My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!

மிழ்நாட்டில் சுமார் 38 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதை நெல் உற்பத்தியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மைத்துறை மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமான விதை என்பது, அதிக முளைப்புத் திறன், புறத்தூய்மை, இனத்தூய்மை மற்றும் பூச்சி பூசணத் தாக்குதல் இல்லாத விதைகளை உள்ளடக்கியது.

இதில், ஒரு இரகத்தின் குணாதிசியம் மற்றும் அதன் முழு உற்பத்தித் திறனைக் கொண்டு சேர்ப்பதில் இனத்தூய்மையின் பங்கு முக்கியமானது. விதை உற்பத்தியில் இனக்கலப்பு இயந்திரக் கலப்பு ஆகிய இரண்டு காரணிகளால் இனத்தூய்மை பாதிக்கப்படுகிறது. இனக்கலப்பு என்பது, ஒரு பயிரின் வேறு இரகங்கள், விதை உற்பத்தி வயலில் கலப்பதாலும் வேறு இரகப் பயிர்களின் மகரந்தச் சேர்க்கையாலும் (அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர்கள்) ஏற்படுவதாகும்.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இவற்றைப் பயிர் விலகு தூரம் மற்றும் கலவன் அகற்றுதல் மூலம் பராமரிக்க இயலும். இயந்திரக் கலப்பு என்பது, விதை உற்பத்தியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாம் விதை மற்றும் விதைப்பயிரைக் கையாளும் முறைகளால் ஏற்படும் பாதிப்பாகும். எனவே, விதை உற்பத்தியின் ஒவ்வொரு தொழில் நுட்பத்திலும் சில எளிய முறைகளைக் கையாள்வதன் மூலம், நல்ல, தரமான விதைகளை உற்பத்தி செய்து விவசாயப் பெருமக்களுக்கு வழங்க முடியும்.

இன்றைய சூழலில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக வேளாண்மையில் இயந்திரங்களின் பங்கு அவசியமாகி விட்டது. குறிப்பாக, நெல் உற்பத்தியில் விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரங்களின் பயன்பாடு மிகுந்துள்ளது. நெல் உற்பத்தியில் உழவு இயந்திரங்கள் போக அறுவடைக்கு மட்டுமே இயந்திரங்கள் பயன்பட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம், ட்ரோன்கள் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரங்களின் பயன்பாடும் கூடியுள்ளது. இவற்றில் நடவு இயந்திரத்தின் பயன்பாடு மிகவும் கூடியுள்ளது.

இந்த இயந்திரத்தின் மூலம், 1-2 மணி நேரத்தில் வயலின் தன்மைக்கேற்ப ஒரு ஏக்கரில் நடவு செய்ய முடியும். நடவு வயலில் தேவையான பயிர் எண்ணிக்கை மற்றும் இனத்தூய்மையைப் பாதுகாக்க, இயந்திர நடவுக்கான நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு மிகவும் முக்கியமானது.

இயந்திர நடவுக்கான நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு

பராம்பரிய நெல் உற்பத்தி நாற்றங்காலைப் போல இல்லாமல், இயந்திர நடவுக்கான நாற்றங்கால் தனிப்பட்ட முறையில் தயார் செய்யப்பட வேண்டும். இதற்கு, தட்டு நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் வயலில் இயந்திர நடவு செய்ய, 30×60 செ.மீ. அளவுள்ள 40 விதைத் தட்டுகள் தேவைப்படும். ஒரு தட்டுக்கு 250 கிராம் விதை வீதம், மொத்தம் 10 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதைப்புக்குத் தேவையான மண்ணை, அந்த இரகம் பயிரிடப்படும் விதை வயலிலிருந்து எடுத்து, கல், பிற பயிர் விதைகள், களை விதைகள் மற்றும் முந்தைய பயிரின் விதைகள் இல்லாதவாறு நன்கு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சலித்தெடுப்பதன் மூலம், விதைப் பயிரின் இனத்தூய்மை காக்கப்படும். பிறகு, அம்மண்ணைச் சேறு போலக் கலக்கி, தட்டுகளில் நிரப்ப வேண்டும். அதன்பின், ஒரு தட்டுக்கு 5 கிராம் வீதம், பொடி செய்த டி.ஏ.பி. உரத்தைப் பரவலாகத் தூவிவிட வேண்டும். பிறகு, இந்தத் தட்டுகளில் விதைகளை விதைக்க வேண்டும்.

