சாகுபடி நிலத்தைக் கோடைக்காலத்தில் உழவு செய்வது சிறந்த முறையாகும். கோடை உழவு செய்வதால் நிலத்தில் உள்ள களைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதனால் நிலத்தில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூச்சிகளை அழிக்க முடியும். மண்ணில் மறைக்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப் புழுக்கள் போன்றவை அழிக்கப்படும். நிலத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மை காக்கப்படும்.
கோடை உழவின் நன்மைகள்
கோடையில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி உழவு செய்வதே கோடை உழவாகும். நம்முடைய முன்னோர்கள் மானாவாரியாகப் பயிர் சாகுபடி செய்து வந்தார்கள். மானாவாரி சாகுபடியில் ஆறு மாதம் நிலத்தை ஆறப் போடுவார்கள். அப்பொழுது தான் அடுத்த போக விவசாயம் எந்த இடையூறும் இல்லாமல் நன்றாக மகசூலைக் கொடுக்கும் என்னும் நம்பிக்கையில் அப்படிச் செய்தார்கள். கோடையில் உழவு செய்வதால் அடிமண் மேல் மண்ணாகவும், மேல் மண் அடி மண்ணாகவும் மாறும். கலப்பை அல்லது டிராக்டர் மூலம் ஆழமாகவும், சரிவாகவும், குறுக்காகவும் நன்றாக உழ வேண்டும்.
கோடை உழவு செய்வதால் நம்முடைய வயலில் இருந்து தண்ணீர் அடுத்த வயலுக்குச் செல்லாமல் இருக்கும். இல்லாவிட்டால் நீர் மட்டுமல்ல, நம் நிலத்தின் உரமும் அடுத்த வயலுக்குச் சென்று விடும். அதற்காக வரப்பையும் உயர்த்திக் கட்ட வேண்டும்.
கோடை உழவு செய்யும் பொழுது, மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏதுவாகும். மண் இறுக்கம் இல்லாமல் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால் பயிர் சாகுபடி செய்யும் பொழுது வேர் நன்றாக ஓடும்.
கோடை உழவு செய்வதால், மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களைப் பறவைகள் கொத்தித் தின்று விடும். கூட்டுப் புழுக்களின் முட்டைகள் வெயிலில் பட்டு வெடித்து விடும். அதனால் அந்த முட்டைகள் பொரிக்காது.
கோடை உழவு செய்வதால், களைகள் மற்றும் களை விதைகள் நன்றாகக் காய்ந்து விடும். கோரை மற்றும் அருகு இருந்தால் அவற்றின் கிழங்குகளைக் குத்தூசியால் வெட்டி எடுத்து விட வேண்டும். இதனால் களை அதிகளவில் முளைக்காது.
கோடையில் பெருமழை பெய்யும் பொழுது நிலமானது, நன்றாக மழைநீரை உள்வாங்கி ஈரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். களைகளைக் கட்டுப்படுத்தவும், பூச்சி மற்றும் நோயிலிருந்து பயிரைப் பாதுகாக்கவும் இந்தக் கோடை உழவு நமக்கு உதவியாக இருக்கும்.

முனைவர் த.பார்த்திபன், முனைவர் அ.இராமநாதன்,
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



