My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

கரிசலாங்கண்ணி சாகுபடி!

காயகற்ப மூலிகை என்று சொல்லப்படும் கரிசலாங்கண்ணிக் கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து ஆகியன அதிகளவில் உள்ளன. அதனால் தான், இந்தக் கீரையைத் தங்க மூலிகை என்று அழைக்கிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, ஓராண்டுத் தாவரமாகும். தலைமுடி முதல் உள்ளுறுப்புகள் வரை காக்கக்கூடிய கீரை என்றால், அது, கரிசலாங்கண்ணி என்று சொல்லப்படும், இந்தக் கரிசாலைக் கீரை தான்.

கரிசலாங்கண்ணி, வெண்கரிசாலை அல்லது கையாந்தகரை என்னும் பெயர்களைக் கொண்ட கரிசலாங்கண்ணி, மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அறியலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளை நிறப் பூக்களை வைத்து அறியலாம்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

வெள்ளை, மஞ்சள் ஆகிய இரண்டு வகைகளிலும் மருத்துவக் குணங்கள் இருந்தாலும், மஞ்சள் கரிசலாங்கண்ணி தான் முதலிடம் பெறுகிறது. இதற்கு, பொற்றலைக் கரிசாலை என்னும் பெயரும் உண்டு.

வெள்ளைக் கரிசலாங்கண்ணி: இதைக் கரிசாலை, கையன்னாதி, கைத்தோணி என்றும் அழைப்பர். கசப்புச் சுவையை உடையது. அதனால், வழக்கமான உணவைப் போல், சமைத்துச் சாப்பிட யாரும் விரும்புவதில்லை. இதன் இலையை நசுக்கித் தேய்த்தால், அந்த இடம் கறுப்பாக மாறி விடும். இந்தக் கீரையில், தைலம் தயாரித்து, தலையில் தேய்த்துக் குளித்தால், கண்பார்வை தெளிவு பெறும். தலைமுடி கருகருவென பளபளப்பாக வளரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி: இதைச் சமைத்துச் சாப்பிடலாம். இது, மஞ்சள் காமாலை நோயிலிருந்து நம்மைக் காக்கும்.

+ உடல் கிறுகிறுப்பு, கண்கள் இருண்டு போதல் போன்ற பாதிப்புகளையும் போக்கும். தெளிவான சிந்தனையைத் தரும்.

+ உடலிலுள்ள நோய்க்கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் இதற்கு உண்டு. பித்த நோய்களுக்குக் கைகண்ட மருந்து. உடலில் பெருகும் பித்தநீரை வெளியேற்ற உதவும்.

+ குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோயைக் குணமாக்கும். இதன் சாற்றைக் கொடுத்தால், சளியால் ஏற்படும் மூக்கடைப்பு நீங்கும். இதன் சாறுடன், தேன் கலந்து அடிக்கடி கொடுத்தால், சளித்தொல்லை நீங்கும்.

+ பற்களுக்கு வலுவையும், பளபளப்பையும் தரும். வழுக்கை மற்றும் நரையைப் போக்கும்.

மாடித்தோட்டத்தில் கரிசலாங்கண்ணி வளர்ப்பு

கரிசலாங்கண்ணிக் கீரையைப் பயிரிடுவதற்கு, விதை, உரம் என்று எதுவும் வாங்க வேண்டியது இல்லை. ஒரு கட்டுக் கரிசலாங்கண்ணிக் கீரை மட்டும் போதும். இதிலுள்ள இலைகளை அகற்றி விட்டுத் தண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, பொலபொலப்பாக மண் நிரப்பப்பட்ட பெரிய தொட்டியில், இந்தத் தண்டுகளை இடைவெளி விட்டு நட்டு, நீரை ஊற்ற வேண்டும்.

பராமரிப்பு: இதற்கென உரம் எதுவும் தேவையில்லை. வீட்டில் சேரும் பழக்கழிவு, காய்கறிக்கழிவு போன்றவற்றை மட்டும் இட்டால் போதும். அதைப் போல, சமையலின் போது கீழே ஊற்றும், அரிசி மற்றும் பருப்புக் கழுவிய நீரை ஊற்றினால் போதும்.

அதிக வெய்யில் இருக்க வேண்டும் என்னும் அவசியமும் கரிசலாங்கண்ணிக் கீரைச் செடிக்குக் கிடையாது. நிழலில்கூட இந்தச் செடி வளரும். பயிரிட்டு மூன்று வாரங்களில் கீரை வளர்ந்து விடும்.

ஒருமுறை பயிரிடும் கரிசலாங்கண்ணிச் செடியில் இருந்து, 4-5 முறை கீரையைப் பறிக்கலாம். அதற்குப் பிறகு மீண்டும் மண்ணைக் கிளறி விட்டு மீண்டும் நட்டு வளர்க்கலாம். மழைக் காலத்திலும் நன்றாக வளரும்.


முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!