செய்தி வெளியான இதழ் செப்டம்பர் 2025
பழங்காலம் தொட்டே மாடுகளைப் பராமரித்தல் நமது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. முன்பு மாடுகளை வண்டி இழுக்கவும், உழவு செய்யவும், பயிர்களுக்குத் தேவையான உரங்களைப் பெறவும் மற்றும் கௌரவ நோக்கிலும் வளர்த்து வந்தனர். ஆனால், பெருகி வரும் மக்களுக்கான புரதச்சத்தின் தேவையை, தாவரப் புரதத்தால் மட்டும் ஈடு செய்ய முடியாததால், கால்நடைகள் மூலம் கிடைக்கும் புரதம் அவசியம் தேவைப்படுகிறது. இதில், பால் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஏனெனில், பாலில் புரதச்சத்து மட்டுமின்றி, கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்ற எரிசக்திக்கான சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் ஆகியன சரிவிகிதத்தில் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை ஏற்றுக் கொள்ளும் உணவாக உள்ளது. மேலும், செல்வந்தர்கள் முதல் ஏழை விவசாயிகள் வரை, குறிப்பாகப் பெண்கள் விரும்பி நடத்தக் கூடியதாக, பால் பண்ணைத் தொழில் அல்லது பால் மாடுகள் வளர்ப்பு உள்ளது.
உலகளவில் 15 சதவீதப் பாலை உற்பத்தி செய்து, பால் உற்பத்தியில் முதல் நாடாக நமது நாடு விளங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், அதிகளவில் பாலைத் தரவல்ல, வெளிநாட்டுக் கறவை மாடுகளும், கலப்பினக் கறவை மாடுகளும் ஆகும். மேலும், கலப்பினக் கறவை மாடுகளை உருவாக்க உதவும்,
செயற்கை முறைக் கருவூட்டலுக்கும் இதில் முக்கியப் பங்குண்டு. இதில் இன்னும் பல நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், பசு மாடுகளில் ஆண்டுக்கு ஒரு கன்றையும், எருமை மாடுகளில் மூன்று ஆண்டுகளில் இரண்டு கன்றுகளையும் பெற்று, இன்னும் பால் உற்பத்தியைப் பெருக்க முடியும்.
தற்செயலாக ஆண் நாயின் விந்து கலந்த பஞ்சை, பெண் நாயின் இனப்பெருக்க உறுப்பில் வைத்த போது, அந்தப் பெண் நாய் கருவுற்றுக் குட்டிகளை ஈன்றது தான் செயற்கை முறைக் கருவூட்டலுக்கு அடிகோலாய் அமைந்தது. 1790-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சேர்ந்த லாசரோ ஸ்பெலன் ஸானி என்பவர், முதன் முதலில் குதிரைகளில் செயற்கைக் கருவூட்டல் முறையைச் செயல்படுத்தினார். பின்னர் 1922-ஆம் ஆண்டு இரஷ்யாவில் ஆடு, மாடுகளை, செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்தனர்.
அமெரிக்காவில் 1938-ஆம் ஆண்டு செயற்கைக் கருத்தரிப்பு முறை, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலில் 1939-ஆம் ஆண்டு, சம்பத் குமரன் என்பவரால் மைசூர் அரண்மனையிலும், 1942-ஆம் ஆண்டு இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகத்திலும், 1949-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மாநிலக் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், செயற்கை முறைக் கருவூட்டல் திட்டம் செயல்படத் தொடங்கியது.
செயற்கை முறைக் கருவூட்டல் நன்மைகள்
ஒரு காளையின் விந்து உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தலாம். சராசரியாக ஒரு காளை ஒரு தடவைக்கு 3 முதல் 6 மி.லி. விந்துவைக் கொடுக்கும். ஒரு மி.லி. விந்தில் 10,000 முதல் 12 இலட்சம் விந்தணுக்கள் இருக்கும். ஆனால், ஒரு கன்று உருவாக ஒரு விந்தணுவே போதுமானது. மற்ற அணுக்கள் வீணாகத் தான் போகும்.
