நாவற்பழம் (Syzygium cumini) சத்துகளும் மருத்துவக் குணங்களும் நிறைந்த வெப்ப மண்டலப் பழமாகும். இது, கருநிறம், துவர்ப்புச் சுவை மற்றும் அதிக நோயெதிர்ப்புக் கூறுகள் காரணமாகச் சிறப்பிடம் பெற்றுள்ளது. வைட்டமின்கள், தாதுகள் மற்றும் உயிர்ச் செயலூக்கச் சேர்மங்கள் இதில் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டில், இதன் பாரம்பரியப் பயன்பாடு குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், இன்னும் முழு வணிக வடிவம் பெறாத பொருளாகவே நாவற்பழம் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், இதன் குறுகிய சேமிப்புக் காலமாகும். இதிலுள்ள அதிக ஈரப்பதம் மற்றும் மெல்லிய தோல் காரணமாக, அறுவடைக்குப் பிறகு 2-4 நாட்களுக்குள் இதன் தரம் குறைகிறது. தவறான அறுவடை மற்றும் போக்குவரத்து முறைகளால், பழங்கள் அடிபடுவதுடன் நுண்ணுயிர்த் தொற்றுக்கும் உள்ளாகின்றன. இதனால் 30-40 விழுக்காடு பழங்கள் வீணாகின்றன.
எனவே, சரியாகக் கையாளுதல், தரப்படுத்தல், முன்குளிர்வித்தல் மற்றும் சேமிப்பு முறைகள் ஆகியன, நாவற் பழத்தில் இழப்புகளைக் குறைத்து, தரத்தைப் பாதுகாப்பதில் மிக முக்கியக் காரணிகளாக உள்ளன.
அறுவடைக்குப் பிந்தைய செயல்முறைகள்
நாவற் பழங்கள் பெரும்பாலும் கையால் பறிப்பதன் மூலம் அல்லது மூங்கில் கம்புகள் மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. முழுமையாகப் பழுத்த பழங்களைப் பறிப்பதும், சேதங்களைத் தவிர்ப்பதும் பழத்தின் தரத்தைப் பாதுகாக்கும் முக்கிய உத்திகளாகும். அறுவடைக்குப் பிறகு, அழுத்தம் மற்றும் மாசடையாமல் நல்ல காற்றோட்டமுள்ள பெட்டிகள் அல்லது கூளத்தில் பழங்களைச் சேகரிக்க வேண்டும். நிலத்திலுள்ள வெப்பத்தைக் குறைக்க, அறுவடை செய்த பழங்களை நிழலில் வைக்க வேண்டும். இதனால், நீராவி இழப்புக் குறைந்து, பழங்கள் சிதையும் வேகம் மந்தமாகும்.
நாவற்பழம் மிக எளிதில் சிதையும் தன்மை கொண்டதால், முன் குளிரூட்டல் முறைகள் அவசியமாகும். இதன் மூலம் நில வெப்பம் நீங்கி, சுவாசம் மற்றும் என்சைமிய செயல்கள் மந்தமாகும். இவ்வகையில், கட்டாயக் காற்றுக் குளிரூட்டல், நீர்க் குளிரூட்டல் மற்றும் பெட்டிக் குளிரூட்டல் போன்ற முறைகள் பயன்படுகின்றன.
தற்காலிகச் சேமிப்புக்கு 10-12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 85-90% ஈரப்பதமும் அவசியம். குறைந்த ஆக்சிஜன் (5-10%) மற்றும் அதிக கார்பன் டை ஆக்சைடு (10-15%) உள்ள வளிமண்டலப் பேக்கேஜிங் (MAP) முறைகள், 10 டிகிரி செல்சியசில், ஜாமுனின் சேமிப்புக் காலத்தை 12-15 நாட்கள் வரை நீட்டிக்கும் திறனைக் கொண்டுள்ளன.
போக்குவரத்து செயல்முறை, நாவற் பழத்தின் தரத்தைப் பாதுகாப்பதிலும் இழப்புகளைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. காற்றோட்டமுள்ள பெட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். போக்குவரத்தின் போது, இயந்திரக் காயங்கள், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பத மாற்றங்களிலிருந்து பழங்களைப் பாதுகாக்க வேண்டும். நெடுந்தூரப் போக்குவரத்தில், குளிரூட்டும் அமைப்பைக் கொண்ட கொள்கலன்களைப் பயன்படுத்த வேண்டும்.
