My page - topic 1, topic 2, topic 3

மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!

மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!

ல்லிகை, தமிழ்நாட்டின் முக்கியமான வணிக மலர்ப் பயிராகும். மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மல்லிகைப் பூக்கள் உள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பயிராக விளங்குகிறது.

மல்லிகை சாகுபடியில், மொட்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, மலர்ப்பேன், மாவுப்பூச்சி, மொட்டுப்புழு, சிவப்புச் சிலந்தி போன்ற பூச்சிகள் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றின் தாக்கத்தால் இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் பாதிக்கப்படுவதால், மகசூல் குறைவதுடன் பூக்களின் தரமும் கணிசமாகக் குறைகிறது.

இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, விவசாயிகள் பெரும்பாலும் இரசாயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால், பூச்சிகளில் எதிர்ப்புத்திறன் உருவாதல், நன்மை செய்யும் பூச்சிகள் அழிதல், பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மை அதிகரித்தல், சுற்றுச்சூழல் மாசு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்தச் சூழலில், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பொருளாதாரப் பயனுள்ள, நிலையான அணுகுமுறை ஆகும்.

இதில், பயிர்ச் சுகாதார நடைமுறைகள், வயல் தூய்மை, சரியான கவாத்து, சமச்சீர் உரமிடல், உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள், நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாத்தல், பூச்சிக் கண்காணிப்பு, இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் வண்ண ஒட்டுப் பொறிகள் பயன்பாடு, தேவையின் போது மட்டும் பரிந்துரைக்கப்பட்ட இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை, பொருளாதாரச் சேதநிலை அடிப்படையில் பயன்படுத்துதல் போன்ற, பல்வேறு மேலாண்மை முறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகப் பரிந்துரைகளின்படி, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பூச்சிகளின் தாக்கத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தி, பூக்களின் தரத்தையும் மகசூலையும் உயர்த்தலாம். மேலும், உற்பத்திச் செலவைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் நிலையான மல்லிகை சாகுபடியை மேற்கொள்ள முடியும்.

மொட்டுப்புழு

மல்லிகைப் பயிரில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளில், மொட்டுப்புழு மிகவும் முக்கியமானது. பெண் அந்துப்பூச்சி, இளம் மொட்டுகள் மற்றும் மெல்லிய தளிர்களில் முட்டைகளை இடும். இந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள், மொட்டுகளில் துளைகளை இட்டு உள்ளே சென்று இதழ்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளைத் தின்று சேதப்படுத்தும்.

இதனால், மொட்டுகள் மலராமல் காய்ந்து உதிரும். சில நேரங்களில் புழுக்கள், பட்டுப் போன்ற நூலால் 2-3 மொட்டுகளை ஒன்றாக இணைத்து அவற்றுக்குள் மறைந்து உண்ணும். இத்தகைய கடும் தாக்குதலால் மலர் உற்பத்தி, தரம் மற்றும் சந்தை மதிப்புக் கணிசமாகக் குறையும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பாதிக்கப்பட்ட மொட்டுகள் மற்றும் புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

வயலைச் சுத்தமாகப் பராமரித்துக் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

விளக்குப் பொறிகளை வைத்து அந்தப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

இனக்கவர்ச்சிப் பொறிகளை எக்டருக்கு 5 வீதம் வைத்து, அந்தப் பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும்.

வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதம். அதாவது, ஒரு லிட்டர் நீக்கு 30 மி.லி. வீதமும், தேவையான அளவு ஒட்டும் திரவமும் கலந்து தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், ஸ்பினோசேடு 45SC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மி.லி. அல்லது எமெக்டின் பென்சோயேட் 5SG மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.4 கிராம் அல்லது மாலத்தியான் 50 EC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.

மொக்குத் துளைப்பான் – மொட்டு ஈ

மொட்டு ஈ என்பது, சிறிய கொசுவைப் போன்ற பூச்சியாகும். இது, மல்லிகை மொட்டுக்குள் முட்டைகளை இடும். இவற்றிலிருந்து வெளிவரும் புழுக்கள், மொட்டுக்குள் உள்ள திசுக்களை உண்பதால் மொட்டுகள் வீங்கியும், பழுப்பு நிறமாக மாறியும் உதிர்ந்து விடும். தாக்கப்பட்ட மொட்டு முழுமையாக மலராது. அதிக ஈரப்பதம் மற்றும் மழைக்காலத்தில் இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பாதிக்கப்பட்ட மொட்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

வேப்பெண்ணெய் 3 சதம், அதாவது, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. வீதமும்,  தேவையான அளவில் ஒட்டும் திரவமும் கலந்து தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், இமிடாகுளோபிரிட் 17.8 SL மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மி.லி. அல்லது தயோமீத்சோம் 25 WG மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.25 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.

பூப்பேன்

இது, மிகச்சிறிய, மெலிந்த நிலையிலுள்ள சாறு உறிஞ்சிப் பூச்சியாகும். இது, இளம் இலைகள், மொட்டுகள் மற்றும் மலர்களிலிருந்து சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட மொட்டுகள் சரியாக வளராமல் சுருங்கி விடும். மலர்கள் பழுப்பு நிறமாக மாறித் தரம் குன்றி விடும். இலைகளில் வெள்ளி நிறக் கோடுகள் அல்லது தழும்புகள் தோன்றும். வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை நிலவும் போது, இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நீலநிற ஒட்டுப் பொறிகளை வைத்துக் கவர்ந்து அழிக்கலாம்.

