கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் மிக முக்கியமான மரம் தென்னை. தனி மரமாக, தோப்பாக, மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதிகளில், கடலோரங்களில் பல இலட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு அடுத்து, தமிழ்நாட்டில் தான் அதிகப் பரப்பில், அதாவது, 4.168 இலட்சம் எக்டரில் தென்னை உள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு 65 இலட்சம் காய்களுக்கு மேல் விளைகின்றன. சமையல், மருத்துவம் மற்றும் அழகுப் பொருள்கள் தயாரிப்பில் தேங்காய் பயன்படுவதால், இதன் தேவை கூடிக்கொண்டே உள்ளது. எனவே, தேங்காய் உற்பத்தியைப் பெருக்குதல் அவசியமாகும்.
தென்னையில் அதிக மகசூலை எடுக்க, சத்து மேலாண்மை மிக அவசியம். ஏனெனில், மண்வளம் மற்றும் அதன் தன்மைக்கேற்ப, பயிர்களுக்குக் கிடைக்கும் சத்தின் அளவு மாறும். இதில் சத்துக்குறை ஏற்பட்டால், 35 சதத்துக்கும் மேல் மகசூல் பாதிக்கப்படும்.
சத்து மேலாண்மை
ஒருங்கிணைந்த முறையில் மட்கு உரம், உயிர் உரம் மற்றும் தேவையான இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் மண்வளம் கெடாது. ஒரு மரத்துக்கு, மட்கிய தொழுவுரத்துடன் 50 கிராம் அசோஸ்பைரில்லம், 50 கிராம் பாஸ்போபாக்டீரியா வீதம் கலந்து, ஜூன், டிசம்பரில் இட வேண்டும். மேலும், மரம் ஒன்றுக்கு 50 கிராம் தக்கைப்பூண்டு விதை வீதம் எடுத்து, மரங்களைச் சுற்றி விதைத்து, பூக்கும் போது மடக்கி மண்ணுக்குள் மூடிவிட வேண்டும்.
உர அட்டவணை:
தொழுவுரம் கிலோவிலும், இரசாயன உரங்கள் கிராமிலும் சொல்லப்பட்டுள்ளன.
| வயது | தொழுவுரம் | யூரியா | சூப்பர் பாஸ்பேட் | பொட்டாஷ் |
| முதலாண்டு | 10 | 308 | 500 | 480 |
| 2ஆம் ஆண்டு | 20 | 616 | 1000 | 960 |
| 3ஆம் ஆண்டு | 30 | 924 | 1500 | 1440 |
| 4ஆம் ஆண்டு | 40 | 1230 | 2000 | 1920 |
| 5ஆம் ஆண்டு முதல் | 40 | 1230 | 2000 | 1920 |
உரத்தை இரண்டு பங்காகப் பிரித்து ஜுன் ஜுலை மற்றும் டிசம்பர் ஜனவரியில் இட வேண்டும். எரு மற்றும் உரங்களை மரத்திலிருந்து 1.8 மீட்டர் தொலைவில் இட வேண்டும். உரமிட்ட பின் நீர் பாய்ச்சுதல் மிகவும் அவசியம்.
நுண்ணூட்ட மேலாண்மை
போராக்ஸ் 50 கிராம், ஜிப்சம் 1 கிலோ, மக்னீசியம் சல்பேட் 500 கிராம் ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை இட வேண்டும். மேலும், ஆண்டுக்கு இருமுறை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் தக்கைப்பூண்டு விதைகளை, மரங்களின் வரிசைகளுக்கு இடையில் விதைத்து, பூக்கும் போது மடக்கி மண்ணுக்குள் மூடி விட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் ஆண்டுக்கு இருமுறை இளம் வேர் வழியாகச் செலுத்த வேண்டும். இதைச் செய்தால் நுண்ணூட்டக் குறையால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்த்து அதிக விளைச்சலைப் பெறலாம்.

முனைவர் வெ.தனுஷ்கோடி,
முனைவர் ச.ஜெ.விஜயலலிதா, முனைவர் நூர்ஜஹான் அ.கா.க.ஹனீப், முனைவர் கோ.அமுதசெல்வி, வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி-639115.



