செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச்.
நாரத்தை (citrus aurantium) எலுமிச்சைத் தாவரவகை இனமாகும். இது பெருஞ் செடியாயினும் சிறுமர வகுப்பைச் சார்ந்ததாகும். 20-25 அடி உயரம் வரை வளரும்.
நாரத்தை, சீனாவிலிருந்து போர்த்துக்கீசிய மக்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆயினும், இந்திய தட்ப வெப்பம் மற்றும் நிலவள நிலைகளைத் தனதாக்கிச் செழித்து வளர்கிறது. குறிப்பாக, ஆந்திரம், மைசூரு, குடகு, நீலகிரி, வடக்கே சிம்லா, காசுமீர் ஆகிய மலைப் பகுதிகளில் நாரத்தைச் சிறப்பாக வளர்ந்து வருகிறது.
மணமுள்ள இதன் இலைகள், பசுமை கலந்த வெண்மையான இளம் கொம்புகளிடையே, கோள வடிவில் மூன்றில் இருந்து ஆறு அங்குல நீளத்தில் அகலமாக இருக்கும். மலர்கள் தூய வெண்மையாக இருக்கும். காய்கள், உருண்டையாக, தடித்த தோலுடன், புளிப்புச் சுவையில், முட்களுக்கு இடையில் இருக்கும். மஞ்சள் கலந்த சிவப்பு நாரத்தைக் காய்கள், இரண்டு அங்குல விட்டமுள்ள அளவில் இருக்கும்.
கொழுஞ்சிப் பழம், போசன கஸ்தூரி, கிச்சிலி ஆகியன நாரத்தைக் காயின் வேறு பெயர்களாகும். நாரத்தையில் உள்ள கிச்சிலி நாரத்தை, துறிஞ்சி, கிடாரங்காய், கொழுஞ்சி ஆகியன பயனுள்ளவை. இன்னும், பப்ளிமாசு, கமலா, சாத்துக்குடி எனப் பல பிரிவுகளில் சிறிதும் பெரிதுமாக இருக்கும். குட்டிக் கிச்சிலி என்னும் வகையும் நாரத்தையில் உண்டு.
குளிர், மழை ஆகிய காலநிலை மாறுபாடு, மண் மாறுபாடு எனப் பல்வேறு சூழ்நிலையில் வளரும் நாரத்தையின் காய், கனிகள், அமைப்பு, சுவை போன்றவற்றில் இதன் தனித்தன்மையைக் காணலாம். நாரத்தையில் மொத்தம் பதினாறு வகைகள் உள்ளன. ஆனாலும், புளிப்பு, தித்திப்பு, கசப்பு என்னும் சுவை வேற்றுமைகள், தடித்த தோல்வகை, மெல்லிய தோல்வகை, சுளைகளின் அமைப்பிலான வகை, விதை உள்ள மற்றும் இல்லாதவை எனப் பல்வேறு குணங்களை நாரத்தைக் கொண்டுள்ளது.
மேலும், புளிப்பும் கசப்பும் கலந்தது, இனிப்புக் கலந்த புளிப்பு, தனிப்புளிப்பு ஆகிய முக்குணங்கள் இருப்பினும், புளிப்பு, இனிப்பு என்னும் இரு பிரிவில் நாரத்தையின் இனங்கள் அடங்கும். புளிப்பான நாரத்தையை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். உணவு எளிதாகச் செரித்த பிறகும், தனது இயல்பான மணத்தை ஏப்பமாக வெளிப்படுத்தும்.
சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைத்து, வாயுவை நீக்கி, எருவை இளக்கி இயல்பாக வெளியேற்றும். நாக்கு, இரைப்பை, குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்களைத் தூண்டத் துணையாய் இருக்கும்.
இப்படிச் செய்வதால், மேல் வயிற்றுக் கனம், இதய அழுத்தம் ஆகியன குறையும். நாவறட்சி, கண்ணெரிச்சல், தலைச்சுற்றல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும் நாரத்தை, சுவையான உணவாகவும் இருந்து பெரிதும் பங்காற்றும். இதைக் காலையில், வெறும் வயிற்றில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். புளிப்பை முற்றிலும் நீக்கத்தக்க நிலையில் உள்ளவர்கள் நாரத்தையைத் தவிர்த்தல் நல்லது.
துருஞ்சி நாரத்தைப் பழச்சாறுடன் சர்க்கரையைக் கலந்து தயாரிக்கும் துருஞ்சி மணப்பாகு, கருவுற்றுள்ள தாய்மார்களின் காலை உமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், அசதி ஆகியவற்றைக் குறைக்கும். இந்த எளிய தயாரிப்பு, நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
பிணிக்கு நாரத்தை
நாரத்தைப் பூவிலிருந்து தேநீரை வடித்துச் கொஞ்சமாக அகமருந்தாகச் சாப்பிட்டால், உடல்வலி நீங்கும். சில மருந்துகளுடன் நாரத்தைத் தேநீரைச் சேர்த்தால், அந்த மருந்தின் திறன் கூடும். ஜாதி நாரத்தை, புளிப்பு நாரத்தை ஆகியவற்றில் ஒன்றின் இலைகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து, உப்பைக் கலந்து இடித்து வைத்துக் கொண்டு, ஊறுகாயாகப் பயன்படுத்துவது உண்டு.
வயிற்றில் கீரைப்பூச்சி, கிருமி உள்ளவர்களுக்கு, இந்தப் பொடியுடன், வேப்பிலைக் கொழுந்தைச் சேர்த்துக் கொடுப்பர். இதில், வேப்பிலையின் கசப்பு நீங்கும். இந்த மருந்தானது பின்னாளில், வேப்பிலைக் கட்டி என்றானது. காய்களில் உப்பிட்டு ஊறுகாயாகப் பயன்படுத்தினால், இரத்தம் சுத்தமாகும். மலக்கிருமிகள் அழியும். நோய்கள் அகலும்.
குறிப்பாக, காய்ச்சல் விட்டதும் உண்ணும் எளிய உணவுடன், நாரத்தை ஊறுகாயைச் சேர்த்து உண்டால், நோயினால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். சுவையை உணர முடியாதபடி நாக்கானது தடித்தோ, மரத்தோ இருக்கும் போது, நாரத்தை ஊறுகாயைச் சேர்த்து உண்டால், உணவின் மீது விருப்பம் கூடும்.
சிறு குழந்தைகளுக்குப் பாலுடன், இனிப்பு நாரத்தைப் பழச்சாறு அல்லது பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாற்றைக் கலந்து கொடுத்தால், சோகை, கணை, உட்சூடு, மாந்தம் ஆகியன நீங்கிக் குடல் வலுவாகும். இதைத் தினமும் காலை மாலையில் இரண்டு சங்களவில் தருவர். நாரத்தை விதைப் பருப்பைத் தொடர்ந்து தின்று வந்தால், பாம்புக்கடி நஞ்சு படிப்படியாக இறங்கும்.
பசிக்கு விருந்தாகும் நோய்க்கு மருந்தாகும்
உடலுக்கு உரமாகும் நாரத்தையே நீவாழி!
மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர், செங்கல்பட்டு.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.