உணவில் தினமும் ஒரு கீரையைச் சேர்த்துக் கொண்டால், நோயற்று வாழலாம். அந்தளவில் நம் உடம்புக்குத் தேவையான சத்துகள், கீரை வகைகளில் நிறைந்து உள்ளன. இவ்வகையில், புளிச்சக்கீரை சாகுபடி மற்றும் அதன் பயன்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
பயன்கள்
+ புளிச்சக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, இதை உணவில் சேர்த்து வந்தால், இரத்தச்சோகை குணமாகும்.
+ நோயெதிர்ப்பு சக்திமிக்க புளிச்சக்கீரை, காசநோயைக் குணமாக்கும்.
+ இரத்தத்தைச் சுத்திகரிப்பதில் புளிச்சக்கீரை முதலிடம் வகிக்கிறது.
+ புளிச்சக்கீரை, உடல் வெப்ப நிலை சீராக இருக்க உதவுகிறது.
+ அதனால், இக்கீரை, உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும் கீரை எனப்படுகிறது.
சாகுபடி
+ சித்திரை, ஆடி, மார்கழி, மாசியில், புளிச்சக் கீரையைப் பயிர் செய்யலாம்.
+ சுவையும் சத்தும் மிகுந்த இந்தக் கீரை, இந்தியா முழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.
+ இதில், வெள்ளைப்பூ பூக்கும் இரகம், சிவப்புப்பூ பூக்கும் இரகம் என, இரண்டு இரகங்கள் உள்ளன.
+ வெள்ளைப்பூ கீரையில் உள்ளதை விட, சிவப்புப்பூ கீரையில், புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும்.
+ செம்புளிச்சக்கீரை, கரும் புளிச்சக்கீரை ஆகிய இரகங்களும் உண்டு.
+ இந்தக் கீரை, வறட்சியை ஓரளவு தாங்கி வளரும் தன்மை மிக்கது. அதனால், வெப்பத்தைத் தாங்கி, பல்வேறு மண் வகைகளில் நன்றாக வளரும்.
+ நல்ல மண்ணும் மணலும் கலந்த, சற்று அமிலத்தன்மை உள்ள, இருமண் நிலம், செம்மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை.
+ இத்தகைய நிலத்தை, 2-3 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்குப் பத்து டன் தொழுவுரம் வீதம் இட்டுப் பரப்பி, சமப்படுத்த வேண்டும்.
+ மண்புழு உரம், கம்போஸ்ட் ஆகியவற்றையும் இடலாம்.
+ அடுத்து, நீர் வசதிக்கு ஏற்ப, தேவையான அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும்.
+ எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். இவற்றைப் பார்களின் பக்கவாட்டில் ஊன்ற வேண்டும்.
+ விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். மூன்றாம் நாள் உயிர்நீர் விட வேண்டும். அடுத்து, நான்கு நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம்.
+ களைகளால் கீரைச் செடிகள் பாதிக்கப்படாமல் இருக்க, விதைத்து 10-15 நாட்கள் கழித்து, களையெடுக்க வேண்டும்.
+ இலைகள் அதிகமாகத் தழைத்து வர, ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. பஞ்சகவ்யா வீதம் கலந்து காலை நேரத்தில், பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.
+ ஜீவாமிர்தக் கரைசலைப் பாசனநீரில் கலந்து விடலாம். இதனால், கீரைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
+ கீரைகளில் பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், இஞ்சி, மிளகாய், பூண்டுக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
+ இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயைச் சமமாக எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் கலந்து ஒருநாள் வைத்திருந்தால், இந்தக் கரைசல் தயாராகி விடும்.
+ இதைப் பத்து லிட்டர் நீருக்கு 300 மி.லி. வீதம் கலந்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை
+ இப்படிப் பராமரித்தால், 80 நாட்களில் புளிச்சக்கீரை அறுவடைக்குத் தயாராகி விடும்.
+ இதை, தரையிலிருந்து 5 செ.மீ. உயரம் விட்டு விட்டு அறுவடை செய்யலாம்.
முனைவர் சி.இராஜா பாபு, இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி, திருச்சி மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.