வயலில் காணப்படும் களைகளை அகற்ற வேண்டும்.

மூன்று சதவீத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், ஸ்பினோசேடு 45 SC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மி.லி. அல்லது பிப்ரோனில் 5 SC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. அல்லது டைமீத்தோயேட் 30 EC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.

மாவுப்பூச்சி

இந்தப் பூச்சி, வெள்ளை மெழுகு போன்ற உறையால் மூடப்பட்டிருக்கும். இது, தண்டு, இலை, மொட்டுகள் மற்றும் இளம் கிளைகளில் சாற்றை உறிஞ்சும். தாக்கப்பட்ட செடிகளில் வளர்ச்சிக் குறைந்து இலைகள் சுருங்கும். இப்பூச்சிகள் வெளியிடும் தேன் போன்ற சுரப்பில் கரும்பூஞ்சை (Sooty mould) வளர்வதால், ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படும். மாவுப்பூச்சிகளை ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்குப் பரப்பும் எறும்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பாதிக்கப்பட்ட கிளைகளை வெட்டி அழிக்க வேண்டும்.

எறும்புகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மூன்று சதவீத வேப்பெண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், ப்யூப்ரோபேசின் 25 SC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. அல்லது ஸ்பைரோடெட்ராமெட் 150 OD மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.

இலைச்சுருட்டுப்புழு

இது, மல்லிகை இலைகளைச் சுருட்டி அதற்குள் தங்கி இலைத் திசுக்களை உண்பதால், செடி வளர்ச்சியும், பூ உற்பத்தியும் பாதிக்கப்படும். இந்தப் புழு, இளம் இலைகளைப் பட்டு இழைகளால் இணைத்துச் சுருட்டி அதற்குள் தங்கிச் சேதப்படுத்தும். சுருட்டப்பட்ட இலைகளின் பச்சைத் திசுக்கள் அரிக்கப்படுவதால், வெண்மை அல்லது பழுப்பு நிறமாக மாறும். பிறகு, அந்த இலைகள் உலர்ந்து சுருங்கி உதிர்ந்து விடும். இளம் தளிர்கள் மற்றும் நுனிக் கிளைகளின் வளர்ச்சியும் தடைபடும். 

கடுமையான தாக்குதலில் ஒளிச்சேர்க்கைத் திறன் குறைவதால், செடி பலவீனமாகும். பூ மொட்டுகள் உருவாவது குறைவதால், பூக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையும்.  சுருட்டப்பட்ட இலைகளைத் திறந்து பார்த்தால், பச்சைப் புழுக்கள் மற்றும் அவற்றின் கழிவு காணப்படும். அதிகளவில் சேதமான செடிகள், ஒழுங்கற்ற தோற்றத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

பாதிக்கப்பட்ட இலைகளையும் தளிர்களையும் சேகரித்து அழிக்க வேண்டும்.

தோட்டத்தைச் சுத்தமாகப் பராமரித்து, முறையாகக் கவாத்து செய்து காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும்.

விளக்குப்பொறியை வைத்து, அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

ஒரு லிட்டர் நீருக்கு 50 மி.லி. வேப்பங்கொட்டைச் சாறு அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. வேப்பெண்ணெய்க் கலந்த கரைசலைத் தெளித்து, ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், எமாக்டின் பென்சோயேட் 5 SG மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.4 கிராம் அல்லது குளோரான் டிரானிலிபுரோல் 18.5 SC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.3 மி.லி. அல்லது மாலத்தியான் 50 EC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

ஒரே வகைப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, இயற்கையைப் பாதுகாக்கும் உயிரிகளைப் பாதுகாக்க வேண்டும்.

சிவப்புச் சிலந்தி

சிறியதாக இருக்கும் சிவப்புச் சிலந்திகள், இலைகளின் அடிப்பகுதியில் கூட்டமாக வாழும். இவை சாற்றை உறிஞ்சுவதால் இலைகளில் முதலில் மஞ்சள் புள்ளிகள் தோன்றும். பிறகு, முழு இலையும் வெண்கல நிறமாக மாறும். தாக்குதல் மிகும் போது, சிலந்தி வலை போன்ற அமைப்புக் காணப்படும். இலைகள் உதிர்ந்து செடியின் ஒளிச்சேர்க்கை குறைந்து மலர் மகசூல் பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

வறட்சியைத் தவிர்க்கும் வகையில், பாசனம் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட இலைகளை அகற்ற வேண்டும்.

ஐந்து சதவீத வேப்பங்கொட்டைச் சாறு கரைசலைத் தெளிக்கலாம்.

தாக்குதல் அதிகமாக இருந்தால், புராபர்கைட் 57 EC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. அல்லது பெனசாகுயின் 10 EC மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. அல்லது  நனையும் கந்தகம் 50 WP மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம்.


மல்லிகையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை!

முனைவர் இரா.இராம்ஜெகதீஷ்,

முனைவர் இரா.இரமேஷ், முனைவர் மா.தமிழ்ச்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலையம், தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்: