My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900


சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!

மிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப்பட்டம் ஆகும். இதில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெல்லை விதைத்து ஜனவரி பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் பயிரிடப் படுகின்றன. பெரும்பாலும் 150-160 நாட்கள் வயதுள்ள இரகங்களே இப்பருவத்திற்கு உகந்தவை. இப்பருவம், வானம் பார்த்த பூமி எனப்படும் மானாவாரியில் பயிரிடுவதற்கு ஏற்றது.

தென்மேற்குப் பருவமழையைப் பயன்படுத்தி, நாற்றுப் பருவத்தைப் பராமரித்து, ஐப்பசி, கார்த்திகை அல்லது அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழையைக் கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900


இப்பருவத்தில், நீண்டகால இரகங்களான ஏ.டி.டீ. 44, பொன்மணி (சி.ஆர்.1009), சி.ஆர். 1009 சப்1, பி.பி.டி. 5204, பி.ஒய். 4 (ஜவகர்) மற்றும் ஏ.டி.டீ. 51 ஆகியன அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஏ.டி.டீ. 44

இந்த நெல் இரகமானது 150 நாட்கள் வயதை உடையது. எக்டருக்குச் சராசரியாக 6,500 கிலோ மகசூலைக் கொடுக்கவல்லது. ஆயிரம் தானிய மணிகளின் எடை 23.9 கிராம் இருக்கும். தானியம் தடித்த குண்டு வடிவில் இருக்கும். அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். பயிர் நடுத்தர உயரத்தில் இருக்கும். குலை நோய், பச்சைத் தத்துப்பூச்சி, தண்டுத் துளைப்பான், பழுப்புப்புள்ளி நோய் மற்றும் இலை மடக்குப்புழு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.

பொன்மணி (சி.ஆர். 1009)

இந்த இரகத்தின் வயதானது 155-160 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 5,300 கிலோ மகசூலைக் கொடுக்க வல்லது. ஆயிரம் தானிய மணிகளின் எடை 23.5 கிராம் இருக்கும். தானியம் தடித்த குண்டு வடிவில் இருக்கும். அரிசி வெள்ளை நிறத்தில் இருக்கும். பயிர் நீண்டு வளரும். புகையானுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.

சி.ஆர். 1009 சப் 1

இந்த இரகமானது, மரபுக் குறியீட்டைப் பயன்படுத்தி, பயிர் இனப்பெருக்க முறைகளில் தேர்வு செய்யப்பட்டது. இது, நடவு செய்து 15 நாட்கள் வரை நீரில் மூழ்கினாலும் தாங்கி வளரக்கூடிய திறன் மிக்கது. அதிகமாக விளைச்சலைத் தரவல்ல நீண்ட கால இரகம். வயது 151 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 5,759 கிலோ மகசூலைத் தரவல்லது. இலைப்புள்ளி நோய், குலை நோய், புகையான், வெண்முதுகுத் தத்துப்பூச்சி ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது,

அரிசி, குட்டை மற்றும் பருமனாக இருக்கும். அதிக அரவைத் திறனும் முழு அரிசி காணும் திறனும் கொண்டது. மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், இட்லி தயாரிப்புக்கு மிகச் சிறந்தது. தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்கும், ஏனைய நீண்ட கால இரகங்களைப் சாகுபடி செய்யும் பகுதிகளுக்கும் ஏற்றது. இந்த இரகம், சி.ஆர். 1009 நெல் இரகத்திற்கு மாற்றாகப் பயிரிட ஏற்றது.

பி.பி.டி. 5204

ஆந்திரப்பொன்னி, சம்பா மசூரி என்று அழைக்கப்படும், இந்த பி.பி.டி 5204 நெல் இரகத்தின் வயது 150 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 6,000 கிலோ தானியத்தைக் கொடுக்க வல்லது. நடுத்தரச் சன்ன இரகம். நடுத்தரக் குட்டைப் பயிர். அரிசி வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டுக்கு சிறந்த இரகம். குலை நோயைத் தாங்கி வளரும். மானாவாரி தாழ்நிலங்களுக்கு ஏற்ற இரகம்.

பி.ஒய். 4 (ஜவகர்)

இந்த இரகத்தின் வயது 150 நாட்கள். எக்டருக்குச் சராசரியாக 6,600 கிலோ மகசூலைத் தரவல்லது. ஆயிரம் தானிய மணிகளின் எடை 24.8 கிராம் இருக்கும். நெல் நீண்டும் பருத்தும் இருக்கும். அரிசி வெள்ளையாக இருக்கும். பயிர் நீண்டு வளரும். பாக்டீரிய இலைக்கருகல், பழுப்பு இலைப்புள்ளி, தூங்ரோ வைரஸ், இலையுறை அழுகல், இலை மடக்குப்புழு, தண்டுத் துளைப்பான் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.

ஏ.டி.டீ. 51

இந்த இரகத்தின் வயது 155-160 நாட்கள். பி.பி.டி. 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னியின் கலப்பிலிருந்து உருவாக்கப்பட்ட புதிய இரகம். இதன் நெல் மணி நீண்டு சன்னமாக இருக்கும். சாப்பாட்டுக்கு ஏற்ற இரகம். எக்டருக்கு 6,500 முதல் 7,000 கிலோ வரை மகசூலைத் தரவல்லது. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தாங்கி வளரும். பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படாது. 70.3% அரவைத் திறன் மிக்கது. இந்த இரகம், சம்பா பருவத்தில் அதிகமாகப் பயிர் செய்யப்படும். சி.ஆர். 1009 இரக நெல்லுக்கு மாற்றுப் பயிராக இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


முனைவர் அ.கோபிகிருஷ்ணன், முனைவர் பு.திலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!