இந்தியாவின் முன்னணி விவசாய மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. மேலும், முக்கிய விவசாயப் பயிர்களில் உணவு உற்பத்தியைப் பெருக்கிக் காட்டி, மத்திய அரசிடமிருந்து கிருஷி கர்மன் விருதை, ஐந்து முறை பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், பயிர் உற்பத்தி மற்றும் விளைச்சலை மேம்படுத்த, பல்வேறு தொழில் நுட்பங்களை உருவாக்கியுள்ளது. மேலும், ஆராய்ச்சிகள் மூலம், விவசாயிகளின் பரிந்துரைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளைச் சரி செய்து வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் மாறிவரும் பருவச் சூழலால் பயிர் உற்பத்தித் திறனைக் கூட்டுவது என்பது, பெரும் சவாலாகவே உள்ளது. பொதுவாக, ஒரு பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு 17 வகையான சத்துகள் அவசியமாகும். இவற்றில், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் கந்தகம் போன்ற முக்கியச் சத்துகளும், இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின், நிக்கல் போன்ற நுண் சத்துகளும் அடங்கும்.
இந்தச் சத்துகளில் ஒன்று கூடினாலும் சரி அல்லது குறைந்தாலும் சரி, பயிரின் இயல்பான வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்படும். மேலும், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை, அதிக மழைப்பொழிவு போன்ற பல காரணங்களால், விளைச்சல் குறைந்து வருகிறது.
அதே சமயம் குறைவான பயிர் உற்பத்திக்கு, நுண்சத்துக் குறைபாடு மற்றும் அதனுடன் கூடிய பயிர் வினை ஊக்கிகளின் பற்றாக்குறையே முக்கியக் காரணமாகும். இதைச் சரி செய்யும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள, பயிர் வினையியல் துறை, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, த.வே.ப.க. பயிர் பூஸ்டர்களை அறிமுகம் செய்து வெற்றியும் கண்டுள்ளது.
த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள்
பயிர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படும் சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளைக் கொண்டவை த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள். இந்த பூஸ்டர்கள் மிகச் சிறந்த இடுபொருளாக இருப்பதால், அதிகப் பரப்பில் விவசாயிகள் இவற்றைப் பயன்படுத்தி, வருமானத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
பயிர்களின் முக்கிய வளர்ச்சிப் பருவத்தில் இடப்படும் த.வே.ப.க. பயிர் பூஸ்டர்கள், தாவரத் திசுக்களில், சத்துகளின் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் அளவை நிலை நிறுத்தி, பயிர் உற்பத்தித் திறனைக் கூட்டுவதில், குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றன. மேலும், சத்துக்குறை, ஹார்மோன் குறை மற்றும் வினையியல் சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதுடன், குறிப்பிட்ட பருவத்தில் பயிர்களுக்கு வேண்டிய சத்துகளின் தேவையையும் சரி செய்கின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பயிர் வினையியல் துறை, தென்னை, பயறு வகைகள், நிலக்கடலை, பருத்தி, ஆமணக்கு, மக்காச்சோளம், கரும்பு ஆகிய பயிர்களுக்கான பூஸ்டர்களைத் தயாரிக்கிறது. மேலும், இந்த பூஸ்டர்கள் அனைத்தையும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், முனைப்பான மூலதனத் திட்டம் மூலம், விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறது.
பல்வேறு பயிர்களுக்கான பூஸ்டர்களை, தமிழ்நாடு விவசாயிகள் நேரடியாகவும், தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் பல்வேறு திட்டங்கள் மூலமும் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தெலுங்கானா விவசாயிகளுக்கும், இந்த பூஸ்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த பூஸ்டர்கள் மூலம், 20 சதம் வரை மகசூல் கூடுவதால், உழவர் பெருமக்கள், இவற்றைச் சரியான அளவில், சரியான பருவத்தில் பயன்படுத்தி, அதிக மகசூலைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
த.வே.ப.க. தென்னை டானிக்
தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும் என்பது பழமொழி. தென்னையின் அனைத்துப் பாகங்களும் பயன்படுவதால், உலகில் பயிரிடப்படும் பனை வகைகளுள் மிக பயனுள்ள மரம் தென்னை மரம் என்று, இந்தத் தொழில் நுட்பத்தை முதலில் அறிமுகம் செய்தனர். தொலைவிலுள்ள விவசாயிகள் மற்றும் அதிகப் பரப்பில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி, இந்த அடர் திரவம் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் அடர் திரவத்தில் நான்கு லிட்டர் நீரைச் சேர்த்து ஐந்து லிட்டராக மாற்றி, 200 மி.லி. வீதம் 25 நெகிழிப் பைகளில் ஊற்றி 25 மரங்களுக்கு வேர் மூலம் செலுத்தலாம். இப்படி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். இதனால், தென்னையில் பச்சையம் அதிகரித்து ஒளிச்சேர்க்கைத் திறன் கூடும்.
