மக்காச்சோளத்தில் மகசூல் பாதிப்பை உண்டாக்கும் படைப்புழுவின் (Fall army worm- Spodoptera frugiperda) தாக்குதல் மிகுந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 எக்டர் பரப்பில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எனவே, இப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, இதனால் தாக்கப்படும் பயிர்கள் மற்றும் மேலாண்மை முறைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
தாக்கும் பயிர்கள்
இந்தப் படைப்புழு சுமார் எண்பது வகையான பயிர்களைத் தாக்குகிறது. மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம், சோளம் மற்றும் புல் வகைக் களைகளில், இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
வாழ்க்கைச் சுழற்சி
தட்பவெப்பநிலை சராசரியாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது, படைப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி 30 நாட்களில் முடிந்து விடும். குளிர் காலத்தில் ஒரு வாழ்க்கைச் சுழற்சி முடிய, 60 முதல் 90 நாட்கள் வரை ஆகும். நன்றாகப் பறக்கும் திறனுள்ள பெண் தாய் அந்துப்பூச்சி, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்று பாதிப்பை உண்டாக்கும்.
முட்டைப் பருவம்
ஒரு குவியலில் 100 முதல் 200 முட்டைகள் வரை இருக்கும். ஒரு தாய் அந்துப்பூச்சி, 1,500 முதல் 2,000 முட்டைகள் வரை இடும். மேலும், முட்டைகளைப் பாதுகாக்கும் வகையில், அந்த முட்டைகளின் மேல், வெள்ளை அல்லது ஊதாநிறச் செதில்களை இட்டு வைக்கும்.
புழுப் பருவம்
படைப்புழுக்கள் ஆறு புழு நிலைகளைக் கொண்டவை. இளம் புழுப்பருவம், கறுப்புத் தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும்.
கூட்டுப்புழு
பெரும்பாலும் படைப்புழுக்கள், மண்ணில் 2-8 செ.மீ. ஆழத்தில் கூட்டுப் புழுக்களாக மாறும்.
பாதிப்பு அறிகுறிகள்
» தாய் அந்துப்பூச்சி 100-200 முட்டைகளைக் கொண்ட குவியல்களை, இலையின் அடிப்பகுதியில் இடும்.
» முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், இலைகளின் அடிப்பகுதியைச் சுரண்டிச் சேதத்தை ஏற்படுத்தும்.
» இதனால், இலைகள் பச்சையத்தை இழந்து வெள்ளையாக மாறி விடும்.
» இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி, இவற்றின் மூலம் காற்றின் திசையில், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்குச் செல்லும்.
» இளம் பயிர்களில், இலை உறைகளையும், முதிர்ந்த பயிரில் கதிரின் நூலிழைகளையும் அதிகளவில் சேதம் செய்யும்.
» இரவு நேரத்தில் அதிகளவில் சேதத்தை விளைவிக்கும்.
» மூன்றாம் நிலை புழுக்கள் முதல் ஆறாம் நிலை வரையிலான புழுக்கள், இலை உறைக்குள் சென்று பாதிப்பை உண்டாக்கும். இதனால், இலைகள் விரியும் போது, அவற்றில் துளைகள் வரிசையாகத் தென்படும்.
மேலாண்மை
» உழவு செய்வதன் மூலம், மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்க இயலும்.
» மண்வளம் மற்றும் ஈரப்பதத்தைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். தழைச்சத்தை அதிகளவில் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
» விதைநேர்த்தி செய்வதன் மூலம், தொடக்கநிலைப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
» காலம் தாழ்த்திப் பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பகுதியில் இருக்கும் விவசாயிகள், ஒரே சமயத்தில் பயிர் செய்வது நல்லது.
» பருவம் தாழ்த்திப் பயிர் செய்தால், அதிகளவில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது.
» மேலும், பல்வேறு நிலைகளில் மக்காச்சோளம் இருந்தால், புழுக்களுக்கு உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும். எனவே, இத்தகைய சூழலைத் தவிர்க்க வேண்டும்.
» முதல் மழையிலேயே, மக்காச்சோளத்தை நட்டு விட்டால், படைப்புழுவின் பாதிப்பைக் குறைக்க இயலும்.
» வயலைச் சுற்றி, பயறு வகைகள், மரப்பயிர்கள் அல்லது ஆண்டு முழுவதும் பூக்கும் தாவரங்களைத் தடுப்புப் பயிராக வளர்க்கலாம். இவை, படைப்புழுக்களைத் தாக்கும் இயற்கை எதிரிகளை ஊக்குவிக்கும்.
» வயலைச் சுற்றி நேப்பியர் புல்லை வரப்புப் பயிராக நடுவதன் மூலம், தாய் அந்துப் பூச்சிகளை, நேப்பியர் புல்லில் முட்டைகளை வைக்கச் செய்யலாம். நேப்பியர் புல்லில் குறைந்தளவில் சத்துகள் இருப்பதால், முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள், வளர்ச்சிக் குன்றி இறந்து விடும்.
» வேலிமசாலை, மக்காச்சோளத்தில் ஊடுபயிராக இடலாம். வேலிமசாலில் இருந்து வெளிவரும் திரவங்கள் படைப்புழுக்களுக்கு உகந்தவை அல்ல. எனவே, படைப்புழுக்கள் கட்டுப்படும்.
» படைப்புழுக்கள் அதிகளவில் விரும்பாத, மரவள்ளி அல்லது பீன்சை, மக்காச்சோள நிலத்தில் ஊடுபயிராக இடலாம்.
» குறுகிய கால மக்காச்சோள இரகங்களைப் பயிரிடுவதன் மூலம், படைப்புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
» வயலைச் சுற்றிக் களைகள் இருக்கக் கூடாது.
» முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் குழுவாக இருக்கும் என்பதால், இந்தச் சமயத்தில் இவற்றை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.
» முட்டை ஒட்டுண்ணிகளான, டிரைக்கோ கிரம்மா, டிலினோமஸ்ரீமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணிகளான, செலோனிஸ், கொடிசியா போன்றவற்றின் மூலம், படைப்புழுக்களின் பாதிப்பைக் குறைக்கலாம்.
» புள்ளி வண்டு, தரை வண்டு மற்றும் பூச்சிகள் (flower bugs) போன்றவை, படைப்புழுக்களை உணவாகக் கொள்ளும். எனவே, பூக்கும் பயிர்களைப் பயிரிடுவதன் மூலம், புள்ளி வண்டுகள், தரை வண்டுகளின் உற்பத்தியைப் பெருக்கலாம்.
» நுண்ணுயிர்ப் பூச்சிக்கொல்லிகளான, பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனசோபிலியே மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் மூலம், படைப்புழுக்களின் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
» இயற்கை ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தும் போது, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தக் கூடாது.
» பாதிப்பு அதிகமாகும் போது, ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் அல்லது 2 மி.லி. தயோமீதாக்சம் 12.6 % + லாம்டா சைக்லோதிரின் 9.5% அல்லது 0.5 மி.லி. ஸ்பைனோசாட் அல்லது 0.3 மி.லி. குளோரன்ட்ரோனி லிப்ளோர் அல்லது 1 மி.லி. இன்டாக்சோகார்ப் அல்லது 0.4 மி.லி. எமாமெக்டின் பென்சோயேட் வீதம் தெளித்து, படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
டாக்டர். எஸ். ஸ்ரீவர புத்தி புவனேஸ்வரி, இணைப் பேராசிரியர் – வேளாண் விரிவாக்கம், அடிப்படை மற்றும் சமூக அறிவியல் துறை, வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301