களர், உவர் நிலங்களில் நன்றாகப் பயிர் விளையும் சூழ்நிலையை உருவாக்க வேண்டிய சீர்திருத்த முறைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
முதலில் உவர் நிலங்களை எடுத்துக் கொள்வோம். உவர் நிலங்களைச் சீர்திருத்துவதன் அடிப்படை நோக்கம், மண்ணின் வேர்ப் பாகத்தில் அமைந்துள்ள உப்புகளை வெளியேற்றுவது ஆகும். ஆகவே, உவர் நிலப்பகுதியைச் சரிவுக்கேற்பச் சமன்படுத்தி, சிறுசிறு பாத்திகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். திடமான உயரமான வரப்புகளை அமைக்க வேண்டும். மூல வடிகால் நிலையை உருவாக்க வேண்டும். வடிகால் நல்ல ஆழமாக இருந்தால் நல்லது. 2 அல்லது 2.5 அடி ஆழம், 2 அடி அகலம் இருப்பது நல்லது. பிறகு, ஒவ்வொரு வயலையும் ஆழமாக உழுது தண்ணீர் உட்புறமாக வடிவதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
பிறகு, மழைநீரையோ, வாய்க்கால் நீரையோ, நல்ல கிணற்று நீரையோ, ஒவ்வொரு பாத்தியிலும் தாராளமாகத் தேங்கி நிற்கும் வரை பாய்ச்ச வேண்டும். பின்பு, நெல்லுக்குச் செய்வதைப் போல் சேற்று உழவு செய்ய வேண்டும். நான்கைந்து நாட்கள் தண்ணீர் தேங்கியபடி இருக்க வேண்டும். தண்ணீர் எவ்வளவுக் கெவ்வளவு மண்ணில் ஊடுருவிச் செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு உப்புத் தன்மை குறையும்.
தேங்கி நிற்கும் நீரை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மேற்புற வடிகால் மூலம் வெளியேற்றலாம். இப்படிச் செய்தால், மண்ணின் வேர்ப்பாகத்தில் அமைந்துள்ள உப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும். நல்ல நீரைத் தேக்கி வைத்தலும் உட்புற மேற்புறச் சீர்திருத்துவதன் அடிப்படைத் தேவைகளாகும். நாம் மனதில் முக்கியமாகக் கொள்ள வேண்டியது, உவர் நிலத்தில் ஜிப்சம் இட வேண்டியதில்லை. திறம்பட வடிகால்களை அமைத்து மண்ணிலுள்ள உப்புகளை நீரில் கரைத்து வெளியேற்ற வேண்டும்.
இப்போது களர் நிலங்களைப் பற்றிப் பார்க்கலாம். களர் மண்ணில் பௌதிகக் குணங்கள் சரியாக அமைவதில்லை. சோடிய நச்சுத்தன்மை ஏற்படும். சத்துப் பற்றாக்குறை இருக்கும். முக்கியமாக, நுண் சத்துக்கள் செடிகளுக்குப் போதுமான அளவில் கிடைப்பதில்லை.
மேற்கண்ட குறைகள், களிமண் மீது சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்து விட்டாலும், மண்ணில் சோடியம் கார்பனேட், பைகார்பனேட் உப்புகள் இருப்பதாலும் ஏற்படும். எனவே, சீர்திருத்தத்தின் அடிப்படைத் தத்துவம், களிமண் மீது படிந்திருக்கும் சோடிய அயனிகளை விடுவித்து, வடிகால் வசதியைத் திறம்பட அமைத்து மண்ணிலிருந்து வெளியேற்றல் ஆகும். களர் நிலச் சீர்திருத்தம் குறித்து, களர் உவர் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் சீர்திருத்தம் செய்யும் முறைகளைப் பார்ப்போம்.
+ முதலில் களர் நிலத்தைச் சரிவுக்கேற்ப சமப்படுத்த வேண்டும். சிறுசிறு பாத்திகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
+ பின்பு, கெட்டியான, உயரமான வரப்புகளை அமைக்க வேண்டும்.
