வாசனைப் பயிர்களில் ஒன்றான இலவங்கப் பட்டை மரம், வறட்சியைத் தாங்கி மலைப் பகுதிகளில் பயிரிட மிகவும் ஏற்ற நறுமணப் பயிராகும். இந்தியாவில் மலபார் கடற்கரைப் பகுதி மற்றும் இலங்கையைத் தாயகமாகக் கொண்ட இலவங்கப் பட்டை மரம், கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், அசாம் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.
இந்தியா, பர்மா, மலேசியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இப்பயிர் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கீழ்ப்பழனிமலை, குற்றாலம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இலவங்கம் சாகுபடி செய்யப்படுகிறது.
வளரியல்பு
இயல்பாக இலவங்கப் பட்டை மரம் 10-15 மீட்டர் உயரம் வரை வளரும். எனினும், பட்டை உரிப்பதற்கு வசதியாக, ஆண்டுதோறும் கவாத்து செய்து குட்டையாகப் பராமரிக்கப்படுகிறது. உரித்ததும் சிறிது அமிலத் தன்மையில் இருக்கும் பட்டை, உலர்ந்ததும் நல்ல நறுமணத்தைப் பெற்று விடும்.
பயன்கள்
நறுமணமிக்க துவர்ப்புத் தன்மைக்காக, மாமிச மற்றும் பிரியாணி உணவுத் தயாரிப்பில், சிறு துண்டுகளாகவும் பொடியாகவும் பட்டை பயன்படுத்தப்படுகிறது. பட்டையில் 0.5 முதல் 1.0 சதம் வரை நறுமண எண்ணெய் அடங்கியுள்ளது. இந்த எண்ணெய், சென்ட் வகைகள், முகப்பூச்சு, பற்பசை, தலையில் தேய்க்கும் வாசனை எண்ணெய்த் தயாரிப்பில் பயன்படுகிறது.
இலைகளைக் காய்த்து வடிக்கும் போது, 1.0 சதவீத வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இந்த எண்ணெய், நறுமணப் பொருள்கள், சோப்புகள் மற்றும் பேக்கரி உணவு வகைகள் தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது. மேலும், வேர்ப்பட்டையில் இருந்து 3.0 சதவீத வாசனை எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய், இலவங்க ஸ்வோட் என அழைக்கப்படுகிறது.
உயர் விளைச்சல் இரகங்கள்
ஏற்காடு 1(1996): இந்த இரகம், நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து அறுவடைக்குத் தயாராகி, இருபது ஆண்டுகள் வரை மகசூலைத் தரும். இது, ஆண்டுக்கு 19.2 சதவீதம் வரை புதிய துளிர் விடும் தன்மை மிக்கது. ஒரு எக்டரில் 359.75 கிலோ உலர் பட்டைகளையும், 3,800 கிலோ உலர் இலைகளையும் மகசூலாகத் தரவல்லது.
பி.பி.ஐ.(சி)1(2003): இந்த இரகம், ஒரு அறுவடையில் மரத்துக்குச் சராசரியாக 0.882 கிலோ மற்றும் எக்டருக்கு 980 கிலோ உலர் பட்டையை மகசூலாகத் தரவல்லது. இதிலிருந்து பட்டை எண்ணெய் 2.9 விழுக்காடு, ஒலியோரெசின் 10.0 விழுக்காடு, மற்றும் இலை எண்ணெய் 3.3 விழுக்காடு கிடைக்கும்.
மரத்தை வெட்டியதும் அதிகத் துளிர்களைத் தருவதுடன், 18 முதல் 24 மாதங்களுக்கு ஒருமுறை செய்யப்படும் மறுதாம்பு அறுவடை மூலம், பட்டையில் 2.7 சத எண்ணெய், 73 சத சின்னமால்டிஹைடு, 8 சத ஒலியோரெசின் மற்றும் இலையில் 2.8 சத எண்ணெய், 62 சத யூஜினால், 15 சதம் சின்னமால்டிஹைடு கிடைக்கும்.
ஐஐஎஸ்ஆர் நவஸ்ரீ(1996): இந்த இரகம், இலங்கை வகையிலிருந்து உருவாக்கப்பட்டது. அதிக பட்டை மகசூலைக் கொடுக்கும் இந்த இரகம், மலை மற்றும் சமவெளியில் பயிரிட உகந்தது. 40.6 சதவீதப் பட்டை மகசூலைத் தரவல்லது. இந்த இரகம் 200 கிலோ உலர் சுருள் பட்டையை மகசூலாகக் கொடுக்கும். பட்டையில் 2.7 சத எண்ணெய், 73 சத சின்னமால்டிஹைடு, 8 சத ஒலியோரெசின் மற்றும் இலையில் 2.8 சத எண்ணெய், 62 சத யூஜினால், 1.5 சதம் சின்னமால்டிஹைடு இருக்கும்.
ஐஐஎஸ்ஆர் நித்தியஸ்ரீ (1996): தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட இரகம். 30.7 சதம் பட்டை மகசூலைக் கொடுக்கும். எக்டருக்கு 200 கிலோ உலர்ந்த சுருள் பட்டை கிடைக்கும். பட்டையிலிருந்து 2.7 சத எண்ணெய், 5 சத யூஜினால், 58 சத சின்னமால்டிஹைடு, 10 சத ஒலியோரெசின் மற்றும் இலையிலிருந்து 3 சத எண்ணெய், 78 சத யூஜினால், 14 சதம் சின்னமால்டிஹைடு கிடைக்கும்.
கொங்கன் தேஜ்(1993): இது, இலங்கை இரகத்திலிருந்து விதைவழித் தேர்வு மூலம் மராட்டியத்தில் உள்ள வெங்கூர்லா ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்ட உயர் விளைச்சல் இரகமாகும். ஒரு மரத்தின் மூலம் 102 கிலோ உலர் பட்டை மகசூலாகக் கிடைக்கும். 51.78 சத பட்டை மகசூலைத் தரும். இந்த இரகப் பட்டையில் 3.2 சதம் பட்டை எண்ணெய் கிடைக்கும். அதில் 29.16 சின்னமால்டிஹைடு, 70.23 சதம் யூஜினால் அடங்கியிருக்கும். இலைகளில் 6.63 எண்ணெய் இருக்கும். அதில் 2.28 சதம் யூஜினால் இருக்கும்.
சுகந்தகிரி (2000): வயநாடு உள்ளூர் இரகத்தின் மூலம் கேரளத்திலுள்ள ஒடக்கள்ளி ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது. மரத்துக்கு 1.2 கிலோ பச்சைப் பட்டையும், 18.34 கிலோ பச்சை இலையும் கிடைக்கும். பட்டை மகசூலைத் தரும் இந்த இரகம், அதிக இலை எண்ணெய்க்காக வெளியிடப்பட்டது. பட்டையில் 0.94 சதம் எண்ணெய், 45 சின்னமால்டிகைடு இருக்கும். இலைகளில் 1.6 சதம் எண்ணெய், அதில் 93.7 சதம் யூஜினால் இருக்கும்.
ஆர்.ஆர்.எல்(பி) சி-6 (1996): இது, பண்பகக் கருவூலத்திலிருந்து தேர்வு மூலம் உருவாக்கப்பட்டது. இது, எக்டருக்கு 250 கிலோ பட்டையைத் தரவல்லது. இதன் பட்டையில் 83 சதம் சின்னமால்டிகைடு அடங்கியுள்ளது. இலைகளில் 0.8 சதம் எண்ணெய்யும், அதில் 94 சதம் யூஜினாலும் இருக்கும்.

இலவங்கம் – தாவரவியல் பண்புகள்
இலவங்க மரங்கள் 10-15 மீட்டர் உயரம் உள்ளவை. இலைகள் முட்டை வடிவத்தில் நீள் சதுரமாக இருக்கும். பூக்கள் பச்சை நிறத்தில், குஞ்சம் வடிவத்தில் காணப்படும். இப்பூக்கள் விரியும் போது தனி வாசனையை வெளிப்படுத்தும். பழமானது ஒரே ஒரு விதையைக் கொண்ட 1 செ.மீ. ஊதாநிற பெர்ரியாகும்.
இலவங்கப் பட்டையாகப் பயன்படும் சின்னமன் வீரம், சின்னமன் சைலானிக்கம் ஆகிய இரகங்களில் ஏழு காட்டு வகை இலவங்கப்பட்டைச் சிற்றினங்கள் உள்ளன. அவையாவன: சின்னமன் டமலா, சின்னமன் டூபியம், சின்னமன் ஓவலிப்போலியம், சின்னமன் சிட்ரையோடோரம், சின்னமன் ரிவுபோரம், சின்னமன் சிங்ஹராஜென்ஸ், சின்னமன் கப்பாரு-கொரென்டே.
உண்மை இலவங்கப் பட்டை சி.சேலானிக்கம் என்னும் தாவரப்பெயரில் உள்ளது. இது, இலங்கை இலவங்கப்பட்டை ஆகும். ஐரோப்பிய சின்னமன் எனப்படும் கேசியா சின்னமனை உண்மையான இலவங்கப் பட்டையோடு பயன்படுத்துகிறார்கள். கேசியா சின்னமனில் அதிகளவில் க்யூமாரின் உள்ளது. ஆனால், சின்னமன் சைலானிக்கம் வகையில் குறைந்தளவில் க்யூமாரின் உள்ளது. அதிக க்யூமாரினைக் கொண்டுள்ள கேசியாவைப் பயன்படுத்தினால், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும். இவை இரண்டின் வேறுபாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.
இலங்கைப் பட்டை இனமான சின்னம்மன்: இது, இலங்கை, இந்தியா, மடகாஸ்கர், செய்ச்செலஸ் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் தாவரப்பெயர் சின்னமோமம் சைலானிக்கம். பட்டை மங்கலான காப்பி நிறத்தில் இருக்கும். பட்டை மெல்லியதாக, மென்மையான வாசத்துடன், இலேசான இனிப்பு மற்றும் இலேசான கசப்புச் சுவையில் இருக்கும். கொமரின் 0.004 சதம், எண்ணெய் 0.52-2.0 சதம் இருக்கும்.
சீனப்பட்டை இனமான கேசியா: இது, சீனா, இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ளது. இதன் தாவரப் பெயர் சின்னமோமம் கேசியா. பட்டை, சிவப்புக் கலந்த காப்பி முதல் சாம்பல் நிறம் வரை இருக்கும். பட்டை கனமாக, சற்று இறுக்கமாக, காரம் கனிந்த இனிப்புச் சுவையில் இருக்கும். கொமரின் 5 சதம், எண்ணெய் 1-5 சதம் இருக்கும்.
சாகுபடி
மண்: இருமண் நிலங்களில் இதனைச் சிறப்பாக சாகுபடி செய்யலாம்.
காலநிலை: கடல் மட்டத்திலிருந்து 500-1,000 மீட்டர் உயரம் மற்றும் பலவகைக் காலநிலைகள் நிலவும் பகுதிகளில் இலவங்க மரத்தைச் சாகுபடி செய்யலாம். பொதுவாக, ஆண்டுக்கு 200-2,000 செ.மீ. மழை பெய்யும் மலைப்பகுதிகளில் சிறப்பாகப் பயிரிடலாம்.
இனப் பெருக்கம்: விதைக்கன்றுகள், வேர்ப்பிடித்த தண்டுக் குச்சிகள் மற்றும் விண்பதியன்கள் மூலம் பெருக்கம் செய்யலாம். உயர் விளைச்சல் இரகங்களை, விதைக் கன்றுகளைத் தவிர்த்து மற்ற முறைகளில் பயிர்ப் பெருக்கம் செய்ய வேண்டும்.
தண்டுக் குச்சிகள்: பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இரண்டு இலைகளுடன் 10 செ.மீ. நீளமுள்ள நடுமுதிர் தண்டுக்குச்சிகளை எடுத்துக் கொண்டு, அவற்றின் அடிப்பாகத்தை 2,000 பிபிஎம் இண்டோல் பியூடிரிக் அமிலம் என்னும் வேர் வளர்ச்சி ஊக்கியில் நனைத்து நட வேண்டும். பிறகு அவற்றை, மணல் அல்லது சம அளவில் மணலும் தென்னை நார்க்கழிவுத் தூளும் நிரப்பப்பட்ட கண்ணாடிப் பைகளில் அல்லது நிழலில் அமைக்கப்பட்ட மேட்டுப் பாத்திகளில் நட வேண்டும்.
கண்ணாடிப் பைகளில் நட்டிருந்தால், அவற்றையும் நிழலில் வைக்க வேண்டும். இப்படி நடப்பட்ட தண்டுக் குச்சிகளின் ஈரத்தன்மையைப் பராமரிக்க, ஒரு நாளைக்கு 2-3 முறை பூவாளி மூலம் நீரைத் தெளிக்க வேண்டும். தண்டுக் குச்சிகள் 45-60 நாட்களில் வேர் விடத் தொடங்கும். நன்கு வேர் விட்ட தண்டுக் குச்சிகளை மண் கலவை நிரப்பப்பட்ட கண்ணாடிப் பைகளில் நட்டு, நிழலில் வைத்து நீரூற்றிப் பராமரிக்க வேண்டும்.
விண் பதியன்கள்: கிளையின் நடுமுதிர் தண்டுப் பகுதியில் ஒரு சுற்று வளையம் பட்டையை நீக்கிவிட்டு அந்தப் பகுதியில் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஐபீஏ 2,000 பிபிஎம் அல்லது ஐஏஏ 2,000 பிபிஎம் அளவில் தடவ வேண்டும். வேர் வளர்ச்சி ஊக்கி தடவப்பட்ட இடத்தில், ஈரமான தென்னை நார்க்கழிவுத் தூளை வைத்து, கண்ணாடித் தாளால் சுற்றிக் கட்ட வேண்டும். இப்படிச் சுற்றிக் கட்டுவதால் உள்ளே இருக்கும் ஈரத்தன்மை காக்கப்படும்.
விண் பதியன்கள் 40-60 நாட்களில் வேர்விடத் தொடங்கும். நன்றாக வேர்விட்ட விண் பதியன்களைத் தாய்ச் செடியிலிருந்து பிரித்து, மண் கலவையுள்ள கண்ணாடிப் பைகளில் நட்டு நிழலில் வைத்து, ஈரம் காயாது நீரூற்றிப் பராமரிக்க வேண்டும். நன்கு வேர் விட்ட விண் பதியன்களை மழைக்காலம் தொடங்கியதும் தோட்டங்களில் நடலாம்.
விதைக் கன்றுகள்: இலவங்கப் பட்டை மரம் ஜனவரி மாதத்தில் பூத்துக் காய்க்கத் தொடங்கி, ஜூன்- ஆகஸ்ட் காலத்தில் பழுக்கும். இப்படி நன்கு பழுத்த பழங்களை மரத்திலிருந்து பறித்து, அல்லது கீழே விழுந்து கிடக்கும் பழங்களைச் சேகரித்து, சதைப்பகுதியை நீக்கி விட்டு விதைகளை நன்றாக அலசி, தாமதம் செய்யாமல் உடனே விதைக்க வேண்டும். ஏனெனில், விதைகள் குறைந்த முளைப்புத்திறன் கொண்டவை.
விதைகளை, மணற்படுக்கையில் அல்லது சமமாக மணல், மண் மற்றும் நன்கு மட்கிய சாணம் நிரப்பப்பட்ட கண்ணாடிப் பைகளில் விதைக்கலாம். விதைகள் 15-20 நாட்களில் முளைக்கத் தொடங்கும். ஈரத்தன்மையைப் பாதுகாக்க அடிக்கடி நீர் ஊற்ற வேண்டும். விதைக் கன்றுகளை ஆறு மாதம் வரை நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
நடவு செய்தல்: ஜூன் முதல் இலவங்கப்பட்டைக் கன்றுகளை நடவு செய்யலாம். 60x 60×80 செ.மீ. நீள, அகல, உயரமுள்ள குழிகளை 2×2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். இந்த இடைவெளியில் எக்டருக்கு 2,500 செடிகளை நடலாம்.
பின்செய் நேர்த்தி: இச்செடிகள் நன்கு வளர்வதற்கு கோடைக் காலத்தில் போதியளவில் பாசனம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2-3 முறை களையெடுத்து, தோட்டத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செடிகளைச் சுற்றி நிலப்போர்வை அமைத்து ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். கன்றுகளின் அடிப்பகுதியில் வளரும் அதிகப்படியான பக்கக் கிளைகளை அவ்வப்போது அகற்றிட வேண்டும்.
உரமிடுதல்: இலவங்கக் கன்றுக்கு, ஆண்டுக்கு 20 கிலோ தொழுவுரம் மற்றும் 200:180:250 கிராம் தழை, மணி, சாம்பல் ஆகிய சத்துகளை, சம பங்காகப் பிரித்து, ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இட வேண்டும்.
நோய்கள்
இளஞ்சிவப்பு அழுகல் நோய்: பட்டைப் பகுதியைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தும் இந்நோயை, ஒரு சதவீத போர்டோ கலவையைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிகள்
இலவங்கப் பட்டையைத் தாக்கும் பட்டாம் பூச்சியின் புழுக்கள், இலைகளைத் தின்று செடியின் வளர்ச்சியைப் பாதிக்கச் செய்யும். மேலும் சாறு உறுஞ்சும் பூச்சி, இலைத் துளைப்பான் ஆகியனவும் இப்பயிரைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, இமிடா குளோரோபிட் என்னும் மருந்தை, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடையும் பதப்படுத்தலும்
நூற்றாண்டுக் காலம் வாழக்கூடிய இலவங்க மரத்தை, ஆண்டுதோறும் அல்லது ஈராண்டுகளுக்கு ஒருமுறை, பட்டையை உரிப்பதற்கு வசதியாக, கவாத்து செய்து, குட்டையாகப் பராமரிக்க வேண்டும். கன்றுகளை நட்ட 3-4 ஆண்டுகளில் முதல் பட்டை உரிப்பைத் தொடங்கலாம். கன்றுகளின் 2 வயதில், ஜூன் ஜூலை மாதங்களில், தரையிலிருந்து 12 செ.மீ. உயரத்தில் வெட்டிவிட வேண்டும்.
வெட்டிய பகுதியில் ஒரு சத போர்டோ கலவையைத் தடவி மண்ணால் மூட வேண்டும். இது, பக்கக் கிளைகள் உருவாவதை ஊக்கப்படுத்தும். இதே முறையை ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பக்கக் கிளையிலும் பின்பற்ற வேண்டும். இதனால், கன்று 2 மீட்டர் உயரத்தில் தாழ்வான குத்துச் செடியாக வளரும்.
ஒரு வருடம் விட்டு மறு வருடம் கிளைகள் பட்டை உரிப்பதற்காக வெட்டப்படும். சீரான கரும்பழுப்பு நிறம் மற்றும் 1.5-2.0 செ.மீ. பருமனுள்ள கிளைகள், பட்டை எடுத்தலுக்கு ஏற்றவை. கிளைகள் பட்டை உரிப்பதற்கு ஏற்றவையா என்பதை அறிய, கூர்மையான கத்தியால், தண்டின் மேல் வெட்டிப் பார்க்கலாம்.
அதாவது, பட்டை எளிதில் உரிந்து வந்தால் உடனே மரக்கிளைகளை வெட்டத் தொடங்கலாம். கன்றுகளுக்கு 2 வயதாகும் போது தரைப்பகுதியை ஒட்டியுள்ள கிளைகளை வெட்டிவிட வேண்டும். பிறகு, அந்தக் கிளைகளிலுள்ள இலைகள் மற்றும் நுனிப்பகுதிகளை நீக்கி விட்டுக் கட்டுகளாகக் கட்ட வேண்டும்.
அறுவடை செய்த கிளைகளை 1-1.25 மீட்டர் நீளமுள்ள நேர்க்குச்சிகளாக வெட்ட வேண்டும். பட்டை உரித்தல் என்பது நுட்பமான செயலாகும். எனவே, அதற்குத் திறமையும் அனுபவமும் தேவை. பட்டை உரிப்பு, அதற்கெனவே தயாரிக்கப்பட்ட கத்தியால் செய்யப்படும். கத்தியின் வளைவான நுனியில் நீண்டிருக்கும் பகுதி பட்டையைப் பிரித்தெடுக்க உதவுகிறது.
முதலில் பட்டையின் கடினமான வெளிப்பகுதியைச் சுரண்டி எடுக்க வேண்டும். பிறகு, சுரண்டப்பட்ட பகுதிகளை பித்தளை அல்லது அலுமினியக் கம்பி மூலம் மெருகேற்ற வேண்டும். இது, பட்டை உரிப்பை எளிதாக்கும்.
மெருகேற்றிய பட்டையை நீளவாக்கில் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் கத்தியால் பிளக்க வேண்டும். பட்டைக்கும் தண்டுக்கும் இடையே கத்தியைச் செலுத்தி, பட்டையை எளிதில் உரித்து விடலாம். காலையில் வெட்டும் இலவங்கப்பட்டைக் கிளைகளில் இருந்து அன்றே பட்டையை உரித்து விட வேண்டும்.
இப்படி உரித்த பட்டைகளைச் சேகரித்து ஒரு இரவு முழுவதும் நிழலில் வைக்க வேண்டும். அடுத்து, ஒருநாள் முழுவதும் நிழலில் உலர்த்திய பிறகு நான்கு நாட்களுக்கு வெய்யிலில் உலர்த்த வேண்டும். அப்போது பட்டை சுருங்கி, சுருள் பட்டையாக மாறும். சிறிய சுருள்கள் பெரிய சுருள்களில் திணித்து வைக்கப்படும்.
தரம் பிரித்தல்
இந்தச் சுருள்கள், முதல் தரமான 00000-லிருந்து கடைசித் தரமான 0 வரை தரம் பிரிக்கப்படும். கடைசியில் எஞ்சியிருக்கும் சிறு பட்டைத் துண்டுகள் தரம் பிரிக்கப்படும். சிறு துகள்கள், சீவல்கள் எனத் தரம் பிரிக்கப்படும். சிறிய தண்டுகளில் இருக்கும் பட்டையை உரித்து எடுப்பதற்குப் பதிலாகச் சீவி எடுப்பர். அவை சிறு துண்டுகள் என அழைக்கப்படும். சில நேரங்களில் பட்டையின் கடினமான வெளிப்பகுதி நீக்கப்படாமலே சுரண்டப்படும். இவை, சுரண்டப்படாத சிறு துண்டுகள் எனப்படும். பலதரப்பட்ட பட்டைகளைத் தூளாக்கி, இலவங்கப்பட்டைத் தூள் தயாரிக்கப்படுகிறது.
தரம் பிரித்தல்: இலங்கை முறை
இலங்கை முறையில் சுருள்களை நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். அவையாவன:
சுருள் (quills): ஆல்பா – 6 மி.மீ. விட்டத்திற்குக் குறைவாக. காண்டினென்றல் – 16 மி.மீ. விட்டத்திற்குக் குறைவாக. மெக்ஸிக்கன் – 19 மி.மீ. விட்டத்திற்குக் குறைவாக. ஹாம்பர்க் – 32 மி.மீ. விட்டத்திற்குக் குறைவாக.
சுருள் பட்டை (quillings): 106 மி.மீ. நீளமுள்ள பட்டைத் துண்டுகள்.
இலைகள் (featherings): பட்டைக்குள் உள்ள குச்சிகள்.
சீவல்கள் (chips): செதுக்கிய பட்டை.
மகசூல்
எக்டருக்கு 4 கிலோ பட்டை எண்ணெய் மற்றும் 350-980 கிலோ பட்டை கிடைக்கும். ஒரு மரத்தில் இருந்து பட்டை எண்ணெய் 0.2-0.5 சதம், இலை எண்ணெய் 0.5 -0.7 சதம் மற்றும் ஓலியோரெசின் 10-12 சதம் கிடைக்கும்.

முனைவர் இரா.சித்ரா, இணைப் பேராசிரியர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



