My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


கண்டங்கத்தரி சாகுபடி!

ந்தியாவில் மருந்து தொழிற்சாலைகளுக்கு ஸ்டெராய்ட்ஸ் மூலப்பொருள்களை வழங்கும் துணை ஆதாரமாகக் கண்டங்கத்தரி விளங்குகிறது. கண்டங்கத்தரிப் பழங்களில் இருந்து பெறப்படும் சோலாசோடின் என்னும் வேதிப்பொருள், டியோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருளுக்கு மாற்றாக, ஸ்டெராய்ட் ஹார்மோனைத் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. இலை, கருத்தடை மாத்திரை உற்பத்தியில் பயன்படுகிறது. இதன் சாறு, நோய் நாசினிப் பண்புகள் மிக்கது.

சோலானம் பேரினம் 2,000 இனங்களைக் கொண்டது. இதைக் கிழங்கு மற்றும் கிழங்கு அல்லாத வகைகளாகப் பரவலாகப் பிரிக்கலாம். சோலானம் வையாரம் என்னும் இனம், இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இது, கிழங்கு அல்லாத வகையைச் சார்ந்தது. இயற்கையாக, சிக்கிம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரம் வரை தானாக விளைகிறது.

விளம்பரம்:


கண்டங்கத்தரிச் செடி 0.75-1.40 மீட்டர் உயரம் இருக்கும். செடியின் தண்டுப் பகுதியில் வளைந்த முட்கள் தோன்றும். செடிகள் தடிமனாக, அதிக கிளைகளுடன் இருக்கும். இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். இலைகளின் மேலும் கீழும் ரோமம் மற்றும் முட்கள் இருக்கும். ஒரு பூங்கொத்தில் 1-4 பூக்கள் தோன்றும். இந்தப் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். பழங்கள், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில், கோள வடிவத்தில் இருக்கும். பழங்களில் சோலாசோடின் அளவு 1.00-1.75 சதம் இருக்கும்.

சோலானம் காசியானம் தவிர, வேறு சில இனங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை. இவற்றின் பழங்களிலும் சோலாசோடின் அடங்கியுள்ளது.

கண்டங்கத்தரி இரகங்கள்

RRL-20-2: இந்தச் செடிகளின் வளர்ச்சி வீரியமாக இருக்கும். முனையில் 3-4 பழங்கள் இருக்கும். பழ மகசூல் எக்டருக்கு 6-7 டன்கள் கிடைக்கும். சோலாசோடின் மகசூல் 42-45 கிலோ கிடைக்கும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

RRL-GL-6: இந்த இரகம், முள் இல்லாத பிறழ் மரபணு வகையாகும். ஏறக்குறைய, RRL-20-6 இரகத்தின் பண்புகளைக் கொண்டது. எனினும், சோலாசோடின் அளவு பழங்களில் குறைவாக இருக்கும்.

அர்கா சஞ்சீவனி: இந்த வீரிய ஒட்டு இரகம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தால் வெளியிடப்பட்டது. இரு வேறு இரகங்களான கேலக்ஸோ பிறழ் மரபணு வகை மற்றும் பார்க் பிறழ் மரபணு வகையைக் கலந்து உருவாக்கப்பட்டது. இது, அடர் நடவு முறைக்கு ஏற்றது. செடிகளில் முட்கள் நிறைந்திருக்கும். பழ மகசூலும், சோலாசோடின் அளவும் (1.99%) மூன்று மடங்கு அதிகமாகக் கிடைக்கும்.

அர்கா மஹிமா: இந்த இரகம், நான்கு குறுமவகங்களை (டெட்ராப்ளாய்டு) கொண்டது. இதில், 2.88 சதம் சோலாசோடின் உள்ளது. செடிகளில் முட்கள் தோன்றாது. இந்த இரகம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது.

கேலக்ஸோ மியுடன்ட்: இது, பிறழ் மரபணுப் பயிர்ப்பெருக்க முறை மூலம் உருவாக்கப்பட்டது. செடிகளில் முட்கள் குறைவாகவே இருக்கும். இலைகளின் மேற்பரப்பில் நேராக வளர்ந்த முட்கள் இருக்கும். தண்டுப் பகுதியில் முட்கள் இருக்காது. பழ மகசூல் எக்டருக்கு 11.92 டன்னாகும்.

பார்க்-1 மியுடண்ட்: இது, உலர்ந்த விதைகளைக் காமா கதிர்வீச்சு செய்ததன் மூலம் வெளியிடப்பட்ட பிறழ் மரபணு இரகமாகும். அதிகப் பழ மகசூலைத் தரும். பழங்களில் கிளைகோல்கலாய்டு அதிகளவில் உள்ளது.

11HR 2A-11: செடிகளில் முட்கள் தோன்றாது. அடர் நடவு முறையில் அதிகப் பழ மகசூல் கிடைக்கும். சோலாசோடின் அளவு 2.5-3.0 சதம் இருக்கும்.

சோலானம் லேசிநியாடம்: இந்த இரகம், அயற் பண்புள்ள NH 88-12 என்னும் இரகத்திலிருந்து வெளியிடப்பட்டது. எக்டருக்கு 3.1-3.8 குவிண்டால் பழ மகசூலைத் தரும். இந்தப் பழங்களில் இருந்து 4.18 சதம் சோலாசோடின் மற்றும் இலைகளில் 1.74 சதம் சோலாசோடின் கிடைக்கும்.

நடவு

விதைகளை நேரடியாக வயலில் விதைக்கலாம். அல்லது நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யலாம். நாற்று உற்பத்திக்கு, பிப்ரவரி – மார்ச் காலத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். பத்து செ.மீ. இடைவெளியில் வரி அல்லது கோடுகளைக் கிழித்து விதைகளை விதைத்து மண்ணால் மூட வேண்டும். பின்பு, பாத்திகளில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க வேண்டும். முளைப்புத் திறனை அதிகப்படுத்த, 5 சதவீத நைட்ரிக் அமிலம் கொண்டு விதைகளின் தோலைச் செதுக்க வேண்டும்.

ஒரு எக்டர் பரப்புக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 1.25 கிலோ விதைகள் தேவைப்படும். ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் விதைகள் முளைக்கும். ஆறு இலைகளைக் கொண்ட, 4.5 வார வயதுள்ள நாற்றுகளை, ஈரப்பதம் நிறைந்த வயலில், 50×50 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். ஊடுபயிர் செய்வதற்கு 90×150 செ.மீ. இடைவெளி அவசியம். நிலத்தில் வேலை செய்வதற்கும் இது ஏதுவாக அமையும்.

நடவுக்குப் பிந்தய நேர்த்தி

ஒரு எக்டர் பரப்புக்கு, 100:60:40 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாகக் கொடுக்க வேண்டும். தழைச்சத்தை மூன்று பாகமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். தொடக்கக் காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். பின்பு, மானாவாரியாக சாகுபடி செய்யலாம். வறட்சி ஏற்பட்டால், பயிர் வளர்ச்சியும், பழ உற்பத்தியும் பாதிக்கப்படும். எனினும், சோலாசோடின் அளவு அதிகரிக்கும்.

அறுவடை

கண்டங்கத்தரியை அறுவடை செய்வது மிகவும் கடினமான செயலாகும். செடிகளில் முட்கள் இருப்பதால், பழங்களைப் பறிப்பது கடினமாகும். எனவே, கையுறை அணிந்து பழங்களைப் பறிக்க வேண்டும். சரியான பழ முதிர்ச்சியில் அறுவடை செய்வது அவசியம். பழ வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் சோலாசோடின் அளவு வெகுவாக அதிகரிக்கும். பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும் போது சோலாசோடின் அதிகமாக இருப்பதால், இந்த நிற மாற்றமே அறுவடை செய்வதற்கு ஏற்ற சரியான குறியீடு என்று கூறலாம்.

பழங்களில் சோலாசோடின் அளவு 70-75 சதவீதம் இருக்கும். இதில், 60 சதவீதம் விதைகளிலும், மீதமுள்ள 40 சதவீதம் பழத்தோலிலும் இருக்கும். பழங்களில் நீர்ச்சத்து 70-75 சதவீதம் இருப்பதால், அறுவடை செய்ததும் உலர்த்த வேண்டும். வேகமாக உலர்த்தினால், சோலாசோடின் அளவைத் தக்க வைத்துக் கொள்ளலாம். விரைவாக உலர்த்தவும், நன்கு நிறமளிக்கவும், பழங்களை இரண்டாக நறுக்கி, தரையில் பரப்பி விட வேண்டும்.

உலர்ந்த பழங்கள் வெடிக்கும் சத்தத்தைக் கொடுக்கும் போது, அவற்றைப் பைகளில் சிப்பமிட வேண்டும். உலர்ந்த பழங்களில் 10-12 சதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்கக் கூடாது. அதைப் போல, சோலாசோடின் அளவும் 2 சதத்துக்குக் கீழே இருக்கக் கூடாது.


முனைவர் எம்.இ.மணிவண்ணன், இணைப் பேராசிரியர், தோட்டக்கலைத் துறை, வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிக்குளம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


படிக்கலாம்:

  • மண்புழு உரம்: எப்படிச் சேமிக்க வேண்டும்?

  • புதினா சாகுபடி!

  • மானாவாரி சாகுபடி உத்திகள்!

  • விதை நேர்த்தி செய்தால் விளைச்சலைப் பெருக்கலாம்!

  • பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

  • கோழிப் பண்ணைகளில் எச்சத்தை உரமாக்கும் முறைகள்!

  • கோடை உழவும் சிறப்புகளும்!

  • இருமடங்கு இலாபம் தரும் அடர்நடவு மா சாகுபடி!

  • சிறு மக்காச்சோள சாகுபடி!