மேலும், இயற்கைக் கருத்தரிப்பு முறையில் ஒரு காளை அதன் வாழ்நாளில் சுமார் 120 பசுக்களுடன் இணையும் போது 50 முதல் 60 கன்றுகள் தான் பிறக்கும். ஆனால், ஒரு காளையின் விந்துவைச் சேமித்து வைத்தால், அதன் மூலம் பல்லாயிரம் பசுக்களைச் சினையாக்கி ஏராளமான கன்றுகளைப் பெற முடியும். அமெரிக்காவில் ஒரு காளையின் விந்தணுக்கள் மூலம் ஓராண்டில் 50,000 கன்றுகள் பிறந்துள்ளன.
சேகரித்த விந்துவை நெடுநாட்களுக்குப் பாதுகாப்பாக வைத்திருந்து பல ஆண்டுகள் கழித்தும் பயன்படுத்த முடியும். ஒரு நிலையில் உயரினக் காளைகள் இறந்து விட்டாலும், சேமித்து வைத்துள்ள விந்தணுக்கள் மூலம், செயற்கை முறையில் பசுக்களைக் கருத்தரிக்க வைத்து, உயரினக் கன்றுகளைப் பெறலாம்.
இந்த விந்துவை, ஒரே சமயத்தில் பல மைல்களுக்கு அப்பால் எடுத்துச் சென்று வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தலாம். ஒரு பண்ணையில் இருக்கும் தரமுள்ள காளை மூலம் இன்னொரு பண்ணையில் உள்ள பசுவைச் சினையாக்க வேண்டுமாயின், காளையுள்ள இடத்துக்குப் பசுவைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது பசுவுள்ள இடத்துக்குக் காளையைக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், செயற்கைக் கருத்தரிப்பு முறையில், பாதுகாக்கப்பட்ட விந்தை மட்டும் எடுத்துச் சென்றால் போதும்.
பண்ணையாளர்கள் குறிப்பிட்ட அல்லது அவர்கள் விரும்பும் காளையின் விந்தை, எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். இனவிருத்திக்குப் பல காளைகளை வைத்துப் பராமரிக்கும் செலவைத் தவிர்க்கலாம். நல்ல வம்சாவளி மிக்க காளைகளின் விந்துவை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
செயற்கைக் கருவூட்டலைச் சுகாதாரமான முறையில் செய்வதால், காளையிடமிருந்து பசுவுக்கோ, பசுவிடமிருந்து காளைக்கோ, தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கலாம். மேலும், நோய்ப் பரவல் உள்ள காலத்தில், ஒரு கால்நடையிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்கலாம்.
செயல் முறைகளும், வரவு, செலவுக் கணக்கிடுதலும் எளிதாக அமையும். செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் மாடுகளின் கருப்பையிலுள்ள குறைகளைக் கண்டுபிடிக்க முடியும். ஊனமுற்ற காளைகளின் விந்துவையும் கருத்தரிப்புக்குப் பயன்படுத்த முடியும்.
செயற்கை முறைக் கருவூட்டலின் தீமைகள்
- எல்லாக் காளைகளின் விந்தும் உறை விந்துத் தயாரிப்புக்குத் தகுதி வாய்ந்ததாக இருப்பதில்லை.
- இம்முறையை முதலில் செயல்படுத்தும் போது சற்றுக் கூடுதலாகச் செலவாகும்.
- ஒரு காளையின் விந்தை ஆயிரக்கணக்கான பசுக்களுக்குப் பயன்படுத்துவதால், காளை, உயர் குணாதிசயங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், அந்தக் காளை தரம் குன்றியதாக இருந்தால், ஆயிரக்கணக்கான பசுக்கள் பாதிக்கப்படும்.
- நன்கு பயிற்சிப் பெற்றவர்களால் மட்டுமே உறை விந்தைப் பாதுகாக்கவும், செயற்கை முறைக் கருவூட்டலைச் செய்யவும் முடியும்.

மரு.ரா.ஸ்ரீரஞ்சனி, மரு.ம.செல்வராஜூ, மரு.ச.ஜெயச்சந்திரன், மரு.ம.பழனிசாமி, மரு.ம.கண்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