மேலும், பாளைகளின் எண்ணிக்கை அதிகரித்து, குரும்பைகள் கொட்டுதல் குறைந்து, காய்கள் பெரிதாகி, பருப்பின் எடை கூடும். இதன் மூலம், 20 சதவீதம் வரை மகசூல் கூடும். பூச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் கூடும்.
தென்னை டானிக் மூலம் கிடைத்த இந்த வெற்றிக்குப் பிறகு, பயறுவகைப் பயிர்கள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம், கரும்பு ஆகிய பயிர்களுக்கான பூஸ்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. ஒரு ஏக்கருக்குத் தேவையான பூஸ்டரை, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் சேர்த்து இலைகளில் தெளித்தால், பயிரின் வறட்சியைத் தாங்கும் திறனும், 15-20 சதவீதம் வரை மகசூலும் கூடும்.
பயறு ஒண்டர்
பயறு வகைகள், புரதங்கள் நிறைந்தவை. மேலும், இந்திய ஏழை மக்களின் முக்கியப் புரத ஆதாரமாக விளங்குபவை. இவை, தானியப் பயிர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள முக்கியப் பயிர்களாகும். பயறுவகைப் பயிர்களில் சில வினையியல் காரணங்களால், பூக்கள் மற்றும் காய்கள் அதிகமாக உதிர்வதால், மகசூல் குறைந்து காணப்படும்.
அதே நேரம் வறட்சி, அதிக வெப்பநிலை, சத்துக்குறை போன்ற, சாதகமற்ற சூழல்கள் ஏற்பட்டால், விளைச்சல் மேலும் குறைந்து அதிக மகசூல் இழப்பு ஏற்படும். இந்தக் குறைகளைக் களைந்து அதிக மகசூலைப் பெற, பயறுவகைப் பயிர்களில், த.வே.ப.க. பயறு ஒண்டர் என்னும் பூஸ்டரை, ஏக்கருக்கு 2 கிலோ வீதம் எடுத்து, இலைகளில் தெளிக்க வேண்டும். இதன் மூலம், பூக்கள் உதிர்வதைக் கட்டுப்படுத்தி, மகசூலை 10-20 சதம் வரை கூட்ட முடியும்.
நிலக்கடலை ரிச்
நிலக்கடலை, தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராகும். நிலக்கடலையின் பூ மற்றும் காய்ப்புப் பருவம், வறட்சி மற்றும் கடும் வெப்ப நிலையில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, நிலக்கடலையில் பூவைத் தக்க வைத்தல், நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனைக் கூட்ட, விதைத்த 35-ஆம் நாள், அதாவது, 50 சதவீதம் பூக்கும் போதும், 45-ஆம் நாள், அதாவது, காய்கள் காய்க்கும் போதும், ஏக்கருக்குத் தலா 2 கிலோ வீதம் எடுத்து இலைகளில் தெளித்தால், பூக்கும் திறன் கூடும். பொக்குக்கடலைகள் உருவாதல் குறையும். இதனால், 20 சதம் வரை மகசூல் கூடும்.
பருத்தி பிளஸ்
தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் நார்ப்பயிர்களில் பருத்தி முதன்மையானது. இதன், சாகுபடிக் காலம் 180 நாட்கள். இது, மானாவாரிப் பயிராக இருப்பது, ஒழுங்கற்ற மழைப்பொழிவு, சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறை போன்றவற்றால், மொட்டுகள், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்தல் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, பருத்தி சாகுபடியில் அதிக மகசூலைப் பெற்றிட, த.வே.ப.க. பருத்தி பிளஸ் என்னும் பூஸ்டரை, செடிகள் பூக்கும் போது ஏக்கருக்கு 2.5 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் சேர்த்துத் தெளிக்க வேண்டும். இதைப்போல, காய்கள் காய்க்கும் போதும் தெளிக்க வேண்டும். இதன் மூலம், பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்தல் குறைந்து, காய்கள் முழுமையாக வெடித்து, சீராக அறுவடைக்கு வரும். இதனால், 15 சதம் வரை மகசூல் கூடும்.
