கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் கால்நடைகளுக்குச் சவால்களாகத் திகழ்கின்றன. விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்திக்கு, அதிக வெப்பம் பெரும் சவாலாக உள்ளது. கால்நடைகளில் ஏற்படும் பல்வேறு அயர்ச்சிகளில் உயர் வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சியே பெருந்துயராக அமைவதுடன் உடலியல் மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்
கால்நடைகள் நிழலைத் தேடுதல்.
அதிகமாக நீரைப் பருகுதல்.
பசியின்றி இருத்தல்.
அதிகளவில் உமிழ்நீரை வடித்தல்.
வேகமாக மூச்சு விடுதல்.
உடல் வெப்பநிலை உயர்தல் மற்றும் வாயைத் திறந்த நிலையில் சுவாசித்தல்.
கடும் வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்
நடுக்கம்.
கீழே விழுதல்.
கோடையில் கறவை மாடுகள் பராமரிப்பு
வெய்யில் காலத்தில் அதிகப்படியான கறவை மாடுகளில் பால் உற்பத்திக் குறையும். தினமும் 15 லிட்டருக்கும் அதிகமாகப் பாலைத் தரும் கலப்பினப் பசு மாடுகளில் வெப்ப அயர்ச்சியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சரியான கோடைக்காலப் பராமரிப்பு முறைகளைக் கையாளாத நிலையில், இவ்வகைக் கறவை மாடுகள் வெப்ப அயர்ச்சியால் (heat stroke) பாதிக்கப்பட்டு இறப்பைச் சந்திக்கும்.
குடிநீர் மேலாண்மை
கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறையாவது சுத்தமான, குடிப்பதற்கு உகந்த குடிநீரைக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு எப்போதும் குடிநீர் கிடைக்கும் வகையில் நீர்த் தொட்டியை அமைக்க வேண்டும்.
மாடுகளுக்குக் குடிநீரைத் தரும் போது கலப்புத் தீவனத்தைக் குடிநீரின் மேல் சிறிதளவு தூவி விட்டால், மாடுகளின் நீர்க் குடிக்கும் அளவு அதிகரிக்கும். கலப்புத் தீவனத்தை உண்ட பிறகு குடிநீரை வைத்தால் வைத்தால் அதிகமாகக் குடிக்கும்.
வறண்ட மற்றும் வெப்ப நிலை அதிகமாக நிலவும் பகுதிகளில் அல்லது தீவனப் பயிர்கள் வளராத காலங்களில், கால்நடைகள் அதிகப்படியான உலர் மற்றும் நார்த் தீவனங்களையும், குறைவாகச் செரிக்கக் கூடிய தீவனங்களையும் உண்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கால்நடைகள் குடிநீரை அதிகமாகப் பருகுகின்றன. இத்தகைய காலக் கட்டங்களில் உப்புக் கட்டியைக் (Salt lick) கால்நடைக் கொட்டகையில் கட்டித் தொங்க விட்டால், கால்நடைகள் அக்கட்டியை நாவினால் நக்கும். இதனால், கால்நடைகளில் குடிநீரைப் பருகும் தன்மை கூடுவதுடன், உப்புச் சார்ந்த நோய்கள் வராமல் காக்கப்படும்.
கறவை மாடுகளின் உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கு, நீர்த்தெளிப்பான்களை அமைப்பது, குளிர்ந்த நீரைக் கால்நடைகளின் மேல் தெளிப்பது, மின்விசிறி அமைப்பது ஆகியவற்றின் மூலம் கோடை வெப்பத்தால் ஏற்படும் அயர்ச்சியைத் தவிர்க்கலாம்.
மேலும், கொட்டகைக் கூரைக்கு மேலேயும் நீர்த் தெளிப்பான்களை அமைக்கலாம். இந்தத் தெளிப்பான்களை வெய்யில் நேரத்தில் 15-20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்க வேண்டும். இதனால், மாடுகள் வெய்யில் தாக்கத்திலிருந்து விடுபட்டு, தீவனத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும். எனவே, பால் உற்பத்தியும் அதிகரிக்கும்.
நீர்த் தெளிப்பான்களை கம்பிரசர்ருடன் (compressor) இணைக்கும் போது மட்டுமே தெளிப்பான்களுக்குத் தேவையான அழுத்தம் கிடைத்துச் சரியான முறையில் நீரை தெளிக்கும். அதன் மூலம் மிகக் குறைந்த நீரைக் கொண்டு, மாடுகளைச் சுத்தமாக, சீக்கிரமாகக் குளிப்பாட்டலாம். இந்த அழுத்தமும் மாடுகளின் உடம்புக்கு ஏற்பவே இருக்கும்.
கொட்டகையைச் சுற்றி விரைவாக வளர்ந்து நிழல் தரும் மரங்களான, சூபாபுல், அகத்தி, வேம்பு, கிளரிசிடியா, கல்யாண முருங்கை, பூவரசு போன்ற மரங்களை வளர்ப்பதன் மூலம், கொட்டகைப் பகுதியைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.
வெய்யில் காலத்தில் குளியல் தொட்டிகளை உருவாக்கி அவற்றில் நீராட விடுவதன் மூலம், எருமைகளை வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்கலாம். பால் உற்பத்தியையும் பெருக்கலாம்.
தீவன மேலாண்மை
கோடைக்காலத்தில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 7 மணி வரையிலும் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கம்பி வேலியிட்ட பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களில் இரவு நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடலாம்.
கோடைக்காலத்தில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய, ஹைட்ரோ போனிக்ஸ் பசுந்தீவனம் என்னும் மண்ணில்லா நீரியல் பசுந்தீவன உற்பத்தி, அசோலா உற்பத்தி ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு அளிக்கும் தீவனங்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகளாகப் பிரித்து அளிக்கலாம்.
கால்நடைப் பராமரிப்புத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



