கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில், அதிகப் பரப்பில் கரும்புப் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய தட்பவெப்ப நிலையில், மறுதாம்பு கரும்புப் பயிரில் குருத்து மாவுப்பூச்சியின் தாக்கமும், பொக்கஹ் போயிங் நோயின் தாக்கமும் பரவலாகத் தென்படுகின்றன.
தாக்குதல் அறிகுறிகள்
சாறு உறிஞ்சும் பூச்சியான குருத்து மாவுப்பூச்சி, பொக்கஹ் போயிங் நோய்க் காரணியாகவும் உள்ளது. இந்நோய், கரும்பின் மூன்று மாத வயதிலிருந்து அறுவடை வரையிலும் தாக்கக் கூடியது. மாவுப்பூச்சிகள், கரும்பின் நுனிப் பகுதியிலும், குருத்துப் பகுதியிலும் அடை அடையாக வெண்ணிறத்தில் இருக்கும். இந்த மாவுப்பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால், இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
பயிர்களின் வளர்ச்சிக் குன்றி, இடைக்கணுக்களின் நீளம் குறையும். கருப்பு எறும்புகள் நடமாட்டமும், கரும்பூசணத் தாக்குதலும் தென்படும். பொக்கஹ் போயிங் நோய் தாக்கிய கரும்பில், இளம் இலைகள் குறுகுதல், திருகுதல், வளர்ச்சிக் குன்றுதல் ஆகிய மூன்று அறிகுறிகள் காணப்படும்.

பொக்கஹ் போயிங் நோயின் தாக்கம் முற்றிய நிலையில், நுனிக்குருத்து அழுகல் நோய் நிலையாகும். இந்நோய், கரும்பின் இளங்குருத்துப் பகுதியில் அதிகப் பாதிப்பை உண்டாக்கும். தொடர்ந்து, தண்டுப் பகுதியில் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும். நோய் முற்றிய நிலையில், இலைகள் சுருங்கி, திருகி, வளர்ச்சியின்றிக் காணப்படும். இதனால், மகசூல் இழப்பு ஏற்படும். மேலும், இளஞ்சிவப்புப் புள்ளிகள், கோடுகள் உருவாகி, கரும்பின் மெல்லிய திசுக்களில் மிக வேகமாக அழுகலை ஏற்படுத்துவதால், இறுதியில் கரும்புப் பயிரானது காய்ந்து விடும்.
இந்நோய், முதல் நிலையில் காற்றின் மூலமும், இரண்டாம் நிலையில் நோயுள்ள கரணை, பாசனநீர், மண் மற்றும் மழைத்துளிகள் மூலமும் பரவும். இந்நோயின் தாக்குதல், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலத்தில் தீவிரமாக இருக்கும். இந்நோய்ப் பரவலில், தட்ப வெட்பச் சூழ்நிலைக் காரணிகளான வெப்பம், காற்றின் ஈரப்பதம், மழை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேலாண்மை முறைகள்
குருத்து மாவுப்பூச்சி மற்றும் பொக்கஹ் போயிங் நோய்த் தாக்காத விதைக் கரணைகளைப் பயன்படுத்த வேண்டும்.
விதைக் கரணைகளை, 100 லிட்டர் நீருக்கு 100 மி.லி. ப்ரோபிகோனசோல் 25 EC மற்றும் 100 மி.லி. இமிடாகுளோபிரிட் 70 WS வீதம் கலந்த கலவையில், 20 நிமிடங்கள் வரை நனைய வைத்து எடுத்து நட வேண்டும்.
குழித்தட்டு நாற்றுகளாக இருந்தால், ஒரு பருச் சீவல்களை மேற்கண்ட பூச்சிக்கொல்லி பூசணக்கொல்லிக் கரைசலில் நேர்த்தி செய்து நட வேண்டும்.
தாக்கப்பட்ட கரும்புக் குருத்துகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கரும்பு பூஸ்டரை, ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ வீதம், கரும்பை நட்ட 45, 60 மற்றும் 75 நாளில், ஒட்டும் திரவம் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
குருத்து மாவுப்பூச்சி மற்றும் பொக்கஹ் போயிங் நோய்த் தாக்குதலை அறிந்ததும், ஏக்கருக்கு 200 மிலி. ப்ரோபிகோனசோல் 25 EC மற்றும் 80 மி.லி. இமிடாகுளோபிரிட் 17.8 SL வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மீண்டும் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், ஏக்கருக்கு 200 மி.லி. ப்ரோபிகோனசோல் 25 EC மற்றும் 100 கிராம் குளோதயானிடின் 50 WG வீதம் எடுத்துக் கலந்து, 20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

முனைவர் எஸ்.துரைசாமி,
முனைவர் த.சசிக்குமார், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர் – 607 001.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



