My page - topic 1, topic 2, topic 3

ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

பனிவரகு

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடியில் பெய்ய வேண்டிய மழை, ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப் பயிர் உண்டு. அதற்குப் பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும்.

பனிவரகு, தொன்று தொட்டுப் பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன், கொல்லிமலை ஆகிய மலைப் பகுதிகளில் காலங்காலமாக விளைந்த பயிர் தான் பனிவரகு.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

புதிது புதிதாகச் சில பணப் பயிர்கள் புகுந்து விட்ட காரணத்தால், காணாமல் போனதிந்த கானகப்பயிர். பருவமழை பட்டும் படாமல் பெய்தாலும், போதியும் போதாமல் பெய்தாலும், பனிவரகை விதைக்கலாம். உழுது வைத்த நிலத்தில் வளமில்லை என்றாலும், நம்பிக்கையுடன் பனிவரகை விதைக்கலாம்.

ஏ.டி.எல்.1 பனிவரகின் சிறப்புகள்

மிகக் குறுகிய வயது, அதாவது, 70-75 நாட்கள். சாயாத தன்மை மிக்கது. உயர் விளைச்சலைத் தரக்கூடியது. சத்துகள் நிறைந்தது. முந்திய மற்றும் பிந்திய கால விதைப்புக்கு ஏற்றது. திரட்சியான மஞ்சள் நிறத் தானியம். வறட்சியைத் தாங்கும் தன்மை மிக்கது. பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரும் தன்மையுள்ளது.

நிலம் தயாரித்தல்

இதை, ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்தில் விதைக்கலாம், செம்மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் ஏற்றவை. கோடை மழையைப் பயன்படுத்தி, நிலத்தைச் சட்டிக் கலப்பையால் ஆழமாக உழ வேண்டும். இது, கோடை மழையால் ஏற்படும் மண்ணரிப்பைத் தடுத்து, மழைநீரைச் சேமித்து, கோடை மழையில் முளைக்கும் களைகளையும் கட்டுப்படுத்தும். உழவின் போது நிலத்தின் அடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள், மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால், சாகுபடிக் காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் குறையும்.

விதையளவு

வரிசையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். பொதுவான கை முறையில் விதைக்க, எக்டருக்கு 12 கிலோ விதைகள் தேவைப்படும். வரிசைக்கு வரிசை 22.5 செ.மீ., பயிருக்குப் பயிர் 7 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். கையால் அல்லது விதைப்பான் அல்லது கொர்ரு கருவி மூலம் வரிசையில் விதைக்கலாம். இப்படிச் செய்வதால், மண்ணிலுள்ள ஈரம் காயுமுன் அதிகப் பரப்பளவில் விதைத்து முடிக்கலாம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
நுண்ணுயிர் விதைநேர்த்தி

ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை, மூன்று பொட்டலம் அசோபாசை, ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இந்த அசோபாசை, எக்டருக்கு 10 பொட்டலம் வீதம் எடுத்து, 25 கிலோ மணல் அல்லது 25 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்திலும் தூவலாம்.

உரமிடுதல்

ஒரு எக்டர் நிலத்தில் 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை, கடைசி உழவின் போது அடியுரமாக இட வேண்டும். அடுத்து, 20 கிலோ தழைச்சத்து மற்றும் 20 கிலோ மணிச்சத்தை, விதைப்பின் போது அடியுரமாக இட வேண்டும். மேலும், விதைத்த 20-25 நாட்கள் கழித்து, 20 கிலோ தழைச்சத்தை, மேலுரமாக இட வேண்டும்.

பயிர்களைக் களைதல்

விதைத்த 12-15 நாட்களில், பயிர்களைக் கலைத்தும், அந்தப் பயிர்களையே தேவைப்படும் இடங்களில் நட்டும், சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
களை நிர்வாகம்

விதைத்த 18-20 நாட்களில் ஒருமுறை கைக்களை எடுத்தல் அவசியம். பிறகு, தேவைப்பட்டால் 40 நாளில் இன்னொரு முறையும் களை எடுக்கலாம்.

நீர் நிர்வாகம்

பனிவரகுப் பயிர்கள் நன்கு வளர்வதற்கு 300 முதல் 350 மி.மீ. மழை தேவைப்படும். ஆனால், தேவையான ஈரப்பதம் நிலத்தில் இல்லை என்றாலோ அல்லது தேவையான மழை பெய்யவில்லை என்றாலோ, பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்பட்ட மழைநீரைப் பயன்படுத்த வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

பொதுவாக, இந்த இரகத்தைப் பூச்சிகளோ நோய்களோ தாக்குவதில்லை. ஆதலால், பயிர்ப் பாதுகாப்புச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அறுவடை

நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காய வைத்து அடித்து, தானியங்களைப் பிரித்துச் சுத்தம் செய்ய வேண்டும்.

மகசூல்

மானாவாரியில் எக்டருக்கு 2,000 முதல் 2,100 கிலோ தானியம் கிடைக்கும். 5,000 முதல் 5,900 கிலோ தட்டை கிடைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
உணவுப் பொருள்கள்

பனிவரகிலிருந்து அவல், உப்புமா, சப்பாத்தி, ரொட்டி, தோசை, கூழ், புட்டு, முறுக்கு, பக்கோடா, சேலட் போன்ற, சுவையான உணவுப் பொருள்களைத் தயாரிக்கலாம்.

சந்தை நிலவரம்

ஒரு கிலோ பனிவரகு 40-45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, குறுந் தானியங்களில் உள்ள சத்துப் பொருள்களைப் பற்றியும், அவற்றின் நன்மை பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், எதிர்காலத்தில் இவற்றின் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே, இவற்றின் விலையும் உயரக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்துப் பயிர் செய்து ஒருங்கிணைந்து செயல்பட்டால், பனிவரகைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என்பதுடன், நிறைவான வருவாயும் கிடைக்கும். மாற்றி யோசித்தால் மாற்றுப் பயிருண்டு, ஒற்றுமையாய்ப் பாடுபட்டால் ஓராயிரம் பயனுண்டு.


ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

முனைவர் ஆ.தங்க ஹேமாவதி,  பயறுவகைத் துறை, பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை. முனைவர் அ.நிர்மலகுமாரி, சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!