பயண நேரத்தைக் குறைப்பதுடன், வெப்பநிலைக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓர் ஆய்வின்படி, 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 90% ஈரப்பதத்தில் கொண்டு செல்லப்படும் நாவற் பழங்கள், 6 நாட்கள் வரை தரம் கெடாமல் இருக்கும். அதே நேரத்தில், சுற்றுச்சூழல் நிலைகளில், அதாவது, 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் 65% RH-இல் எடுத்துச் செல்லப்பட்ட பழங்கள் 3 நாட்களுக்குள் கெட்டு விட்டன.
அறுவடைக்குப் பிந்தைய செயலாக்கம்
போக்குவரத்துக்குப் பிறகு, சேதமடைந்த அல்லது முற்றிலும் பழுக்காத நாவற் பழங்களை நீக்குவதற்காக, வரிசைப்படுத்தல் மற்றும் தரமிடல் செயல்முறைகள் மேற்கொள்ளப் படுகின்றன. கையால் வரிசைப்படுத்துதல் பொதுவாக நடைமுறையில் இருந்தாலும், பெரியளவிலான செயல்களுக்கு, இயந்திரக் காட்சி மற்றும் நிறம் அடிப்படையிலான தானியங்கி முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
தரமிடல் என்பது, அளவு, நிறம் மற்றும் குறைகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அளவின் அடிப்படையில், நாவற் பழங்களை அளவின் அடிப்படையில், பெரியது (>20 மி.மீ.), நடுத்தரமானது (15-20 மி.மீ.), சிறியது (15 மி.மீ.) என, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
மண், தூசி மற்றும் பிற மாசுகளை அகற்றுவதில், கழுவுதல் மற்றும் சுத்தம் செய்தல் முக்கியச் செயலாகும். இதற்கு, நீரில் மூழ்கும் தொட்டிகள் அல்லது தெளிப்புக் கழுவிகள் பயன்படுகின்றன. இதில், குளோரைன் கலந்த நீர் (50-100 ppm) அல்லது உணவுத் தர சானிடைசர்கள் சேர்க்கப்படுகின்றன. சரியான கழுவல் மற்றும் சுத்திகரிப்பு முறைகள், உணவுப் பாதுகாப்பையும், குறுக்கு மாசுத் தடுப்பதையும் உறுதி செய்கின்றன. ஆய்வின்படி, 100 பிபிஎம் குளோரைன் நீரில் கழுவிக் காற்றில் உலர்த்திய நாவற் பழங்களில் நுண்ணுயிரிகளின் சுமை குறைந்து, சேமிப்புக் காலம் நீடித்தது.
வரிசைப்படுத்தல், தரமிடல் மற்றும் சுத்தம் செய்த நாவற் பழங்கள் விநியோகம் அல்லது மேலதிகச் செயலுக்காக பேக்கேஜிங் செய்யப்படுகின்றன. இதில், சேமிப்புக் காலம் மற்றும் சந்தைத் தேவைகளைப் பொறுத்து, துளையிட்ட பாலிஇதிலீன் பைகள், கிளாம் ஷெல் கொள்கலன்கள் அல்லது MAP போன்ற பல்வேறு பேக்கேஜிங் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்ட காலச் சேமிப்புக்கு 10-12 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் 85-90% ஈரப்பதமும் உள்ள குளிரூட்டப்பட்ட சூழ்நிலைகள் தேவை. கால்சியம் குளோரைடு (0.5-1.0%) சிட்ரிக் அமிலம் (0.5-1.0%) போன்ற வேதியியல் சிகிச்சைகள், பழம் பழுத்தலைத் தாமதிக்கவும், என்சைமிய பழுப்பு மாற்றத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.
வரிசைப்படுத்தல் மற்றும் தரமிடல் உபகரணங்கள்
நாவற்பழச் செயலாக்க நிலையங்களில் தானியங்கி வரிசைப்படுத்தல் மற்றும் தரமிடல் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. இவ்வமைப்புகள், இயந்திரக் காட்சித் தொழில் நுட்பம், நிறம் அடிப்படையில் வரிசைப்படுத்தல் மற்றும் அளவு அடிப்படையில் தரமிடல் முறைகளைப் பயன்படுத்தி, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின் அடிப்படையில் பழங்களைப் பிரிக்கின்றன.
