பயிர்களின் எண்ணிக்கையைக் கூட்டி, இயந்திரம் மூலம் ஒரே தடவையில் அறுவடை செய்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதே அடர் நடவு பருத்தி சாகுபடியின் நோக்கமாகும்.
பயன்கள்
+ இம்முறையில், செடிக்குச் செடி இடைவெளியை 30 செ.மீ.லிருந்து 10 ஆகக் குறைக்கப்படும்.
+ வரிசைக்கு வரிசை 90/75/60 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளி விடப்படும்.
+ இதன் மூலம், ஒரு ஏக்கரின் பயிர் எண்ணிக்கையை 44,400 முதல் 66,400 ஆகக் கூட்டலாம்.
+ இதனால், 20 முதல் 40 சதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.
இரகங்கள்
அஞ்சலி, சூரஜ், கோ.17, வி.பி.டி.2. ஆகிய இரகங்கள், அடர் நடவு பருத்தி சாகுபடிக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
+ பார் சால் முறை அல்லது உயர் படுக்கை முறையில் நிலத்தைத் தயாரிக்க வேண்டும்.
+ அடுத்து, வளமற்ற மற்றும் மண்ணின் ஆழம் குறைவான நிலத்தில், 60×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
+ நடுத்த வளம் மற்றும் மத்திய மண் கண்டம் உள்ள நிலத்தில், 75×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
+ அதிக வளம் மற்றும் மண் கண்டம் ஆழமாக உள்ள நிலத்தில், 90×10 செ.மீ. இடைவெளியைக் கையாள வேண்டும்.
உர நிர்வாகம்
+ ஏக்கருக்கு, 30:15:15 கிலோ வீதம், தழை, மணி, சாம்பல் சத்து உரங்களை இட வேண்டும்.
+ இந்த உரங்களில், பாதியளவு தழைச்சத்தையும், மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.
+ மீதமுள்ள பாதியளவு மணிச்சத்தை நடவு முடிந்து 40-45 நாளில் மேலுரமாக இட வேண்டும்.
+ காய்கள் பருமனாக உருவாக, 2 சதவீத டி.ஏ.பி.கரைசலை, 45 மற்றும் 75 நாட்களில் பயிர்களில் தெளிக்க வேண்டும்.
+ 2 சதவீதக் கரைசல் கரைசல் கிடைக்க, நான்கு கிலோ டி.ஏ.பி. உரத்தை 200 லிட்டர் நீரில் கலக்க வேண்டும்.
நுனிக்கிள்ளுதல்
+ இரகச் செடிகள் எனில், 75-80 நாளில் செடிகளின் 15-ஆம் கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும்.
+ ஒட்டு இரகச் செடிகள் எனில், 85-90 நாளில் 20-ஆம் கணுவில் தண்டின் நுனியை 10 செ.மீ. அளவில் கிள்ளி விட வேண்டும்.
+ இதனால் பக்கக் கிளைகளும், அவற்றில் பூக்களும் காய்களும் அதிகமாக உருவாகி, ஒரே தடவையில் அறுவடை ஏதுவாகும்.
அரசின் உதவிகள்
பலன் தரும் பருத்தி சாகுபடி: இந்தத் திட்டத்தின் கீழ், அடர் நடவு பருத்தி சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1,960 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
+ வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த பூச்சி, நோய் மேலாண்மைக்கு, ஏக்கருக்கு 1,680 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
+ ஒருங்கிணைந்த சத்துத் தொகுப்புகள் 50 சதவீத மானியமாக, ஏக்கருக்கு 560 ரூபாய் வழங்கப்படும்.
+ டிரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதற்கு 50 சதவீத வாடகைக் கட்டணமாக 500 ரூபாய் வழங்கப்படும்.
உணவு மற்றும் சத்துப் பாதுகாப்பு இயக்கம்- பருத்தி: இந்தத் திட்டத்தின் கீழ், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
+ பருத்தியில் பயறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யும் வகையில், முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 3,200 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
+ அடர் நடவு சாகுபடி குறித்த முன்னோடி செயல் விளக்கங்களை அமைக்க, ஏக்கருக்கு 4,000 ரூபாய் மதிப்பிலான இடுபொருள்கள் வழங்கப்படும்.
+ உயிரி கட்டுப்பாட்டுக் காரணிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அல்லது ஏக்கருக்கு 200 ரூபாய் வழங்கப்படும்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்- பருத்தி: இந்தத் திட்டத்தின் கீழ், மிக நீண்ட இழைப் பருத்தி மற்றும் இதர பருத்தி இரகங்களில் விதை உற்பத்தியை ஊக்கப்படுத்த, 25 சதவீத மானியம் அல்லது கிலோவுக்கு 70 ரூபாய் வழங்கப்படும்.
+ மிக நீண்ட இழைப் பருத்தி மற்றும் இதர பருத்தி இரக விதைகள் 50 சதவீத மானியத்தில், அதாவது, அதிகபட்சமாக, கிலோவுக்கு 140 ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.
+ ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ஊடுபயிருக்கான சான்றளிக்கப்பட்ட பயறு வகைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அல்லது ஏக்கருக்கு 200 ரூபாய் வழங்கப்படும்.
+ நுனிக்கிள்ளும் ஆள் கூலியாக ஏக்கருக்கு 400 ரூபாய் வழங்கப்படும்.
+ மேலும் விவரங்களை அறிய, வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிப் பயன் பெறலாம்.
வேளாண்மைத் துறை, தமிழ்நாடு அரசு.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



