தென்னிந்தியாவில் பயிரிடக் கூடிய முக்கியமான பயறுவகை கொள்ளுப் பயிராகும். இது, மானாவாரி பயிராகவே பயிரிடப்படுகிறது. எளிதாகக் கிடைக்கக் கூடிய தாவரப் புரதத்தைக் கொண்டுள்ளது. இது, தானியமாகவும் முளைக்கட்டிய பயிராகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவாகவும் தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது. கொள்ளு, இருமலுக்கும் சிறுநீரக நோய்களுக்கும் மாதவிடாய் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
இரகங்கள்
பையூர் 2: இந்த இரகம் 1998-ஆம் வெளியிடப்பட்டது. நவம்பரில் பயிரிடலாம். 100-105 நாட்களில் விளையும். எக்டருக்கு 870 கிலோ மகசூல் கிடைக்கும். விதைகள் ஒளியுணர் திறன் மிக்கவை.
கோ.1: இந்த இரகம் 1953-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 110 நாட்களில் விளையும். எக்டருக்கு 560 கிலோ மகசூல் கிடைக்கும். விதைகள் மெத்தென்று தடித்த தோலுடனும் பலநிறப் புள்ளிகளுடனும் இருக்கும்.
பையூர் 1: இந்த இரகம் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 110 நாட்களில் விளையும். எக்டருக்கு 650 கிலோ மகசூல் கிடைக்கும். விதைகள் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
பருவம்
கொள்ளு சாகுபடியைப் புரட்டாசிப் பட்டத்தில், அதாவது, செப்டம்பர் – நவம்பர் காலத்தில் செய்வது மிகச் சிறந்தது. தீவனப் பயிராகப் பயன்படுத்த, ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பயிர் செய்வது நல்லது. இது, களைச்செடிகள் வளர்வதைக் குறைக்கும். தமிழகத்தில் சுமார் 48,000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் மட்டும் 8 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சாகுபடி மேலாண்மை
நிலத் தயாரிப்பு: நிலத்தைப் புழுதி படிய 2-3 முறை நன்கு உழ வேண்டும். தனிப் பயிராக விதைக்க, எக்டருக்கு 20 கிலோ விதைகள் வேண்டும். இந்த விதைகளைக் கை விதைப்பு மூலம் சீராகத் தூவ வேண்டும். அல்லது டிராக்டர் மூலம் விதைக்கலாம்.
இரசாயன விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது நான்கு கிராம் திரம் மருந்து வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர் உர விதை நேர்த்தி: விதைகளை, ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா வீதம் எடுத்து ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதனால், தழை மற்றும் மணிச்சத்து, பயிருக்கு நன்கு கிடைக்கும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பொட்டலம் ரைசோபியம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து, விதைப்புக்கு முன் வயலில் இட வேண்டும்.
உரமிடுதல்
விதைப்பதற்கு முன், அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மட்கிய குப்பை அல்லது தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்தைக் கொடுக்கக் கூடிய இரசாயன உரங்களை அடியுரமாக இட வேண்டும். அதாவது, டிஏபி 55 கிலோ, யூரியா 6 கிலோ மற்றும் மியூரட் ஆப் பொட்டாஷ் 21 கிலோ வீதம் இட வேண்டும். 2 சதவீத டிஏபி கரைசல் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் தயாரிப்பான பல்ஸ் ஒண்டரை, ஏக்கருக்கு 2 கிலோ, 200 லிட்டர் நீர் வீதம் எடுத்துக் கலந்து பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
களைக்கட்டுப்பாடு
விதைத்த மூன்றாம் நாள் ஒரு லிட்டர் நீருக்கு 4 மி.லி. பென்டிமெத்திலின் வீதம் கலந்து நிலத்தில் தகுந்த ஈரப்பதம் உள்ள போது தெளிக்க வேண்டும். பிறகு, 20 முதல் 25 நாட்களுக்குள் களைக்கொத்து மூலம் களையெடுக்க வேண்டும்.
அறுவடை
அனைத்துக் காய்களும் முதிர்ச்சி அடைந்ததும் அறுவடை செய்ய வேண்டும். பின்பு, விதைகளைப் பிரித்து 3-4 நாட்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும். ஈரப்பதம் 9-10 சதம் இருக்க வேண்டும். உரிய உத்திகளைக் கடைப்பிடித்தால், ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

முனைவர் அ.கோபிகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், முனைவர் எம்.இராமசாமி, உதவிப் பேராசிரியர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் – 632 104.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.




Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/register?ref=IHJUI7TF