செய்தி வெளியான இதழ்: நவம்பர் 2025
கால்நடைகள் உயிர் வாழ, நீர், மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் ஆகியன அவசியாகும். இவை, கலப்புத் தீவனம், பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனம் மூலம் கால்நடைகளுக்குக் கிடைக்கின்றன.
தாதுப்புக் கட்டி என்பது, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, அயோடின், தாமிரம், மாங்கனீசு, கோபால்ட், துத்தநாகம், கந்தகம், ப்ளூரின், செலினியம் ஆகியவற்றை, தேவையான அளவில் கலந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.
தாதுப்புகள் பற்றாக்குறை மிகவும் சிறியளவில் இருக்கும் போது, கால்நடைகள், குறைபாடு அறிகுறி ஏதுமின்றி நலமாகவே இருக்கும். ஆனாலும், அவற்றின் செயல்கள் மற்றும் உற்பத்தித் திறனில் பாதிப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படும்.
முறையாகத் தயாரிக்கப்படும் கலப்புத் தீவனத்தில், தேவையான தாதுப்புகள் சேர்க்கப்பட்டு இருந்தாலும், இத்தகைய கலப்புத் தீவனத்தைக் கால்நடைகளை வளர்ப்போர் அனைவரும் கால்நடைகளுக்கு அளிப்பார்கள் என்று கூற முடியாது. எனவே, தேவையான தாதுப்புகள் கால்நடைகளுக்குக் கிடைக்கும் நோக்கில், தாதுப்புகள் அடங்கிய கலவை, கட்டிகளாகத் தயாரிப்படுகிறது.
இந்தக் கட்டிகளைக் கட்டுத்தறியில் கட்டித் தொங்க விடும் போது, மாடுகள் நாக்கால் சுவைத்து, அவற்றுக்கான தாதுப்புகள் தேவையைச் சரி செய்து கொள்கின்றன. இந்தக் கட்டிகளைக் கால்நடைகள் அதிகளவில் சுவைத்து விடுமோ, அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படுமோ என்று, கால்நடைகளை வளர்ப்போர் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தாதுப்புகளின் தேவை
கால்நடைகளின் உடலமைப்புக்கும், செல் மற்றும் திசுக்களின் ஒவ்வொரு செயலுக்கும் தாதுப்புகள் அவசியம். இவ்வகையில், தாதுப்புகளின் அளவு முடிவு செய்யப்படுகிறது. தாதுப்புக் கட்டியில் சேர்க்கப்படும் தாதுப்புகளும் அவற்றின் அளவுகளும் குறித்து இப்போது பார்க்கலாம்.
கால்சியம் 23 சதம், பாஸ்பரஸ் 12 சதம், மெக்னீசியம் 6.5 சதம், இரும்பு 0.5 சதம், அயோடின் 0.026 சதம், தாமிரம் 0.077 சதம், மாங்கனீசு 0.12 சதம், கோபால்ட் 0.012 சதம், துத்தநாகம் 0.38 சதம், கந்தகம் 0.5 சதம், ப்ளூரின் 0.07 சதம், செலினியம் 0.3 பி.பி.எம்.
தாதுப்புகளின் பயன்கள்
- சுண்ணாம்புச் சத்து: எலும்பு, பல் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்திக்கு.
- பாஸ்பரஸ்: எலும்பு வளர்ச்சி, செல்களின் எரிசக்தி மற்றும் இனவிருத்தித் திறனுக்கு.
- மெக்னிசியம்: எலும்பு வளர்ச்சி மற்றும் செல்களின் எரிசக்திக்கு.
- மாங்கனீசு: உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு.
- சோடியம்: உடலின் நீர்ச் சமநிலை, தசை மற்றும் நரம்பு மண்டல இயக்கத்துக்கு.
- பொட்டாசியம்: உடலின் நீர்ச் சமநிலை, தசை மற்றும் நரம்பு மண்டல இயக்கம் மற்றும் சவ்வுடு பரவலை நிர்வகிப்பதற்கு.
- குளோரின்: வயிற்றின் அமிலச் சுரப்பு மற்றும் நரம்பு மண்டல இயக்கத்துக்கு.
- கந்தகம்: புரதம், கணநீர் மற்றும் நொதிகளின் செயல்பாட்டுக்கு.
- இரும்பு: இரத்த நிறமியின் மூலப்பொருளாக அமைந்து, ஆக்சிஜனைத் திசுக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு.
- தாமிரம்: நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு.
- கோபால்ட்: இரத்த நிறமியின் மூலப்பொருளாக அமைந்து, ஆக்சிஜனைத் திசுக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு.
- அயோடின்: தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு.
- துத்தநாகம்: நோயெதிர்ப்பு சக்தி, தோல் மற்றும் திசு வளர்ச்சிக்கு.
- செலினியம்: நோயெதிர்ப்பு சக்திக்கு.
- மாலிப்டினம்: வேதி வினைகளின் கிரியா ஊக்கியாகச் செயல்படுவதற்கு.
தாதுப்புகளின் அன்றாடத் தேவை
- + கன்றுக்கு 5 கிராம்,
- + கிடேரிக்கு 15-20 கிராம்,
- + கறவை மாடு, சினை மாடு, காளைக்கு 30-40 கிராம்,
- + பால் வற்றிய பசு, எருதுக்கு 25-30 கிராம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், தாதுப்புக் கட்டிகளைத் தயாரித்து, கால்நடைகளை வளர்ப்போருக்கு வழங்கி வருகிறது. எனவே, பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளுக்குத் தாதுப்புக் கலந்த கலப்புத் தீவனம் அளித்து வந்தாலும், தாதுப்புக் கட்டிகளையும் கொட்டிலில் கட்டி வைத்தால், கால்நடைகளின் உடல் நலத்தையும் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, அதிகமான இலாபத்தைப் பெறலாம்.

மரு.ரா.ஸ்ரீரஞ்சனி, மரு.ம.செல்வராஜு, மரு.ர.ருத்ரகுமார், மரு.ம.பழனிசாமி, மரு.ம.கண்ணன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



