செய்தி வெளியான இதழ் அக்டோபர் 2025
நம் நாட்டு வேளாண் பெருமக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேளாண் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைச் செல்வங்கள். இத்தகைய கால்நடைகள் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. நோய்களைத் தொடர்ச்சியாக ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பவை ஒட்டுண்ணிகள். உணவு மற்றும் தங்குமிடமாக, ஆடு, மாடு மற்றும் கோழிகளைச் சார்ந்து வாழும் உயிரினங்களே ஒட்டுண்ணிகள். இவற்றை, அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என, இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
அக ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் காணப்படும். உதாரணமாக, தட்டைப் புழுக்கள், நாடாப் புழுக்கள், உருளைப் புழுக்கள், ஓரணு ஒட்டுண்ணிகள் ஆகும். தங்களின் உணவு மற்றும் வசிப்பிடமாக, கால்நடைகளைச் சார்ந்திருக்கும் பூச்சிகள், ஈக்கள், தெள்ளுப் பூச்சிகள், பேன்கள், உண்ணிகள், கொசுக்கள் மற்றும் சொறி உண்ணிகள் புற ஒட்டுண்ணிகள் ஆகும்.
உண்ணிகள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவும் நோய்களால், கால்நடைகளின் நலமும் உற்பத்தித் திறனும் குறைகின்றன. இந்தியாவில் மட்டும் 120-க்கும் மேற்பட்ட உண்ணி வகைகள் உள்ளன. கொசுக்களுக்கு அடுத்தபடியாக உண்ணிகள் தான் நோய்த்தொற்றுக் கிருமிகள் பரவக் காரணமாக இருக்கின்றன.
புற ஒட்டுண்ணிகளால் வரும் நோய்கள்
பூச்சி, உண்ணி மற்றும் சிற்றுண்ணிகள், பைலோரியாசிசைப் பரப்பும். ட்ரிப்பனோ சோமியாசியை, குதிரை ஈக்கள் பரப்பும். நீலநாக்கு நோயைக் கொசுக்கள் பரப்பும். தைலேரியாசிஸ், பெபீசியாசிஸ் போன்ற நோய்களை உண்ணிகள் பரப்பும்.
புற ஒட்டுண்ணிகளால் ஏற்படும் பொருளாதார இழப்புகள்
புற ஒட்டுண்ணிகளால் கறவை மாடுகளில் பால் குறைவு, ஆடுகளில் இறைச்சி உற்பத்திக் குறைவு, உண்ணிக் காய்ச்சல், கலப்பினக் கறவை மாடுகளில் இறப்பு, சோகை, வளர்ச்சிக்குறை போன்றவை ஏற்பட்டு, பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். கால்நடைகளை உண்ணிகள் தாக்குவதால் தோலின் தரம் பாதிக்கப்படும்.
உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்
தற்போது, தகுந்த பண்ணை மேலாண்மை, கைகளால் அகற்றுதல், வேதிப் பொருள்கள் பயன்பாடு, மேய்ச்சல் மேலாண்மை, தடுப்பூசிகள் ஆகியவற்றின் மூலம், உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளன.
வேதி மருந்துகளுக்கு மாற்றாக, தேசியப் புத்தாக்க நிறுவனத்தின் தொழில் நுட்பமான வேப்பிலை மற்றும் நொச்சியிலைக் கலவைச்சாறு, கால்நடைகளில் உள்ள உண்ணிகளைக் கட்டுப்படுத்தும்.
வேப்பிலை, நொச்சியிலைச் சாறு தயாரிப்பு முறை
- ஒரு பாத்திரத்தில் 4 லிட்டர் நீரை எடுத்து, அதில் 2.5 கிலோ வேப்பிலைகளை இட்டு, நன்றாகக் கொதிக்கும் வரை வேக வைக்க வேண்டும்.
- இன்னொரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் நீரை எடுத்து, அதில் ஒரு கிலோ நொச்சி இலைகளை இட்டு, நன்றாகக் கொதிக்கும் வரை வேக வைக்க வேண்டும்.
- இந்த இரண்டு கலவைகளையும் அடுப்பிலிருந்து இறக்கி, 12 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
- பிறகு, இரண்டு கலவைகளையும் வடிகட்டி, தனித்தனிக் குடுவைகளில் சேமித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் வரை, கால்நடைகளைத் தாக்கும் உண்ணிகளை அழிக்கப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
- மாடுகளின் மேல் பயன்படுத்த, 300 மி.லி. வேப்பஞ்சாறு, 100 மி.லி. நொச்சிச் சாற்றை எடுத்து, 3.6 லிட்டர் நீரில் கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையைக் காடாத் துணி அல்லது தெளிப்புக் கருவி மூலம் மாடுகளில் காலை, மாலையில் தெளிக்கலாம்.
- இப்படி இரண்டு நாட்கள் தெளிக்க வேண்டும். அப்படியும் உண்ணிகள் சாகாமல் இருந்தால் மூன்றாம் நாளும் தெளிக்க வேண்டும்.
- மாட்டின் மடி, முன்னங்கால் ஆகிய இடங்களில் உண்ணிகள் அதிகமாக இருக்கும்.
- உண்ணிகள் உள்ள மாடு, உண்ணிகள் இல்லாத மாடு என்று பார்க்காமல் கொட்டிலில் உள்ள எல்லா மாடுகளுக்கும் தெளிக்க வேண்டும்.
- மேலும், மாட்டுக் கொட்டில் மற்றும் கட்டுத்தறியின் மற்ற பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.

மரு.ரா.ஸ்ரீரஞ்சனி, மரு.ம.செல்வராஜு, மரு.ச.ஜெயச்சந்திரன், மரு.க.ரமேஷ், மரு.ம.பெரியண்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



