மரவள்ளிக் கிழங்கு சாகுபடி (Tapioca Cultivation) கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில், நடைபெற்று வருகிறது. மரவள்ளிச் செடிகளைத் தாக்கும் சிலந்திப் பூச்சிகளால், மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்தச் சிலந்திப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உத்திகளைப் பற்றிப் பார்க்கலாம்.
அறிகுறிகள்
» மரவள்ளி (Tapioca Cultivation) இலைகளின் அடிப்புறத்தில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் சிலந்திப் பூச்சிகள் இருக்கும்.
» இவற்றின் தாக்குதலால் இலைகளில் தோன்றும் மஞ்சள் நிறப் புள்ளிகள், பிறகு, பழுப்பு மற்றும் வெண்கல நிறமாக மாறும்.
» இத்தகைய இலைகள் சுருண்டு உதிர்வதால், செடியின் வளர்ச்சிக் குறைவதுடன், மகசூலும் பாதிக்கப்படும்.
தடுப்பு முறைகள்
» மரவள்ளி சாகுபடி (Tapioca Cultivation) நிலத்தை, வாரம் ஒருமுறை கண்காணிக்க வேண்டும்.
» கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கிளைகளைச் சேகரித்து அகற்றி அழிக்க வேண்டும்.
» வறட்சிக் காலத்தில் சீராகப் பாசனம் செய்து, நிலத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும்.
» களைகள் இல்லாமல் நிலத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
» நைட்ரஜன் உரங்களை அதிகமாக இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
» சிலந்திப் பூச்சிகளின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைத் தாண்டினால், தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி, பதிவு செய்யப்பட்ட மைட்டிசைடு (Acaricide) மருந்துகளைப் பரிந்துரை அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மைட்டிசைடு மருந்துகள்
» ஃபெனாஜாகுயின் (Fenazaquin 10% EC) மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. வீதம் கலந்து, இலைகளின் அடிப்பகுதி நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
» அபாமெக்டின் (Abamectin 1.9% EC) மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு 0.5 மி.லி. வீதம் கலந்து, இலைகளின் அடிப்பகுதி நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
» புரோபார்கிட் (Probargite 57% EC) மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. வீதம் கலந்து, இலைகளின் அடிப்பகுதி நன்கு நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
» இந்த மருந்துகளை 7-10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இவற்றை, தேவைக்கு ஏற்ப 2-3 முறை தெளிக்கலாம்.
குறிப்பு
» தேவையில்லாமல் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.
» பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
» மருந்துத் தெளிப்பின் போது, பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை
» பயிர் மாற்றம் செய்ய வேண்டும்.
» பயிர்க் கழிவுகளை அகற்றி அழிக்க வேண்டும்.
» பயனுள்ள பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.
» மஞ்சள் ஒட்டும் பொறிகளை (Yello Sticky Trap), ஏக்கருக்குப் பத்து வீதம் வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள உதவித் தோட்டக்கலை அலுவலர் அல்லது தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம்.
துணை இயக்குநர்,
தோட்டக்கலைத்துறை, கள்ளக்குறிச்சி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