மக்காச்சோள மேக்சிம்
தமிழகத்தில் மக்காச்சோளம் பெரும்பாலும் மானாவாரிப் பயிராக இடப்படுகிறது. இப்பயிர், மண்ணில் உள்ள அனைத்துச் சத்துகளையும் உறிஞ்சுவதால், மண்வளம் குறைந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். அதே சமயம், வறட்சி, அதிக வெப்பநிலை, சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் பற்றாக்குறையால், மணிப்பிடிப்புத் திறன் குறைந்து, மகசூல் இழப்பு ஏற்படும்.
இச்சூழலைக் கருத்தில் கொண்டு, குறைந்த செலவில் அதிக விளைச்சலைப் பெற்றிட, த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம் என்னும் பூஸ்டரை, ஆண் மஞ்சரி தோன்றும் போது ஏக்கருக்கு 3 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். இதைப்போல மணிகள் பிடிக்கும் போதும் இலைகளில் தெளிக்க வேண்டும். இதனால், மக்காச்சோளத்தில் மணிப்பிடிப்புத் திறன் அதிகரித்து, 20 சதவீதம் வரை மகசூல் கூடும்.
கரும்பு பூஸ்டர்
கரும்பு, தேசியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் வேளாண் தொழில் துறைப் பயிராகும். நீண்டகாலப் பயிரான கரும்பு, தன் வளர்ச்சிக் காலத்தில் அதிகளவு சத்துகளை மண்ணில் இருந்து எடுத்துக் கொள்ளும். மேலும், வறட்சி, களர் மற்றும் உவர் நில சாகுபடி, பயிர்ச் சுழற்சி செய்யாமை போன்றவற்றால், மண்வளம் குன்றி, உற்பத்தித் திறன் குறைந்து விடும்.
எனவே, கரும்பு சாகுபடியில் சரியான மண் மற்றும் உர நிர்வாகத்தைப் பின்பற்ற வேண்டும். மேலும், த.வே.ப.க. கரும்பு பூஸ்டரை, ஏக்கருக்கு 1, 1.5, 2 கிலோ வீதம் எடுத்து, கரும்பை நட்ட 45, 60 மற்றும் 75 நாட்களில் தெளிக்க வேண்டும். இதனால், கரும்பில் இடைக்கணுக்களின் நீளம் கூடுவதால், கரும்பின் வளர்ச்சி, எடை மற்றும் சர்க்கரை அளவும் கூடும். இதன் மூலம், கரும்பு சாகுபடியில் அதிக இலாபத்தைப் பெற முடியும்.
நெல் ப்ளூம்
த.வே.ப.க. நெல் ப்ளூம் என்பது, சம்பா பருவ நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் கலந்த பூஸ்டர் ஆகும். இதை, ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் தேவையான அளவில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். மேலும், மணிகள் பிடிக்கும் போதும் இதேயளவில் எடுத்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இதனால், நெற்பயிரில் ஏற்படும் மலட்டுத் தன்மை குறைந்து, 15 சதம் வரை மகசூல் கூடும்.
நெல் ரீப்
த.வே.ப.க. நெல் ரீப், நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் கலந்த பூஸ்டர் ஆகும். இது, நெற்பயிரில் ஏற்படும் மலட்டுத் தன்மையைக் குறைத்து, மணிப்பிடிப்புத் திறனைக் கூட்டும். வறட்சி மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கும் திறனை அதிகரிக்கும். இதனால், விளைச்சல் 15 சதம் வரை கூடும்.
இதை, பயிரின் பீட்டைப் பருவத்தில், ஏக்கருக்கு 3 கிலோ வீதம் எடுத்து, 200 லிட்டர் நீரில் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். முதல் தெளிப்பு முடிந்து பத்து நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இதேயளவில் எடுத்துத் தெளிக்க வேண்டும்.

முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