பெல்ட் கிரேடர்கள், ரோலர் கிரேடர்கள் மற்றும் எடை அடிப்படையிலான கிரேடர்கள் இதற்கான உதாரணங்களாகும். கையால் செய்யப்படும் முறைகளுடன் ஒப்பிடும் போது, இத்தானியங்கி அமைப்புகள் அதிகச் செயல்திறன், ஒரே மாதிரியான தரம் மற்றும் அதிக உற்பத்தித் திறனை வழங்குகின்றன.
கழுவிச் சுத்தம் செய்யும் உபகரணங்கள்
நாவற்பழச் செயலாக்க நிலையங்களில், பல்வேறு வகையான கழுவல் மற்றும் சுத்தம் செய்யும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில், நீரில் மூழ்கும் தொட்டிக் கழுவிகள், தெளிப்புக் கழுவிகள் மற்றும் தூரிகைப் படுக்கை கழுவிகள் முக்கியமானவை. நீரில் மூழ்கும் தொட்டிக் கழுவி முறையில், நீர் அல்லது சுத்திகரிப்பு திரவங்களில் பழங்கள் முழுமையாக மூழ்க வைக்கப்படுகின்றன.
தெளிப்புக் கழுவி முறையில், கன்வேயர் பெல்ட்டில் நகரும் பழங்கள் மீது அதிக அழுத்தத்தில் நீர் அல்லது சுத்திகரிப்புத் திரவத்தைத் தெளித்துச் சுத்தம் செய்யப்படுகின்றன. தூரிகைப் படுக்கைக் கழுவிகளில், சுழலும் மென் தூரிகைகள் மூலம், பழங்களின் மேற்பரப்புச் சிதையாமல் மெதுவாக உரசிச் சுத்தம் செய்யப்படுகின்றன.
நாவற்பழக் குழம்பாக்கி
இந்த இயந்திரம், வலுவான சட்டகம், பழங்களை ஊட்டுவதற்கான தொட்டி, உருளை வடிவ ஜாலி, திருகு கன்வேயர், திருகுத் தண்டு, முதன்மை இயக்கி மற்றும் முதன்மைத் தண்டுடன் இணைக்கப்பட்ட பல சக்திப் பரிமாற்ற கூறுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. திருகு கன்வேயர், பழங்களை உருளை ஜாலியின் உள்ளீட்டிலிருந்து வெளியீட்டுக்குக் கொண்டு செல்கிறது. சுழலும் திருகு கன்வேயர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஜாலியின் செயல்பாட்டால் உருவாகும் அழுத்தம் மற்றும் அரிப்பு விசைகளைப் பயன்படுத்தி, இந்த இயந்திரம் பழங்களில் இருந்து குழம்பைப் பிரித்தெடுக்கிறது.
விதைகளைப் பிரித்தல் மற்றும் உலர்த்தல்
நாவற்பழக் குழம்பு உண்ணப்படும் பொருளாக இருந்தாலும், பழத்தின் மொத்த எடையில் 10-15 சதவீத அளவுள்ள விதைகள் கழிவாக நீக்கப்படுகின்றன. ஆனால், இந்த விதைகளில் குறிப்பிடத்தக்க சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் இருப்பதால், இவற்றை மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்த முடியும். இந்தச் செயல்முறை, நன்கு பழுத்த மற்றும் தரமான நாவற் பழங்களைத் தேர்வு செய்வதிலிருந்து தொடங்குகிறது.
நாவற் பழங்களில் இருந்து இயந்திரம் மூலம் பிரிக்கப்படும் விதைகள் கழுவப்பட்டு, 60 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 48 மணி நேரம் உலர்த்தப்படும். பிறகு, 0.58 மி.மீ. அளவுள்ள மெல்லிய தூளாக அரைக்கப்படும். சத்துமிகு இந்தத் தூளைப் பயன்படுத்தி, பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரிக்கலாம். இந்தத் தூளை நீருடன் கலந்து பாகு போல் காய்ச்சி, நாவல் விதை சரப் தயாரிக்கப்படுகிறது. இதை, பானமாக அல்லது பிற உணவுகளில் இனிப்புப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
நாவல் விதை விழுது: விதைத் தூளை நீருடன் அரைத்து மென்மையான விழுதாக மாற்றி, தடவல் பொருளாக அல்லது பேக்கரி மற்றும் இனிப்புப் பொருள்களில் சேர்க்கப் பயன்படுத்தலாம்.
