செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2025
கன்று வீச்சு நோய், மனிதன் மற்றும் விலங்கினங்களிடம் பரவி வரும் முக்கியமான நோய்களில் ஒன்று. கன்று வீச்சு, கருச்சிதைவு, சினைக்கொடி அழற்சி, நச்சுக்கொடி தங்கி விடுதல், விந்தக மேற்குழல் அழற்சி, விரை வீக்கம் போன்றவை, கன்று வீச்சு நோயினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளாகும். கன்று வீச்சு நோயினால், இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், மிகுந்த பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.
கன்று வீச்சு நோய்க் காரணிகள்
- புருசெல்லா எனப்படும் சிறுவட்ட நீள நுண்ணுயிரி, கன்று வீச்சு நோயின் முக்கியக் காரணியாகும்.
- புருசெல்லா அபார்டஸ், புருசெல்லா மெலிடென்சிஸ், புருசெல்லா சுயிஸ், புருசெல்லா ஓவிஸ் போன்றவை, பல்வேறு விலங்கினங்களைத் தாக்கும்.
- கன்று வீச்சு நோய், வனவிலங்குகளையும் தாக்கும்.
பரவும் விதம்
- கன்று வீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட விலங்கினைக் கையாளுதல்.
- நோய்த் தாக்கிய விலங்கிலிருந்து பெறப்படும் பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருள்களை உண்ணுதல்.
- இறைச்சியை நன்கு வேக வைக்காமல் உண்ணுதல்.
- சிதைவுற்ற கரு மற்றும் கன்று வீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வெளியிடும் திரவங்களைக் கையாள நேரிடுதல்.
- கைகளில் உள்ள சிராய்ப்புகள், புண்கள்.
- இறைச்சிக் கூடங்களில் வேலை செய்வோர், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைகளைப் பேணுவோர், இந்நோயினால் பாதிக்கப்படுவர்.
மூலதனங்கள்
- கன்று வீச்சு நோயினால் தாக்கப்பட்ட விலங்கின் நஞ்சுக்கொடி, சினைக்கரு, யோனிமடத் திரவங்கள் ஆகியவற்றில் அதிகளவில் நோய்க்கான புருசெல்லா நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.
- கன்று வீச்சு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் கன்று வீச்சுக்குப் பிறகும் அறிகுறியற்ற நோய்த்தாங்கிகளாக இருந்து, நீண்டகால நோய்க்கடத்திகளாகச் செயல்பட்டு அவற்றின் பால் மற்றும் கருப்பை வழியே வெளியேற்றிக் கொண்டிருக்கும்.
அறிகுறிகள்
- சினையுற்ற கால்நடைகள், கன்று வீச்சு நோயினால் தாக்கப்பட்டால், அவற்றில் கருக்கலைப்பு ஏற்படும்.
- கன்று இறந்து பிறத்தல் அல்லது மெலிந்த வலுவற்ற குட்டிகள் பிறக்கும். சிலவற்றில் கருச்சிதைந்து நஞ்சுக்கொடி தங்கி விடும்.
- வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டில் ஒருமுறை மட்டும் இந்நோயினால் கருச்சிதைவு ஏற்படும். ஆனால், மீண்டும் கருப்பைக்குள் புருசெல்லா சென்று அனைத்துக் கர்ப்பக் காலத்திலும் வெளிப்படும்.
- பால் உற்பத்திக் குறையும்.
- இந்நோயினால் காளை மற்றும் கிடாக்களில் விரை வீக்கம் விந்தக மேற்குழல் அழற்சி ஏற்படுவதால், மலட்டுத் தன்மை ஏற்படும்.
- மூட்டு அழற்சி, மூட்டு வீக்கம் காணப்படும்.
கன்று வீச்சு நோய்த்தடுப்பு முறைகள்
- பாதிக்கப்பட்ட விலங்குகளைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.
- கன்று ஈனும் பருவத்தில் உள்ள கால்நடைகளைத் தனிக் கொட்டகையில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
- கன்று ஈன்ற பின்பும் அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட பின்பும், கொட்டகையை நன்கு சுத்தப்படுத்தி, கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- கன்று பிறந்த 4-8 மாதங்களில் தடுப்பூசியைப் போட வேண்டும்.
- கால்நடை மருத்துவர் மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
மரு.ரா.ஸ்ரீரஞ்சனி, மரு.ம.செல்வராஜு, மரு.ர.ருத்ரகுமார், மரு.ம.பழனிசாமி, மரு.ம.கண்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.
விளம்பரம்:
பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145


