விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக, கடந்த இருபது ஆண்டுகளில் நம் நாட்டின் உணவு உற்பத்தி வெகுவாகக் கூடியுள்ளது. இருப்பினும், பெருகி வரும் மக்கட் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தியை அடைய, நாம் மேலும் சீரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அதிக உற்பத்தியை அடைந்திட, இரண்டு வழிகள் உண்டு. (1) தற்போது சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில் வேளாண்மைத் தொழில் நுட்பங்கள் மூலம் உற்பத்தியை அதிகரித்தல். (2) தற்போது தரிசாக உள்ள நிலங்களை, புதிய சாகுபடி நுணுக்கங்களைக் கடைப்பிடித்து, பயிர் விளைச்சலுக்கு ஏற்றதாக மாற்றுதல்.
இரண்டாவது அணுகுமுறைபடி செயல்பட முனைந்தால், நம் நாட்டில் தற்போது சாகுபடி செய்யாமல் தரிசாகக் கிடக்கும் சுமார் 70 இலட்சம் எக்டர் களர் உவர் நிலங்களைச் சீர்திருத்தலாம். இவ்வளவு நிலப்பரப்பைச் சீர்திருத்தி, சாகுபடிக்குக் கொண்டு வருவதன் மூலம், கூடுதலாகச் சுமார் 350 இலட்சம் டன் உணவை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 3 இலட்சம் எக்டர் பரப்பு, களர் உவர் நிலங்களாக உள்ளன. இவற்றில் 2 இலட்சம் எக்டர் பரப்பு, களர் நிலமாகவும், ஒரு இலட்சம் எக்டர் பரப்பு, உவர் நிலமாகவும் உள்ளன. பெருவாரியாக இந்தக் களர் உவர் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல் தரிசாகப் போடப்பட்டுள்ளன.
நமது மாநிலத்தில் எல்லா மாவட்டங்களிலும் களர் உவர் நிலங்கள் உள்ளன. செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் உவர் நிலம் அதிகப் பரப்பிலும், செங்கல்பட்டு, வட ஆற்காடு, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் களர் நிலம் அதிகப் பரப்பிலும் உள்ளன.
இந்த நிலங்களிலிருந்து, தீங்கு விளைவிக்கும் உப்புகளைத் தகுந்த சீர்திருத்த முறைகள் மூலம் வெளியேற்றி விட்டால், இந்தக் களர் உவர் மண்ணையும் சிறந்த பயிர்கள் விளைவிக்கும் கழனியாக ஆக்க முடியும் என்பது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
பயிர் நன்கு வளர்ந்து பலன் தருவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது, மண் என்பது யாவரும் அறிந்ததே. மண் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சில இடங்களில் கருநிற மண், சில இடங்களில் செந்நிற மண் என உள்ளன. சில மண் வகைகளில் களி அதிகம். சில வளமுள்ளவை. சிலவற்றில் சத்துப் பற்றாக்குறை உள்ளது. இப்படி, இடத்திற்கு இடம் மண் மாறுபட்டு அமைகிறது.
விவசாயிகள், களர் நிலம் ஒருவகை, உவர் நிலம் மற்றொரு வகை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், சீர்திருத்தப் பராமரிப்பு முறைகள் இவ்விரு வகைக்கும் முற்றிலும் மாறுபடும்.
களர் நிலம் என்றால் என்ன?
களர் நிலங்களில் களிமண்ணின் மீது சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்திருக்கும். இதனால், மண்ணின் கார அமில நிலை 8.5-க்கு மேல் உயர்ந்து விடும். மண்ணில் சோடிய அயனிகளின் படிமானமும் 15 சதவீதத்திற்கு மேல் (ஈ.எஸ்.பி.) இருக்கும்.
களர் மண்ணால் ஏற்படும் தீமைகள்
+ மண் இறுகியும், காற்றோட்ட வசதி இல்லாமலும் இருப்பதால், வேரின் வளர்ச்சிப் பாதிக்கப்படும்.
+ மண்ணின் கார அமில நிலை 8.5-க்கு மேல் இருப்பதால், பயிரால் சத்துகளைப் போதியளவில் எடுத்துக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக, நுண் சத்துகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் பயிரின் வளர்ச்சித் தடைபடும்.
+ நுண்ணுயிர்களின் பெருக்கமும், செயற்பாடும் பெருமளவில் பாதிக்கப்படும்.
+ சோடியம் கார்பனேட், பைகார்பனேட் உப்புகளால் வேரின் வளர்ச்சிப் பாதிக்கப்படும். மேலும், சோடிய அயனிகள் செடியினுள் அதிகளவில் சென்று நச்சுப் பொருளாக மாறும்.
+ செடிகள் மிகவும் வளர்ச்சிக் குன்றி, எரிந்ததைப் போல் காட்சியளிக்கும். ஆங்காங்கே, செடிகள் திட்டுத் திட்டாகக் காய்ந்ததைப் போல் காணப்படும்.