+ ஒவ்வொரு பாத்தியிலும் இருக்கும் நீர் ஒரேபுறம் வடியும் வகையில், கிளை வடிகால்களையும் மூல வடிகால்களையும் அமைக்க வேண்டும்.
+ நான்கைந்து வயல்களிலிருந்து மண் மாதிரிகளை எடுத்து ஒன்றாக்கி முறைப்படி மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து, கார அமில நிலை, ஜிப்சம் இட வேண்டிய அளவு, மின் கடத்தும் திறன் ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும்.
+ ஈரப்பதத்தில் ஒவ்வொரு வயலையும் ஆழமாக உழ வேண்டும். மண்ணின் அடியில் சில சமயங்களில் கடினமான பகுதி இருக்கக் கூடும். அப்படி இருந்தால் அதைக் கனமான இரும்புக் கலப்பை மூலம் உழ வேண்டும்.
+ ஒவ்வொரு பாத்தியையும் மேடுபள்ளம் இல்லாமல் நீரைப் பாய்ச்ச வசதியாகச் சேற்றுழவு செய்ய வேண்டும். நெல்லுக்குச் சேறடிப்பது போல் உழ வேண்டும்.
+ பிறகு தேவைக்கேற்பக் கணக்கிடப்பட்ட ஜிப்சத்தைச் சீராக ஒவ்வொரு வயலிலும் தூவி மரக் கலப்பையால் மண்ணை மேலாகக் கலக்க வேண்டும். மண்ணை மேலாக மட்டுமே உழுவது மிக முக்கியம்.
+ நான்கைந்து அங்குல உயரம் நீரைப் பாய்ச்சி உழுது அப்படியே நீரைத் தேக்க வேண்டும். இதனால், களிமண் மீதமுள்ள சோடிய அயனிகள் சுண்ணக அயனிகளால் மாற்றப்பட்டு, சோடிய சல்பேட் உப்புகளாக மாறி விடும்.
+ நீர் உட்புறமாக மண்ணின் ஊடே வடிந்து வெளியேறும். முழுதும் வடிந்த பிறகு மறுபடியும் புதுத் தண்ணீரைப் பாய்ச்சி மீண்டும் 3-4 நாட்கள் தேக்கி வைக்க வேண்டும். இதுமாதிரி 3-4 முறை புதுத் தண்ணீர்ப் பாய்ச்சலையும் வடித்தலையும் செய்ய வேண்டும்.
+ பின்பு, மண்ணைக் காய விடாமல் தழையைப் போட்டு மிதிக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 5 டன்னுக்கு குறையாமல் தழையைப் போட்டு மிதிக்க வேண்டும். வாதாமுடக்கி இலை, வேப்ப இலை, சவுக்குக் கழிவு, எருக்கந்தழை, டெயின்ச்சா, நெல் உமி ஆகியன சிறந்தவை. குறிப்பிட்ட களர் மண்ணுக்குப் பரிசோதனையின் மூலம் கண்டறிய்பபடும் ஜிப்சம் இட வேண்டிய முழு அளவில் பாதியளவு போட்டால் போதுமானது.
+ நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல், நெல் நாற்றுகளை நட்டு, அடியுரம், மேலுரம் இட்டு, புழு, பூசணத்தைக் கட்டுப்படுத்தி, நெல் விவசாயம் மேற்கொள்ளலாம்.
+ இதில், ஜிப்சம் இடுதலும், வடிகால் அமைத்தலும் ஒருங்கே அமைதல் வேண்டும். ஜிப்சம் குறைவாக இடுவதும், வடிகால் சரியாக அமையாமல் இருப்பதும், பாதிக் கிணற்றைத் தாண்டும் கதையாக அமையும்.
உங்களது தோட்டத்து மண் பிரச்சனைக்கு உரியதாகத் தென்பட்டால் உடனே உங்கள் மாவட்டத்திலுள்ள மண் ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அந்தப் பரிசோதனை பரிந்துரைப்படி சீர்திருத்தம் செய்யுங்கள்.

முனைவர் தா.ஷெரின் ஜெனிதா ராஜம்மாள், இணைப் பேராசிரியர் – மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027.



