கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன.
கற்றாழையில் பொதுவாக, அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. சாற்றில் ஆந்த்ரோ குயினோன்கள் (Anthraquinones) ரெசின்கள் (Resins), பாலிசாச்சரைடு (Polysaccharide) போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.
தளிர் பச்சை, இளம் பச்சை மற்றும் கரும்பச்சை எனப் பலவிதமாக இருந்தாலும், முதிர்ந்த மடல்கள் தான் மருத்துவத் தன்மை மிக்கவை. இதிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் திரவம், மூசாம்பரம் எனப்படும். இதற்கு, கரியபோளம், கரியபவளம், காசுக்கட்டி எனப் பல பெயர்கள் உள்ளன.
அழகுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படும் கற்றாழையின் சதைப் பகுதியை, 7-10 முறை நீரில் கழுவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும். இந்த ஜெல், வெய்யிலில் கலந்து வந்து கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமாக்கதிர் மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் பாதிப்பிலிருந்து, சருமத்தைக் காக்கும். சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.
கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்குத் தீர்வைத் தரக்கூடியது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், உடலிலுள்ள நச்சுகள் முழுமையாக வெளியேறி விடும். இதனால், உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில், உடல் நலம் மேம்படவும் உதவும். மாதவிடாய்ச் சிக்கல் சரியாகும். மேலும், மலச்சிக்கல், உடல் வெப்பம், வயிற்றுக் கோளாறுகளும் சரியாகும்.
கற்றாழைக்கூழ், இரைப்பை குடல் கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். இரைப்பை- உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயாளர்கள், நெஞ்செரிச்சல், வாய்வு, குமட்டல், வாந்தி, அமிலம் மீளுருத்தல் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு இது சரியான மருந்தாக அமைகிறது. கற்றாழைக்கூழ் செரிமானச் செயலை மேம்படுத்தும். செரிமான மண்டலம் சுத்தமாகவும் உதவுகிறது.
கற்றாழை, நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும். இதை உணவில் சேர்த்துக் கொண்டால், உடம்பிலுள்ள ஒரு சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் போன்றவை அழியும். இது, ஒவ்வாமை எதிர்ப்பியாகச் செயல்படுவதால், வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
ஈறுகளில் இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புள்ள கற்றாழை, நமது ஈறுகளில் உள்ள பிளேக்குகளைக் குறைக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கற்றாழை, இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. சர்க்கரை மற்றும் தேனைச் சேர்க்காமல், கற்றாழைச் சாற்றைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும்.

முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ, முனைவர் கே.குருசாமி, முனைவர் எம்.ஆனந்த், முனைவர் ஜி.அமுதசெல்வி, உணவுப் பதனப் பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