நாவல் விதை சர்பத்: இது, விதைத் தூள், நீர், சர்க்கரை, ஏலக்காய், ரோஜா நீர் போன்ற பொருள்களுடன் சேர்த்துத் தயாரிக்கப்படும் பாரம்பரிய இந்திய பானமாகும். இது, புத்துணர்ச்சியை அளிக்கும் சத்து பானமாகப் பயன்படுகிறது.
நாவல் விதை சேமியா: விதைத் தூளை சேமியா அல்லது பிற பாஸ்தா தயாரிப்பு மாவில் சேர்த்து, அவற்றின் சத்து மதிப்பை உயர்த்தலாம்.இந்த மதிப்புக்கூட்டுத் தயாரிப்புகளில் சேர்க்கப்படும் நாவல் விதைத்தூள், சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்துவதுடன், சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. நாவல் விதைகளில், புரதம், நார், வைட்டமின்கள் மற்றும் இரும்பு, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன.
பேக்கேஜிங் இயந்திரங்கள்
நாவற் பழங்களைச் சுத்தமாகவும் திறம்படவும் பேக்கேஜிங் செய்வதற்கு இயந்திரங்கள் மிகவும் அவசியம். இவற்றில், பாலிஇதிலீன் பைகளுக்கான தானியங்கி பேக்கேஜிங் இயந்திரங்கள், கிளாம் ஷெல் பெட்டிகளுக்கான தட்டு சீலர்கள் மற்றும் மாற்றிய வளிமண்டலப் பேக்கேஜிங் அமைப்புகள் அடங்கும். இந்த இயந்திரங்கள் தாமாகவே நிரப்புதல், சீலிங் செய்தல், லேபிள் ஒட்டுதல் ஆகியவற்றைச் செய்து, தயாரிப்பின் தரத்தைப் பாதுகாக்கவும் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கவும் உதவுகின்றன.
குளிர் சாதனச் சேமிப்பு வசதிகள்
நாவற்பழத்தின் தரத்தைப் பாதுகாக்கவும், சேமிப்புக் காலத்தை நீட்டிக்கவும், குளிர்சாதனச் சேமிப்பு வசதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் நீண்டகாலச் சேமிப்புக்காக, 10-12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 85-90 சதவீத ஈரப்பதமும் பராமரிக்கப்படும். மேம்பட்ட குளிர்சாதன அமைப்புகளில், வாயுக் கலவைகளைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பங்கள் சேர்க்கப்படுவதால், சேமிப்புக் காலத்தை மேலும் நீட்டிக்க முடிகிறது.
முடிவுரை
நாவற்பழத்தின் தரத்தையும் பொருளாதார மதிப்பையும் பாதுகாக்க, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மிகவும் அவசியம். சரியான அறுவடை, சுத்திகரிப்பு, தரப்படுத்தல் மற்றும் வெப்பநிலைக் கட்டுப்பாடு மூலம் கெடுதலைக் குறைக்க முடியும். முன்குளிர்வித்தல் மற்றும் குளிர் சேமிப்பு முறைகள் பழத்தின் ஆயுளை நீட்டிக்கின்றன.
மேம்பட்ட கையாளுதல் முறைகள், விவசாயிகளுக்கும் விற்பனைச் சங்கிலிக்கும் பொருளாதார நன்மையை அளிக்கின்றன. மேலும், தரமான மூலப்பொருள் உறை பதனம் மற்றும் உலர்த்தல் செயல்முறைகளுக்கு ஆதரவாக அமைகின்றன. அறிவியல் அடிப்படையிலான அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மூலம், நாவற்பழம், பண்ணையிலிருந்து நுகர்வோருக்குப் புதுமையாகவும் பாதுகாப்பாகவும் சென்றடைகிறது.

முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ,
முனைவர் ச.பர்வீன், முனைவர் செ.மணிகண்டன், முனைவர் பா.ஹேமலதா, முனைவர் பி.இராஜ்குமார்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



