பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா?

பூனை முக்கியமான செல்லப் பிராணி. பெரும்பாலான கிராமங்கள் மற்றும் நகரங்களில் பூனைகளை வளர்த்து வந்தாலும், பூனையைக் கண்டால் ஆகாது; பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை என்னும் மூட நம்பிக்கை உள்ளது.

இது முற்றிலும் தவறு. இது, புலியினத்தைச் சார்ந்தது. இதை, தெய்விகத் தன்மையுள்ள உயிரினமாகச் சீன மக்கள் கருதுகிறார்கள். பாம்பு, பல்லி, பூரான் போன்ற விஷ உயிர்களைக் கொன்று நம்மைப் பாதுகாக்கும்.

பூனைகளுக்குப் போதுமான உணவை வழங்கும் போது, அவை விளையாடி மகிழ்வதைக் காணும் போது, நமக்கு மன அழுத்தம் குறைந்து மன அமைதி ஏற்படுகிறது.

ஒவ்வொரு விதமான பூனைக்கும் ஒவ்வொரு விதமான அதிர்ஷ்டம் உள்ளதாகச் சீன மக்கள் நம்புகிறார்கள்.

பெரிய வணிக நிறுவனங்களில் கூட, கையைத் தூக்கி வாழ்த்தும் பூனைப் பொம்மைகளை வைத்து உள்ளனர்.

பல வண்ண பூனையைக் கண்டால் அதிர்ஷ்டம் எனவும், வெள்ளைப் பூனையைக் கண்டால் மகிழ்ச்சியும், நேர்மறை எண்ணமும் தோன்றும் என்றும்,

சிவப்புக் கோடுகள் உள்ள பூனையைக் கண்டால், குடும்பத்தில் ஒற்றுமை தழைக்கும் என்றும், தங்க நிறக் கோடுகள் உள்ள பூனையைக் கண்டால் செல்வம் பெருகும் எனவும்,

பச்சை நிறக் கண்களை உடைய பூனையைக் கண்டால் உடல் நலம் பெருகும் எனவும், கறுப்பு நிறப் பூனையைக் கண்டால், நம்மிடம் உள்ள தீய குணங்கள் மறையும் எனவும் சீன மக்கள் நம்புகிறார்கள்.

பூனையைக் காண்பதே அதிர்ஷ்டம் தான். மேலும், பூனை குறுக்கே சென்றால் இரட்டை இலாபம் அடையலாம்.

எனவே, குழந்தையைப் போலப் பழகும் பூனையை வெறுக்காமல் ஆதரவு தரலாம். அதை அன்புமிகு உயிராக நினைத்து அதற்கு வேண்டிய உணவை வழங்கலாம்.

பூனையைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். இந்த நான்கு கால் ஜீவன் மனிதனிடம் கேட்பது, அன்பை, ஆதரவை மட்டுமே.

எனவே, இனிமேலாவது மூட நம்பிக்கையைத் தள்ளி விட்டு, இந்த வாயில்லா ஜீவன் மீது அன்பைப் பொழிவோம்.


முனைவர் கோ.கலைச்செல்வி, உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

தொடர்புடையவை!