு முறிவு மற்றும் மூட்டு வலிக்கு, பிரண்டை விழுதைத் தடவுவது காலங்காலமாக இருந்து வருகிறது. பிரண்டை, எலும்பு மீளுருவாக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டது என்று ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரியக் கால்நடை மருத்துவ முறைகளில், பிரண்டை விழுது, கால்நடைகளின் மூட்டு வீக்கம், தசைவலி மற்றும் கால் சுளுக்கு போன்ற பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஆய்வில், பிரண்டைத் தண்டு விழுது, சுளுக்கு மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் கால்நடைகளில் பால் சுரப்பைக் கூட்ட, இந்த மூலிகையை உணவுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரண்டைத் தண்டு மற்றும் இலைகள், செரிமானக் கோளாறுகள், குடல் தொற்று மற்றும் உடல் வலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விஞ்ஞான நோக்கில் பார்க்கும் போது, பிரண்டையில் சக்தி வாய்ந்த உயிர்ச் சத்துகள் உள்ளன. இதில், ஃபிளாவனாய்டுகள், டிரைடெர்பீ னாய்டுகள், பி-சிட்டோஸ்டெரால், கால்சியம், கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியச் சத்துகள் உள்ளன. இவை, உடலின் அழற்சியைக் குறைக்கவும், எலும்பு மற்றும் தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன.

கால்நடைகளில் arthritis அல்லது மூட்டு ஒவ்வாமை என்பது, பொதுவான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக, வயதான மாடுகள் மற்றும் வேலைகளில் ஈடுபடும் கால்நடைகளில் மூட்டு வலி அதிகமாகக் காணப்படுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் சில இரசாயன மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால், பிரண்டை போன்ற மூலிகைகள் இயற்கையான மாற்று மருத்துவமாக ஆராயப்படுகின்றன.

ஆய்வுகளில், பிரண்டை மெத்தனால் சாறு குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. நாய்களின் எலும்பு முறிவைக் குணப்படுத்தும் ஆய்வில், ஆர-உல்னா எலும்பு முறிவு விரைவாக இணைந்ததாக, கதிரியக்கவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால், கால்நடை மருத்துவத்தில் பிரண்டைக்கு இருக்கும் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி, பிரண்டை, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு, காயத்தை ஆற்றுதல் மற்றும் கல்லீரல் பாதுகாப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அதாவது, உடலில் ஏற்படும் free radicals-ஐ கட்டுப்படுத்தி, செல்களைப் பாதுகாக்கும் திறன் இதற்குள்ளது. காயம் ஆறுதலை வேகப்படுத்தியதாகக் சில ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்பு என்பது, மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் ஆன்ட்டிபயாடிக் எதிர்ப்புக் காரணமாக ஆண்டுக்கு 10 மில்லியன் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதனால், இரசாயன மருந்துகளுக்குப் பதிலாக, மூலிகை சார்ந்த கால்நடை மருத்துவம் மீண்டும் உலகளவில் கவனம் பெறுகிறது.

பிரண்டையின் பாதுகாப்புக் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விலங்குகளில் நடைபெற்ற நச்சுத்தன்மை ஆய்வுகளில், பிரண்டையை அதிகளவில் கொடுத்த போதும் பெரிய பாதிப்பு எதுவும் காணப்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் காலத்தில் இரசாயன மருந்துகளின் செலவு அதிகரித்து வரும் நிலையில், கிராமிய அறிவையும் விஞ்ஞான ஆதாரங்களையும் இணைக்கும் மூலிகை மருத்துவம் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, பிரண்டை சாதாரண வேலிச்செடி அல்ல; அது கால்நடைகளின் நலத்தைப் பாதுகாக்கும் இயற்கையின் அரிய பரிசாகப் பார்க்கப்படுகிறது. பழமையான கிராமிய அறிவு இன்று அறிவியல் ஆய்வுகளால் உறுதியாகி வரும் நிலையில், பிரண்டை போன்ற மூலிகைகள், எதிர்காலக் கால்நடை மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடும்.


கால்நடை மருத்துவத்தில் கவனம் பெறும் பிரண்டை!

முனைவர் மு.வெங்கிடசாமி,

உதவிப் பேராசிரியர் – பால்வளப் பொறியியல் துறை, கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுச் சாலை, சேலம் – 636 112.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • கோடையில் கோழிகள் பராமரிப்பு!

  • கோடையில் பன்றிகள் பராமரிப்பு!

  • கோடையில் ஆடுகள் பராமரிப்பு

  • கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு!

  • தரமான கறவை மாடுகள்!

  • கறவை மாடுகளில் கால்சியக் குறையால் ஏற்படும் பாதிப்புகள்!

  • கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

  • பயறுவகைத் தீவனப் பயிர்கள்!

  • கால்நடைகளின் தாதுப்புகள் தேவையைச் சரி செய்யும் தாதுப்புக் கட்டி!