விதைப்புக்கு முன், ஒரு கிலோ விதைக்கு 25 மி.லி. வீதம், விதை அமிர்தம் என்னும் விதை நேர்த்தி திரவம் மூலம் விதைகளை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால், நல்ல, வாளிப்பான நாற்றுகளைப் பெற முடியும். விதை நேர்த்தி செய்த விதைகளை 15 நிமிடம் நிழலில் உலர்த்திய பின்னர், ஒரு தட்டுக்கு 250 கிராம் வீதம், விதைகளைச் சீராகப் பரப்ப வேண்டும்.

விதைகளைச் சீராகப் பரப்பாமல் இடைவெளி இருப்பின், இயந்திர நடவின் போது நடவு வயலில் இடைவெளி ஏற்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைய நேரும். விதைத்த பிறகு விதைகளை, மண்புழு உரம் கொண்டு நன்கு மூட வேண்டும். இப்படி விதை பரப்பப்பட்ட தட்டுகளை விதை உற்பத்தி வயலில் சிறிய மேட்டுப் பாத்தியில் வைத்து, 15 நாட்கள் பராமரிக்க வேண்டும்.

இந்தத் தட்டுகளுக்கு முதல் 5 நாட்கள் பூவாளி மூலம் தினமும் நீர் ஊற்ற வேண்டும். நீர்த் தெளிப்பின் போது விதைகள் சிதறாமல் இருக்க, விதைகளை வைக்கோலால் மூடும் பழக்கம் உள்ளது. ஆனால், விதை உற்பத்தி நாற்றங்காலை வைக்கோலால் மூடும் போது, வைக்கோலில் வேறு இரக நெல் விதைகள் இருந்தால், அவற்றால் விதை வயலில் இனக்கலப்பு ஏற்படும். எனவே, இதில் நாம் அதிகக் கவனமுடன் செயல்பட வேண்டும்.

வைக்கோலுக்கு மாற்றாக, பிற புல் வகைகள் அல்லது தென்னங் கீற்றுகளைப் பயன்படுத்தலாம். ஐந்து நாட்கள் கழித்து, தென்னங்கீற்றை நீக்கி, நாற்றங்கால் மேட்டுப்பாத்தியைச் சுற்றியுள்ள வாய்க்காலில் 2-3 செ.மீ. அளவு நீரை நிறுத்தி, நாற்றங்காலைப் பராமரிக்க வேண்டும். விதைத்து ஒரு வாரம் கழித்து, நாற்றங்காலுக்கு ஒரு சத டி.ஏ.பி. கரைசலைத் தெளிக்க வேண்டும்.

இதன் மூலம் நாற்றுகளின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். மேலும், நாற்றங்காலைச் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து காக்க, 10-12 நாட்களில், தையாமீதாக்சம் 25 சதம் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 0.5 கிராம் வீதம் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பிறகு, 15-20 நாட்களுக்குள் நடவு இயந்திரம் மூலம் நடவு செய்ய வேண்டும். நாற்றின் வயது 20 நாட்களுக்கு மேல் கூடினால் அவற்றின் வேர்கள் நன்கு வளர்ந்து ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொள்ளும். இதனால், நடவின் போது, நடவு இயந்திரத்தில் உள்ள ஊசியால் நாற்றுகளை எளிதாகப் பிரிக்க இயலாமல் போகும். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நாற்றுகள் குத்தாக நடவு செய்யப்படும். அல்லது நடவு வயலில் இடைவெளி ஏற்பட்டு, பயிர் எண்ணிக்கை குறையும்.

மேலும், நடவு இயந்திரத்தின் திறன் குறைந்து ஒரு ஏக்கர் நடவு செய்யும் நேரமும் அதிகரிக்கக் கூடும். எனவே, மேற்கூறிய தொழில் நுட்பங்களை முறையாகக் கையாண்டு, இயந்திர நடவுக்கு ஏற்ற நாற்றுகளை இனத் தூய்மையுடன் உற்பத்தி செய்தால், நெல் விதை உற்பத்தியில் அதிக இலாபம் பெறலாம்.


இரா.விக்னேஸ்வரி, கு.மலர்க்கொடி, ந.சக்திவேல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!