களர் நிலச் சீர்திருத்தம்
+ களர் மண் ஏற்பட முக்கியக் காரணியான சோடியம் அயனிகளை, களிமண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.
+ சோடியம் அயனிகள் மண்ணிலிருந்து வெளியேற, கால்சியம் அயனிகளைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு விடுபடும் சோடியம் அயனிகளைச் சிறந்த வடிகால் வசதி மூலம் வயலிலிருந்து அகற்றி விடலாம்.
+ இதற்கு ஜிப்சம் என்னும் கால்சியம் சல்பேட் சீர்திருத்தியை, களர் மண்ணுடன் நன்கு கலக்கி, சேற்றுழவு செய்து, நல்ல நீருடன் தேங்கச் செய்து, பின் நல்ல வடிகால் மூலம் வடியச் செய்ய வேண்டும்.
+ விவசாயிகள் இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ஜிப்சம் வயலில் இட்டாலும் அதற்குத் தகுந்த வடிகால் வசதி செய்யா விட்டால், களர் நிலத்தைச் சீர்திருத்தும் பணியில் முழுப் பலனையும் அடைய முடியாது.
உவர் நிலம் என்றால் என்ன?
உவர் நிலங்களில் நீரில் கரையும் உப்புகள் அதிகமாக இருக்கும். வெய்யில் காலங்களில் இம்மண்ணின் மீது வெண்ணிற உப்புகள் படிந்திருக்கும். கார அமில நிலை 8.5-க்கு மேற்படாமல் இருக்கும்.
உவர் மண்ணால் ஏற்படும் தீமைகள்
+ மண்ணில் உப்புகள் அதிகமாக இருப்பதால், நீரை எளிதில் உறிஞ்சும் சக்தியானது பயிரின் வேர்களில் குறைந்து கொண்டே இருக்கும். அதாவது, செடிக்குத் தேவைப்படும் நீரை, வேர்கள் உறிஞ்ச முடியாத நிலை ஏற்படும்.
+ சோடியம், கால்சியம், மக்னீசியம், குளோரைடு, சல்பேட் போன்றவை, செடியினுள் அதிகமாகச் சென்று நச்சுப் பொருளாக அமைந்து விடும். இதனால் பயிரின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும்.
உவர் நிலச் சீர்திருத்தம்
+ உவர் நிலத்தைச் சரிவுக்கு ஏற்றாற் போல், சிறு பாத்திகளாகப் பிரித்து, நல்ல வரப்புகளை அமைத்து, உவரற்ற பாசனநீர், மழைநீர் அல்லது வாய்க்கால் நீரைப் பாய்ச்சித் தேக்கி வைத்து, பயிருக்குத் தீங்கு செய்யும் உப்புகளை, நல்ல வடிகால் வசதி மூலம் மண்ணிலிருந்து வெளியேற்றி விட வேண்டும்.
+ பிறகு, உவர்த் தன்மையைத் தாங்கி வளரும் பயிர்களான, இராகி, பருத்தி, சூரியகாந்தி, குதிரை மசால், தக்காளி போன்றவற்றை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
+ இயற்கை உரங்களான, தொழுவுரம், கம்போஸ்ட், ஆலைக்கழிவு போன்றவற்றை, உவர் மண்ணில் இடுவது நன்மை பயக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள 3 இலட்சம் எக்டர் களர் உவர் நிலங்களைச் சீர்திருத்தம் செய்து உணவு உற்பத்தியை அதிகளவில் பெருக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாட்டின் மையப்பகுதியாக அமைந்த, திருச்சியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி- மணப்பாறை சாலையில் உள்ள நவலூர் குட்டப்பட்டுக் கிராமத்தில் களர் உவர் ஆராய்ச்சி மையம் ஒன்றை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 1981-ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது.
இம்மையத்தின் அருகில் உள்ள மணிகண்டம் கிராமத்தில், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், ஒன்றுமே விளையாமல் தரிசாகக் கிடந்த களர் நிலத்தைச் சீர்திருத்தி, நெற்பயிரில் ஏக்கருக்கு 1-2 டன் வரை மகசூல் எடுக்கப்பட்டுள்ளது.
நல்ல மண்ணில் சாகுபடி செய்யும் பயிரிலிருந்து கிடைக்கும் மகசூலை விட, களர் உவர் மண்ணில் சராசரியாக 70 முதல் 80 சதம் வரை மகசூல் குறைவாகவே கிடைக்கிறது. இந்த மகசூல் இழப்பை ஈடு கட்ட, வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள், இதுவரை கூறிய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களைக் கையாண்டால், களர் உவர் மண்ணில் கணிசமான அளவில் மகசூலைப் பெறலாம்.

முனைவர் தா.ஷெரின் ஜெனிதா ராஜம்மாள், இணைப் பேராசிரியர், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



